Published:Updated:

`ரஜினிக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை; மீண்டும் சம்மன் அனுப்பப்படும்!'- ஒருநபர் ஆணையம் விளக்கம்

ரஜினி
ரஜினி

``நடிகர் ரஜினிகாந்த்துக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலும், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை ஆணையத்தின் முன்பாக ஆஜராக வேண்டும்” என ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிவிசாரணை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 18-வது கட்ட விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், 19-வது கட்ட விசாரணை நேற்று (24-ம் தேதி) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட 31 பேருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

விசாரணை ஆணைய முகாம் அலுவலகம்
விசாரணை ஆணைய முகாம் அலுவலகம்

இதில், இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், `தனக்கு படப்பிடிப்பு பணிகள் இருப்பதாலும், தான் தூத்துக்குடி வந்தால் தன்னைக் காண அதிகப்படியான ரசிகர்கள் திரள்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஒரு நபர் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகி, ரஜினிகாந்த்தின் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தார். அதைப் பரிசீலனை செய்த நீதிபதி அருணா ஜெகதீசன், துப்பாக்கிச்சூடு தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துபூர்வமான பதில் மனுவை ரஜினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளம்பாரதியிடம் மூடிய சீலிட்ட கவரில் வழங்கினார். இதைத் தொடர்ந்து ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ரஜினி தரப்பு வழக்கறிஞர் - இளம்பாரதி
ரஜினி தரப்பு வழக்கறிஞர் - இளம்பாரதி

அப்போது பேசிய அவர், ``நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் விலக்குகோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. `தான் நேரில் வந்து ஆஜராவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்’ என்றும், `தொழில்முறை ரீதியாக வேலை இருப்பதால் இன்று நேரில் ஆஜராக முடியாது’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில், முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. விசாரணை தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எந்தமாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பது தொடர்பான விளக்கத்தை எழுத்துபூர்வ ஆவணக் குறியீடாக தாக்கல் செய்ய மனு அளித்துள்ளோம். அதே மனுவில் அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராவதற்கான தேதி மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். விசாரணைக்கு அவர் ஆஜராவதிலிருந்து முழுவதுமாக விலக்களிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது.

அருள் வடிவேல் சேகர் - ஆணையத்தின் வழக்கறிஞர்
அருள் வடிவேல் சேகர் - ஆணையத்தின் வழக்கறிஞர்

மீண்டும் வேறொரு நாளில் அவர் நேரில் ஆஜராகிட சம்மன் அனுப்பப்படும். கடந்த 4-ம் தேதி அவர் சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிக்கையில், ``ஒரு நபர் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என கூறியுள்ளார். எனவே, அவர் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம்” என்றார்.

இந்த நிலையில், ``போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா? ரசிகர்கள் கூடினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றால் உங்கள் ரசிகர்கள் யார்?” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வந்த முகிலன்,

முகிலன்
முகிலன்

``ரஜினி என்ன முதல்வரைவிட பெரிய பிரமுகரா? முதல்வருக்கே முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையில், அவருக்கு காவல்துறையால் பாதுகாப்பு அளிக்க முடியாதா? இந்த ஜென்மத்தில் ஆணையத்தின் முன்பாக அவர் ஆஜராக மாட்டார். உண்மையைச் சொல்லப் பயப்படுகிறார் ரஜினி. அரசு அமைத்துள்ள பல்வேறு விசாரணைக்கான ஆணையத்தில் ரஜினி, ஓ.பி.எஸ், குருமூர்த்தி போன்றோர் ஆஜராக வருவதில்லை. சமானிய மக்கள் மட்டுமே ஆணையத்தை மதிக்கிறார்கள். இவர்கள் யாரும் ஆணையத்தை மதிப்பதில்லை. இதிலிருந்து விசாரணை ஆணையத்தின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு