Published:Updated:

` சுர்ஜித்தை அரவணைக்கத் தவறிய சூழல், வேதனைக்குரியது!' - நடிகர் ராகவா லாரன்ஸ்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீண்டும் வருவான் என புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சுர்ஜித் இறுதி அஞ்சலி
சுர்ஜித் இறுதி அஞ்சலி

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் தன் வீட்டுக்கு உள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:40 மணியளவில் தவறி விழுந்தான் சிறுவன் சுர்ஜித். அவனை மீட்கக் கடந்த 4 நாள்களாகத் தொடர் முயற்சி நடைபெற்று வந்தநிலையில், குழந்தை இறந்துவிட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

சுர்ஜித்
சுர்ஜித்

அதன்பிறகு இறந்த குழந்தையின் உடலை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, காலை 8 மணியளவில் சுர்ஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திரண்டு குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

` 36 அடி ஆழத்தில் இருந்தபோதே மீட்டிருக்க முடியும்!' - சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த பிறகு அவனை மீட்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் போராடினர். அதே நேரத்தில் சாதாரண பொதுமக்களும் குழந்தையை மீட்க தங்களால் முடிந்த அளவு பல்வேறு யோசனைகளை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சுர்ஜித் இறந்த பிறகும் அவனை இப்படியும் மீட்டெடுக்கலாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் யோசனை ஒன்றைக் கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``சுர்ஜித் மீண்டும் வருவான், அவனது பெற்றோருக்கு எனது வேண்டுகோள். குழந்தை சுர்ஜித் மரணத்தால் இன்று அக்டோபர் 29-ம் தேதி எனது பிறந்தநாளைக் கொண்டாட மனம் வரவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கிவிட்டுச் சென்றுவிட்டான் சுர்ஜித்.

அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்த நிலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது, `சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதுபோல இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்தப் பிள்ளைக்கு சுர்ஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அதன்மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மாவும் சாந்தியடையும். சுர்ஜித்தும் தங்களுடனேயே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.