Published:Updated:

``வாழ்க்கைல அவ்வளவு கனவுகளோடு இருந்த பொண்ணு சிந்துஜா!" - தோழி ரதி ராதிகா

சிந்துஜா - அருண் ராஜா காமராஜ்
சிந்துஜா - அருண் ராஜா காமராஜ்

``கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து நேரில் பார்த்துக்க முடியல. அடிக்கடி போனில் பேசிப்போம். கடந்த 15 நாளா சிந்துஜாகிட்ட இருந்து எந்த போன் காலும் வரல."

கபாலி திரைப்படத்தின் `நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் ' தொடங்கி மாஸ்டர் திரைப்படத்தின் `குட்டி ஸ்டோரி' பாடல் வரை ஹிட் பாடல்கள் பலவற்றை எழுதியவர் அருண் ராஜா காமராஜ். `மான் கராத்தே' உட்பட நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான `கனா' திரைப்படத்தின் இயக்குநர். கனா திரைப்படம் வெற்றி பெறவே, தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து `ஆர்டிக்கிள் 15' என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார்.

அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா அழகுக்கலை துறையில் இன்ஸ்டிரக்டர் ஆகச் செயல்பட்டு வந்தவர்.

சிந்துஜா
சிந்துஜா

கொரோனா தொற்று ஏற்பட்டு அருண் ராஜா காமராஜ் மற்றும் அவரின் மனைவி சிந்துஜா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சிந்துஜா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

சிந்துஜாவின் தோழியும், அழகுக்கலை நிபுணருமான ரதி ராதிகாவிடம் இது குறித்து பேசினோம். ``கனா திரைப்படத்தின் தோற்றம் மற்றும் ஸ்டைலிஸ்ட்டாக நான் பணியாற்றினேன். அருண்ராஜா காமராஜ்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் அவரின் மனைவி சிந்துஜா எனக்கு அறிமுகம் ஆனாங்க. நிறைய போட்டோஷூட்களைச் சேர்ந்து பண்ணிருக்கோம். ரொம்ப பாசிட்டிவ்வான பொண்ணு. எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாங்க. அருணுக்காக சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவாங்க. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து நேரில் பார்த்துக்க முடியல. அடிக்கடி போனில் பேசிப்போம். கடந்த 15 நாளா சிந்துஜாகிட்ட இருந்து எந்த போன் காலும் வரல. 

அழகுக்கலை நிபுணர் ரதி ராதிகாவுடன் சிந்துஜா
அழகுக்கலை நிபுணர் ரதி ராதிகாவுடன் சிந்துஜா

சில நாள்களுக்கு முன் நான் மெசேஜ் அனுப்பியிருந்தேன்; அதுக்கும் ரிப்ளை பண்ணல. போனையும் எடுக்கல. சரி பிஸியா இருப்பாங்கனு நானும் விட்டுட்டேன். நேத்து ராத்திரி எட்டு மணிக்கு போன் பண்ணேன். ஃபுல் ரிங் ஆகி கட் ஆச்சு. அதுவே மனசுக்கு கொஞ்சம் நெருடலாதான் இருந்துச்சு. ராத்திரி 11 மணிக்கு சிந்துஜா இறந்துட்டாங்கனு அதிர்ச்சியான தகவல் வந்துச்சு. செய்தியை நம்பக்கூட முடியாம உடைஞ்சு போயி உட்கார்ந்துட்டேன். சிந்துஜா இப்ப நம்ம கூட இல்லைனு கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியல. அருண்கிட்ட பேசினேன். ரொம்ப உடைஞ்சு போயிருக்கார். வாழ்க்கையில் அடுத்தடுத்த இடத்துக்குப் போகணும்னு நிறைய கனவுகளோடு வாழ்ந்த பொண்ணை இன்னைக்கு கொரோனாவுக்கு காவு கொடுத்துட்டு நிக்கறோம்..!" என்று குரல் உடைந்து அமைதியாகிறார் ரதி.

அடுத்த கட்டுரைக்கு