ரஜினிகாந்துக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்த தீவிரமான ரசிகர் ரஜினி முத்து என்று அழைக்கப்பட்ட ஏ.பி.முத்துமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல மதுரை மக்களையும் சோகமாக்கியுள்ளது.

அரசியல் தலைவர்களோ, திரைக்கலைஞர்களோ, விளையாட்டு வீரர்களோ அவர்களுக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் தொடங்குபவர்கள் பெரும்பாலும் மதுரைக்காரர்கள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்தளவு அரசியல், கலை, இலக்கியம், திரைப்பட ரசனையில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனால்தான் சென்னைக்கு முன்பே நாடக நடிகர் சங்கம் மதுரையில் உருவாக்கப்பட்டது. மன்னர் காலத்தில் தமிழ் வளர்க்க சங்கம் தொடங்கிய ஊரில் தங்கள் அபிமான நாயகர்கள்மீது அளப்பரிய பாசம் வைப்பதால் அதன் வெளிப்பாடாக மன்றங்களை உருவாக்கினார்கள்.

மதுரை மக்களின் ரசனையைத் தெரிந்து கொண்டதால்தான் புதிதாக கட்சி தொடங்குவோர் மதுரையைத் தேர்வு செய்வார்கள். மாநாடு என்றாலும் மதுரைதான். அதுபோல் திரைப்படங்கள் ஹிட் அடிக்குமா என்பதை மதுரை ரசிகர்களை வைத்தே கோடம்பாக்கத்தினர் கணிப்பார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த வகையில்தான் அறிமுக நடிகர், நடிகைகள், வில்லன், காமெடி நடிகர்கள், துணை நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களுக்கும்...இவ்வளவு ஏன்? அர்னால்ட், சில்வர் ஸ்டாலன், ஜாக்கி சானுக்கும் மதுரையில் ரசிகர் மன்றம் உண்டு. முந்தானை முடிச்சு படம் வந்தபோது அதில் நடித்த தவக்களை என்ற சிறு நடிகருக்கும் மன்றம் ஆரம்பித்தார்கள்.

அப்படித்தான் ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் வந்தபோது 'கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' என்ற பெயரில் தன் 18 வயதில் முதல் ரசிகர் மன்றத்தை ஏ.பி.முத்துமணி மதுரையில் தொடங்கினார். அதன் பிறகுதான் பல ஊர்களிலும் ரசிகர் மன்றங்கள் பெருகின.
தன் முதல் ரசிகர் மன்றம் என்பதால் ரஜினிக்கு மிகவும் பிடித்தவாரானார் முத்து. அப்போதெல்லாம் சென்னை சென்றால் ரஜினி வீட்டுக்குள் தடையில்லாமல் சென்று வரும் நபராக முத்துமணி இருந்துள்ளார்.

பெற்றோரை சிறு வயதிலயே இழந்து விட்டதால் இவரின் திருமணம் ரஜினிகாந்த் வீட்டிலுள்ள பூஜை அறை முன்புதான் நடைபெற்றது. தாலி உட்பட சீர்வரிசை பொருள்களை ரஜினி கொடுத்து அனுப்பினார். அந்த்தளவுக்கு ரஜினியுடன் நெருக்கமாக இருந்தாலும், ரஜினியிடம் எந்த உதவியும் கேட்காதவர்.
ரஜினியுடன் நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்கு இருந்த நிலையில், கால மாற்றத்தில் இவருக்கு பின்னால் மன்றத்துக்கு வந்தவர்கள், பெரும்பாலானோர் மேலே செல்ல செல்ல, உள்ளடி அரசியல் பிடிக்காமல் ரஜினி படங்களை மட்டும் பார்த்துவிட்டு ஆரப்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 2020-ல் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியபோது முத்துமணியும் அதனால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சையிலிருந்தார். இத்தகவல் ரஜினிக்கு தெரிந்து உடனே முத்துமணியுடன் போனில் உரையாடியவர் "உடம்பை பாத்துக்கோங்க, சீக்கிரம் நலமாயிடுவீங்க" என்று பேசி முத்துமணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் மீண்டும் உடல்நலம் குன்றி சிகிச்சை எடுத்து வந்தவர், இன்று திடீரென்று மரணமடைந்தார். இத்தகவல் தற்போது பரவி தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்ளை கவலை கொள்ள வைத்துள்ளது.

இவருக்காகத்தான் "முத்துமணிச்சுடரே வா.." என்ற பாடலை ரஜினி எழுத வைத்தாகவும், தன் படத்துக்கு முத்து என்று பெயர் சூட்டியதாகவும் மதுரை ரஜினி ரசிகர்கள் சொல்கிறார்கள் .