சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

ஸ்ட்ரீம் பாய்

டைம் டிராவல் சாத்தியமா? 1984-ல் கிளம்பிய JL50 விமானம் 2019-ல் மேற்கு வங்கத்தில் வந்து நொறுங்குகிறது. ஆம், 35 வருடங்களுக்கு முன் புறப்பட்ட ஒரு விமானம், நிகழ்காலத்தை வந்தடைகிறது.
OTT கார்னர்!

விபத்தினால் அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட, விமானத்தை இயக்கிய பெண் பைலட்டும் அதில் பயணித்த பயணி ஒருவரும் காயங்களுடன் உயிர்தப்புகிறார்கள். 35 வருடங்கள் கடந்ததை அவர்கள் நம்பவே முடியாத நிலையில் இருக்க, இந்த வழக்கைக் கையில் எடுக்கும் சிபிஐ அதிகாரியான அபய் தியோலும் (‘ஹீரோ’ வில்லன்) இதை நம்ப மறுக்கிறார். இது தீவிரவாதிகள் நடத்தும் நாடகம் என்று நிரூபிக்க முயல்கிறார். ஆனால், உண்மை என்ன, சுவாரஸ்யமான ஒன்லைன் வைத்துக்கொண்டு ஒரு பரபர த்ரில்லராக, நான்கே எபிசோடுகளில் அதுவும் வெறும் 2 மணி நேரத்தில் குழப்பாமல் ஒரு டைம் டிராவல் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை’ என சீரியஸ் காமெடி பண்ணும் இடம், பட்ஜெட் இல்லை என்பதை ஓப்பனாகப் போட்டுடைக்கும் சுமார் ரக கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றை மறந்தால், இந்த JL50-ல் நாமும் ஒரு ரைடு போகலாம்.

OTT கார்னர்!

`நம்ம எல்லோருக்குள்ளேயும் ஒரு சூப்பர்ஹீரோ தூங்கிட்டிருக்கான். அவனைத் தட்டி எழுப்புங்க’ என்னும் ஒன்லைன் கொண்ட ஸ்பானிஷ் மொழிப் படம்தான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘அன்னோன் ஆரிஜின்ஸ்.’ சோம்பலான காவல் துறை அதிகாரிக்கு ஒரு சீரியல் கில்லரின் அறிமுகம் கிடைக்கிறது.எல்லாக் கொலைகளிலும் காமிக்ஸை முதன்மைப்படுத்திக் கொல்லும் ஒரு வித்தியாசமான கொலையாளி. யார் இவர்; ஏன் இப்படிச் செய்கிறார் என விரிகிறது மீதிக்கதை. காமிக்ஸ் வெறி ஊறிப்போன டேவிட் கலான் கெலிண்டொ இதை நாவலாக எழுதி, தானே இயக்கி படமாகவும் வெளியிட்டிருக்கிறார். படமாக்கலில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். படத்தில் வரும் புதிர்கள் காமிக்ஸ், மார்வெல், டிசி சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.

OTT கார்னர்!

ரண்டாம் உலகப்போரில் மிகவும் சவாலான மோதலாகப் பார்க்கப்படுவது ‘Battle of the Atlantic.’ 1939 தொடங்கி 1945-ல் ஹிட்லரின் நாஜிப் படை சரணடையும் வரை ஜெர்மனியுடன் அட்லாண்டிக் கடலில் சண்டையிட்டன அமெரிக்கா-கனடா-இங்கிலாந்து கடற்படைகள். இந்த மோதலில் ஒரு முக்கிய சம்பவத்தை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ‘கிரே-ஹவுண்ட்’ (GreyHound). 1942-ல் போரில் ஜெர்மனி கை ஓங்கியிருக்கும் நேரத்தில் பொருள்களையும் வீரர்களையும் 37 கப்பல்களில் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கிறது அமெரிக்கா. குறிப்பிட்ட தூரம் வரை இந்தக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக அமெரிக்க விமானப்படையும் உடன் பறக்கிறது. அதன்பிறகு இந்தப் பொறுப்பை பிரிட்டன் விமானப்படை எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த மாற்றத்திற்கு இடைப்பட்ட 50 மணிநேரத்தில் இந்தக் கப்பல்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது ஒரே ஒரு போர்க்கப்பல். அது USS keeling, இதை ‘கிரே-ஹவுண்ட்’ என அழைக்கின்றனர். இந்தக் கப்பலின் தளபதி எர்னஸ்ட் க்ராஸ். மூத்த அதிகாரி என்றாலும் இவருக்குப் போர் அனுபவம் கிடையாது. இந்த நேரத்தில் அருகில் ஒரு ஜெர்மன் நீர்முழ்கிக்கப்பல் இருப்பது தெரியவர, என்ன நடக்கிறது என்பதுதான் கதை. போர்ப்படங்களில் நடித்தே பிரபலமான டாம் ஹேங்ஸ் கப்பல் தளபதியாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியதும் அவர்தான்.

OTT கார்னர்!

ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘பென்குயின்ஸ் டாக்குமென்ட்ரி’ ஸ்டீவ் என்னும் அடெலி பென்குயின் எப்படித் தனக்கான இணையைத் தேடுகிறது, குட்டிகளுக்காக உணவை எடுத்து வருகிறது என்பதைச் சொல்கிறது. வசந்த காலத்தில் ஆரம்பிக்கும் அதன் இணைக்கான தேடல், சரியான சூழலை உருவாக்குவது, குட்டிகளைப் பராமரிப்பது, பின் பிரிந்து அடுத்த வசந்தகாலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது என முடிகிறது. தவறுதலாக வீட்டு ஏசியை 20ல் வைத்துவிட்டாலே நமக்கெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். ஆனால் அண்டார்ட்டிகாவில் -10 முதல் -60 வரை வானிலை மாறும். அத்தகைய சூழலில் இந்த ஆவணப்படத்தை எப்படி எடுத்தனர் என்பதை விளக்குகிறது penguins life on the edge டாக்குமென்ட்ரி. இரண்டுமே ஆச்சர்யங்கள் நிறைந்தவை.