நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் ஆர்வமுடையவர். அதுமட்டுமல்லாது நீர் சாகச விளையாட்டுகளில் பங்குபெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் 2018-ல் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார். அதன் பின் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்றார். இவ்வாறு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் எனும் பகுதியில் நடைபெற்ற 'டேனிஷ் ஓபன் 2022 (Danish Open 2022 in Copenhagen)' நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
அப்போது பேசிய வேதாந்த், தான் தனது அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை என்றும் தனக்கென்று தனிப் பெயரை சம்பாதிக்க விரும்புகிறேன். மாதவன் மகனாக மட்டுமே இருக்க தான் விரும்பவில்லை என்றும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். மேலும், தன் மகனின் கனவுகளை நிறைவேற்ற பெரிய அளவிலான நீச்சல் குளங்களில் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காக நடிகர் மாதவன் தனது மகன் மற்றும் மனைவி சரிதாவுடன் மும்பையிலிருந்து துபாய்க்கு குடிபெயர்ந்தனர்.
இது பற்றிக் கூறிய வேதாந்த், "அவர்கள் எப்போதும் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள். என் பெற்றோர் எனக்காக பல தியாகங்கள் செய்துள்ளனர். அதில் முக்கியாயமானது எனக்காக அவர்கள் மும்பையிலிருந்த்து துபாய்க்குக் குடிபெயர்ந்தது." என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.
