பிரீமியம் ஸ்டோரி
ஒரு மணப்பெண்ணின் சமையலறை அடிமைத்தனங்களைப் பற்றிப் பேசுகிறது மலையாள சினிமாவான The Great Indian Kitchen.

சாப்பிடும்போது மேஜையில் வைக்கப்படும் முருங்கைச் சக்கைகள், எச்சில் தட்டுகள் என நாம் தினமும் பார்த்தும், அதிலென்ன எனக் கடந்துபோகும் விஷயத்தின் பின்னிருக்கும் அழுக்கையும் ஆணாதிக்கத்தையும் போட்டு உடைத்திருக்கிறது இந்த சினிமா. கேரளத்தின் பாரம்பர்யமிக்க குடும்பத்துக்கு வாக்கப்படுகிறார் ஒரு பெண். மரபு என்ற பெயரால் நடைபெறும் அடிமைத்தனத்தையும் பிற்போக்கையும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அக்குடும்பம் நமக்கு உணர்த்துகிறது. வடித்த சோறு, அம்மிக்கல் சட்னி, கையால் அலசப்படும் துணிகள் எனப் பெண் அடிமைத்தனத்தின் மற்றுமொரு அங்கத்தையும் படம் பேசத் தவறவில்லை. இந்தச் சமூகம் கடைப்பிடித்து வைத்திருக்கும் போலி சடங்குகள் உடையாமல் பார்த்துக்கொள்வதி்ல் இங்கிருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம பங்கு உண்டு. வேறொரு குடும்பத்துக்குச் செல்வதாலேயே ஒரு பெண், தன் உணவுகளில், சாப்பிடும் பழக்க வழக்கங்களில், தன் சிந்தனைகளில் எத்தனை விஷயங்களை அனுசரித்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படத்தில் பார்த்த சுராஜும், நிமிஷா சஜாயனும்தான் இதிலும் தம்பதிகளாக நடித்திருக்கின்றனர். ‘சோழா’ திரைப்படத்தில் டீன் ஏஜ் பெண்ணாக மிரட்டிய நிமிஷாவுக்கு இதில் இன்னும் கனமான வேடம். ஆற்றங்கரையில் எறியப்படும் ஒவ்வொரு கல்லும், ஒரு நாள் ஒட்டுமொத்தமாய் மீண்டும் கரையிலிருக்கும் மனிதனின் மேல் பாறையாய் வந்து விழுந்தால் அந்த ரணம் எப்படியிருக்கும் என்பதற்கான சான்றாய் நிமிஷா நடித்திருக்கும் படத்தின் இறுதிக் காட்சிகள் வலி மிகுந்தவையாக இருக்கின்றன. ஆணுக்கு அன்றைய நாளை மேலும் அழகாக்கும் `செக்ஸ்’, வீட்டில் 24 மணி நேரமும் வேலை பார்க்கும் பெண்ணுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்பதை உணர்த்தும் காட்சியில் நிமிஷா சஜாயனின் நடிப்பு அதி அற்புதம்.

படம் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும் குற்றவுணர்வைத் தூண்டும் காட்சிகள் ஏராளம். கேரளப் பாரம்பர்யக்குடும்பங்களில் புரையோடிப்போன இறுக்கத்திலிருந்து சமுதாயம் கொஞ்சம் நகர்ந்துவந்துவிட்டது என்பதுதான் ஆறுதல். நாம் முன்னகர்ந்து விட்டதாலேயே படத்தில் வரும் அக்காட்சிகள் சற்று மிகைப்படுத்தலாய்த் தோன்றலாம். ஆனால், மாதவிடாய் நாள்களை நிம்மதியாய்க் கருதும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு இன்னும் துயரங்கள் நடக்கும் ஒரு சூழலில் எதுவும் மிகைப்படுத்தல் அல்ல. இப்படியான கதைத் தளத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜியோ பேபிக்கு வாழ்த்துகள். NeeStream என மலையாள சினிமாக்களுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இப்படத்தினைக் காண முடியும்.

நாம் அனைவரும் பார்த்தும், திருத்திக்கொள்ளவும் வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது The Great Indian Kitchen.

