Picasso
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், சிறப்பு அங்கீகாரம் பெற்ற படங்கள் பட்டியலில் உள்ள மராத்திப் படம். நாடகத்தை நேசிக்கும் சிற்பக்கலையைப் போற்றும் ஏழை அப்பா.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய அளவிலான ஓவியப்போட்டிக்குத் தகுதி பெறும் மகனுக்கு நுழைவுக்கட்டணம் கட்டப் பணமில்லை. அதை நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அப்பாவிடம் ஒரு இடைவெளியில் சொல்கிறான். தன் நிலையை நினைத்துக் கலங்கும் தந்தை அந்த இரவு ஆடும் நாட்டிய நாடகமே கதை. 75 நிமிடங்களே மொத்த நீளம். இதனால் ஆர்ட் பிலிமுக்குண்டான சாயல் இல்லாமல் சட்டென நகர்ந்து இறுதிக்கட்டத்தை அடைந்துவிடுகிறது. இசையை, நாடகத்தை. அதன் வழியே பரவும் இறுக்கத்தை விரும்புபவர்கள் தாராளமாய் ‘பிக்காஸோ’வை தரிசனம் செய்யலாம்.
The Block Island Sound


அமெரிக்காவின் பிளாக் தீவில் அமானுஷ்யமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. வானிலிருந்து பறவைகள் இறந்து விழுகின்றன. அந்தத் தீவில் மீனவராக இருக்கும் டாம், இந்த நிகழ்வுகளால் குழம்பிப்போகிறார். அவரின் சகோதரி ஆட்ரி அங்கிருக்கும் மற்றொரு முதன்மைத் தீவில் சூழலியல் பாதுகாப்பு அதிகாரி. இந்த நிகழ்வு குறித்து அவர் விசாரிக்க வர, அப்போது இவர்களின் தந்தையும் மர்மமான முறையில் இறந்துவிட, அடுத்தடுத்த நிகழ்வுகள் அங்கே மனிதனுக்கு மீறிய சக்தி ஒன்றிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றன. எதற்காக இவையெல்லாம் நடக்கின்றன என்பதற்கான விடையைச் சில பல குழப்பங்களுக்குப் பிறகு புரியவைக்கிறது படம். இரவுக் காட்சிகள், அமானுஷ்ய சத்தங்கள் என மேக்கிங்காகப் பல இடங்களில் பல காட்சிகள் நம்மைச் சில்லிட வைக்கின்றன. அளவான, ஆழமான கதாபாத்திரங்கள், முதல் காட்சியிலிருந்தே கதையைத் தொடங்கியிருப்பது என நிறைய ப்ளஸ்கள் இருக்கின்றன. இவற்றுக்காக இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.
Saajan Bakery Since 1962


நகைச்சுவைப் படங்கள் அதிகம் வெளியாகும் மல்லுவுட்டிலிருந்து மேலும் ஒரு படம். பத்தனம்திட்டாவின் ரண்ணி எனும் ஊரில் உள்ளூர்வாசிகளின் ஃபேவரைட் இடமாய் இரண்டு தலைமுறைகளாய் இருப்பது ‘சாஜன் பேக்கரி’. சாஜனின் மகளும் மகனும் இப்போது அதைப் பார்த்துக்கொள்ள, அவர்களுக்கு உதவியாய் இருக்கிறார் அவர்களின் மாமா. கணவரை விட்டுப் பிரிந்துவந்துவிட்ட அக்கா, விட்டேத்தியாய்த் திரியும் தம்பி, இரண்டு பேரையும் வைத்துப் போராடும் மாமா என இவர்கள் மூவருக்குள் நடக்கும் ஜாலிக் காட்சிகளே கதை. லேனா, அஜு வர்கீஸ் இருவரின் நடிப்பும் படத்தின் பலம். அளவான கதாபாத்திரங்கள் என்பதால் தொடக்க சுவாரசியம் தேய்ந்து ஒருகட்டத்தில் கதை லூப்பில் ஓடுவது போன்ற பிரமை. அதனாலேயே இரண்டேகால் மணிநேர சினிமா மிக நீளமாய்த் தோன்றுகிறது. ஆனாலும் கேர்ஃப்ரீ மலையாள சினிமா டெம்ப்ளேட்டில் ஒரு படம் பார்க்க விரும்புவர்கள் வீக்கெண்டில் ஒருமுறை பார்க்கலாம்.
Invisible City


நாம் வாழும் இந்த உலகத்திற்குள் நம்மைப் போன்ற உருவில் நம்பமுடியாத உயிரினங்கள் பல உலவிக்கொண்டிருந்தால்... அவர்கள் ஒரு கட்டமைப்பாக ஒரு கூட்டமாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்தால்... எப்படியிருக்கும்? இதுதான் இந்த பிரேசில் சீரிஸின் ஒன்லைன். சூழலியல் காவல் அதிகாரியான எரிக் தன் மனைவியின் மரணத்தை விசாரிக்க ஆரம்பிக்க அதிலிருந்து அதே பாணியில் நிகழும் மரணங்கள் அவரை ஒரு குழப்பச் சுழலில் சிக்க வைக்கின்றன. நம்ப முடியாத நிகழ்வுகள், எதிர்பாராத ட்விஸ்ட்கள், அதில் எரிக்கின் மகளுக்கு என்ன தொடர்பு, எரிக் உண்மையில் யார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது இந்தத் தொடர். ஸ்லோபேர்ன் ஃபேன்டஸி த்ரில்லர் வகையிலான தொடர், 7 எபிஸோடுகளாக விரிகிறது. திரைக்கதை சற்றே மெதுவாக நகர்ந்தாலும், அடுத்தடுத்த திருப்பங்கள், மாயாஜாலங்கள், ட்விஸ்ட்கள் போன்றவற்றை வைத்து நம்மைக் கட்டிப்போடுகிறார்கள். கதை நடப்பது காடும் காடு சார்ந்த இடமும் என்பதால் ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது இந்த சீரிஸ். ஃபேன்டஸி த்ரில்லர் விரும்பிகள் தாராளமாக இதை க்ளிக் செய்யலாம். ஆங்கில டப்பிங்கில் சப்டைட்டிலுடன் ஸ்ட்ரீம் செய்யலாம்.