தாண்டவ்

நா
டாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இரவு ஆளுங்கட்சியின் தற்போதைய பிரதமர், அவரின் மகனான சயிஃப் அலிகானின் (சமர் பிரதாப் சிங்) பதவி ஆசையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் வெளியே கசிய, பிரதமர் பதவியை அடைய கட்சியின் மூத்த உறுப்பினர் டிம்பிள் கபாடியா (அனுராதா கிஷோர்) சயிஃப் அலிகானை பிளாக்மெயில் செய்கிறார். அதே சமயம் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் (VNU) மாணவர் சங்கத் தேர்தலில் நிகழும் பல்வேறு குளறுபடிகளும் துரோகங்களும் அங்கு ஒரு மக்கள் தலைவனை உருவாக்குகிறது. பதவிக்கான இந்த அரசியல் ஆட்டத்தில் யாரெல்லாம் பாதிப்படைகிறார்கள், யாரெல்லாம் லாபம் பார்க்கிறார்கள் என்பதை ஒரு த்ரில்லர் கதையாக விவரிக்கிறது ‘தாண்டவ்’.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

சுனில் க்ரோவர், முகமத் ஸீஷான் அய்யுப், சீனியர் குமுத் மிஸ்ரா, டிம்பிள் கபாடியா, சயிஃப் அலிகான் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். சமகாலப் பிரச்னைகள் சொல்லப்பட்டிருந்தாலும் வெறும் த்ரில்லர் பாணி கதையாக மட்டுமே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சறுக்கல். ‘ஆர்ட்டிகள் 15’ படத்துக்குக் கதை எழுதிய கௌரவ் சொலாங்கியின் கதை என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தால் வழக்கமான பாலிவுட் பாணி மசாலாவாக மட்டுமே சிரீஸ் நகர்வது ஏமாற்றம்! சமீபத்தில் இந்துக் கடவுள்களை அவமதித்ததாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து, படக்குழு மன்னிப்பு கேட்டதோடு, சில காட்சி மாற்றங்களுக்கும் இசைந்திருக்கிறது. சராசரியாக 30 நிமிடங்கள் ஓடும் 9 எபிசோடுகள் கொண்ட தொடர், அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் போன்ற காரணங்களுக்காக மட்டுமே இதை ஸ்ட்ரீம் செய்யலாம்.

த்ரிபங்கா

ரு குடும்பத்தின் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், வாழ்க்கையை அணுகும் விதத்தைக் குறித்து விவரிக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘த்ரிபங்கா’ திரைப்படம். ‘த்ரிபங்கா’ என்பது ஒடிசி நடனத்தில் உள்ள முழுமையற்ற, அதேநேரம் அழகான ஓர் அடவு.

சினிமா விகடன் : OTT கார்னர்
சினிமா விகடன் : OTT கார்னர்

எழுத்தாளராக குடும்பத்தில் நீடிக்கமுடியாத நிலையில் கணவனை விட்டுப்பிரிந்து இரண்டாவது திருமணம் அதன்பின் ஒரு லிவிங் டுகெதர் என்கிற வாழ்க்கை நயன்தாராவுடையது. அம்மாவின் இரண்டாவது கணவரால் பாலியல் வன்முறையைச் சந்தித்து அம்மாவை வெறுக்கும், லிவிங் டுகெதர் வாழ்க்கையிலும் ஏமாற்றத்தைச் சந்திக்கும் வாழ்க்கை அனுவுடையது. தன் அம்மா, பாட்டி வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி ஒரு சராசரிப் பெண்ணாக வாழும் வாழ்க்கை மாஸாவுடையது. மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் எந்தத் தருணத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் படம் சொல்கிறது.

கதை தனித்துவமானது என்றாலும் உருவாக்கப்பட்ட விதம் டி.வி சீரியலைப்போல் இருப்பது பலவீனம். இசையும் கதைக்கு வலிமை சேர்க்கவில்லை. நயன்தாராவாக தான்வி ஆஷ்மி, அனுவாக கஜோல், மாஸாவாக மிதிலா பால்கர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு