சினிமா
Published:Updated:

பீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு!

ரஞ்சன் ராமநாயக்கே
பிரீமியம் ஸ்டோரி
News
ரஞ்சன் ராமநாயக்கே

டைமிங் மிஸ்ஸானாலும் பரவாயில்லை என மொத்தப் படத்தையுமே எடிட்டிங்கில் கட் பண்ணாமல் விட்டிருக்கிறார்கள்

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை யார் மனதையும் புண்படுத்த அல்ல; பண்படுத்தவே! ஒரு தமிழ் சினிமா பார்வையாளனாய் கெத்து மொமன்ட்டைப் பதிவு செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!

சிலநாள்களுக்கு முன் உச்சிவெயில் உளி கொண்டு அடித்த மட்ட மத்தியானத்தில் ‘One Shot’ படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஏதோ போஜ்புரி சினிமாவின் ஸ்பூப் வீடியோ என நினைத்துக்கொண்டு ஆரம்பத்தில் ஆர்வத்தோடு பார்க்க உட்கார்ந்தேன். போகப்போக உக்கிரமாகக் காட்சிகள் போய்க்கொண்டிருக்க... படத்தை நிறுத்திவிட்டு கூகுளில் தேடினேன். ‘ஆத்தீ... போகக்கூடாத இடத்துக்குப் போயி பார்க்கக்கூடாத சினிமாவைப் பார்த்துட்டேனே!’ என நினைத்துக்கொண்டேன்.

ரஞ்சன் ராமநாயக்கே
ரஞ்சன் ராமநாயக்கே

சிங்கள சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்கேவின் அதிரிபுதிரி ஹிட் படமாம் இந்த One Shot!

சூடம் ஏத்தி சத்தியம் செய்யலாம், ‘இதெல்லாம் ரீமேக் இல்லை, ஸ்பூப் வீடியோதான்’ என்று. அந்த அளவுக்குப் படம் தர லோக்கல், மேக்கிங்கும் நடிப்பு உள்ளிட்ட இன்னபிறவும். மொத்தப் படத்தையும் பிலிம் ரோலில் எடுத்து முடித்ததும் மண்ணில் நல்லாப் புரட்டித் தேய்த்தபிறகு எடிட்டிங் டேபிளுக்குக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கு. நாம சின்ன வயசிலிருந்து விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தைப் பார்க்கும்போது ஒரு வெளிறிய டோனில் இருக்குமே, அப்படித்தான் மொத்தப் படமும் இருக்கிறது.

இதில் குப்புற விழுந்து கும்பிடும் அளவுக்கு அதிர்ச்சி என்னவென்றால், இதுதான் சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்காவின் பிளாக் பஸ்டர் மூவியாம்! நம்ம ஊர் ‘பாட்ஷா’ ரீமேக்காம்! கதையை அப்படியே காப்பி பண்ணினால்தானே ரைட்ஸ் உரிமைலாம் வாங்கணும். ‘இந்தா மாத்துறேன் பாருங்கடா காட்சிய!’ என ரஞ்சன் ராமநாயக்கேவே ‘இயக்கி’ ஒவ்வொரு செங்கல்லாக ‘பேர்த்து’ எடுத்திருக்கிறார்.

பீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு!

ஒன் ஷாட்டை மனசில் தைரியம் வரவழைத்து சிங்கிள் சிட்டிங்கில் உட்கார்ந்து பார்த்தால், ஒண்ணு சட்டை இல்லாம வர்றாரு... இல்லைனா மண்டையில முடி இல்லாம வர்றாரு நம்ம ஒன் ஷாட். என்னே ஒரு க்ரியேட்டிவிட்டி.

இவர் நிறைய அடிலாம் அடிக்க மாட்டார். ஒச்சே அடி... எல்லா திசையிலும் ஜிம் பாய்ஸ் பறக்கிறார்கள். சில அவசரக்குடுக்கை அடியாட்கள், இவர் அடிக்கும் முன்னே பறந்து ஏர் டிராவல் பண்ணிக்கொண்டிருக்கும்போதே கீழே கண்ணாடிப் பொருள்கள் உடைகின்றன. ‘என்னடா இது விழுறதுக்கு முன்னாடியே கண்ணாடிலாம் சிதறுது’ எனக் கேட்டால், ` ‘டெனட்’ படம் பார்த்ததில்லையா ப்ரோ..?’ என ஏக்கர் கணக்கில் கமென்ட்டில் புளுகுகிறார் ரஞ்சன் ராமநாயக்கே ரசிகர் ஒருவர். எங்க ராமநாராயணன்கூட லாஜிக்கா சண்டை வைப்பாருய்யா!!

பீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு!

டைமிங் மிஸ்ஸானாலும் பரவாயில்லை என மொத்தப் படத்தையுமே எடிட்டிங்கில் கட் பண்ணாமல் விட்டிருக்கிறார்கள். சரி, சண்டைக் காட்சிகளில்தான் இப்படியென்றால் சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

‘நாடி நரம்புலாம் ரத்தவெறி ஏறுன ஒருத்தராலதான் இப்படி அடிக்க முடியும்...சொல்லுங்க சொல்லுங்க... கொழும்புல என்ன பண்ணிட்டிருந்தீங்க?’ என, ஒன் ஷாட்டின் காலர் இல்லாத சட்டையை உலுக்கி, தம்பி கேட்க, அவசரத்துக்கு ஒதுங்கிய பப்ளிக் டாய்லெட்டில் தண்ணீர் இல்லைனா எப்படி ஒரு அதிர்ச்சி வருமோ அந்த ரியாக்‌ஷனைக் கொடுக்கிறார் ரஞ்சன். காதல் காட்சிகளில் இன்னும் உக்கிரம்.

பீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு!

எப்பவும் மலச்சிக்கல் முகத்தோடயே வலம் வர்றாரு. (சோகத்துல இருக்காராம்!)

ஃப்ளாஷ்பேக்கில் வரும் மாணிக் பாட்ஷாவுக்கு மொட்டையைப் போட்டதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால், பாட்ஷாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுப்பதை கிரியேட்டிவிட்டியால் மாற்றி அமைச்சிருக்கார் நம்ம சூப்பர்ஸ்டார். வரிசையாக வந்து குனிந்து உப்புமூட்டை ஏற வசதியாக முதுகைக் காட்டி எல்லோரும் நிற்கிறார்கள். அடிமை என்பதை அப்படி சிம்பாலிக்காகக் காட்டுகிறார்களாம். கோட்டு சூட்டு போட்டுப் பட்டாளத்து நடை நடக்கும் நம்ம ரஞ்சனுக்கு ஒவ்வொருமுறையும் கோட் எடுத்து மாட்டும்போது நாலு பேர் அதைத் தூக்கி வருகிறார்கள். ‘அடேய்களா... அது கோட்டா அல்லது இரும்பு கேட்டா?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.

பீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு!

‘நாங்க மட்டும் சும்மாவா’ என ரகுவரனாய் நடித்தவர் கொறளி வித்தை காட்டி தன் பங்குக்கு காமெடி பண்ணுகிறாரென்றால், ஹீரோயினாக நடித்தவர் பாவம்போல இருக்கிறார். உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அழகியாம். ‘நிலைமை இப்படி ஆகிப்போச்சே’ ‘போர்டு மாட்டிவிடுங்கப்பா’ என்று சொல்லலாம் போல இருந்தது.

அதென்னப்பா படத்துக்கு டைட்டில் ஒன் ஷாட்?

வேறென்ன ‘ஒச்சே அடி’ தான்!

ரஞ்சன் ராம்நாயக்க இதோட விட்டாரா என்றால், 50 படங்களுக்கு மேல் கொலைக்குத்தாக நடித்திருக்கிறார்.

இவர் நடித்த இன்னொரு ரீமேக் படம் ‘ரஞ்சா’ - நம்ம ஊர் ‘தூள்’ படத்தைத் தூள் தூளாக்கியிருக்கிறார்.

சிவப்பு பேன்ட், சிவப்பு சட்டை... மறக்காமல் பட்டன் போடாமல் நடிப்பது... காரணமே இல்லாமல் திடீரென வரும் மொட்டை, மொட்டையில் டாட்டூ, காதல் காட்சிகளில் கிலோக்கணக்கில் ரொமான்ஸ் என வேற லெவலில் இறங்கி அடிக்கிறார். இந்தப் படத்தை முழுசா பார்க்கிறவங்க கண்டிப்பா இன்ஷூர் பண்ணணும்!

ரஞ்சன் உடைத்த இன்னொரு ஃபர்னிச்சர் ‘டாக்டர் நவாரியன்’ - நம்ம முன்னாபாய், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படமேதான். ‘நான் என்ன வேஷம் போட்டாலும் சட்டைக்கு பட்டன் போட மாட்டேன்டா!’ என ஜிம் பாடியைக் காட்டியபடி கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டி ராவடி பண்ணியிருப்பார் எமகாதக ரஞ்சன். நம்ம ஊர் வயலும் வாழ்வும் இசையைப்போன்ற பாடல்கள் ஒலிக்க.. ‘நாயகி என்ன சென்ட் உபயோகிக்கிறார்’ எனக் கண்டுபிடிப்பதை டூயட் காட்சிகளில் வழக்கமாக வைத்திருக்கிறார் ரஞ்சன்.

‘ரைட்ல பார்த்தா அந்நியன், லெஃப்ட்ல பார்த்தா பில்லா, டாப்ல பார்த்தா மொட்டை சிவாஜி, ஆர்ம்ஸ் பார்த்தா ஆளவந்தான் கமல்... ஆக மொத்தமா பார்த்தா சூப்பர் ஹீரோடா’ என்கிறார் ரஞ்சன் ராமநாயக்கே!

யாரோ இவர் அடி மனசில் சிங்களவுட் சல்மான் கான் எனப் பதிய வைத்திருக்கிறார்கள் போல. மனிதர் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

ரஜினியைப்போல ‘ஒன் ஷாட்’டில் ‘நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை அடிச்சா மாதிரி’ என டயலாக் பேசியவர் ரஜினி மாதிரி இல்லை. அப்படியே அரசியலில் குதித்து மத்திய சாலைத்துறை அமைச்சர் பதவி வரை அலங்கரித்திருந்தார்.

யார் கண்பட்டுச்சோ, வைப்ரேஷன் மோடில் இவர் சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் என நினைச்சுப் பேசியது கரன்ட் கம்பியைக் கடித்தாற்போல வம்பில் மாட்டிவிட்டுள்ளது. அண்மையில் நீதித்துறையை விமர்சித்துப் பேசி கோர்ட் அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார். எம்.பி பதவியும் ஸ்வாஹா! சிங்கிள் சிங்கத்தையா சிறையில் அடைச்சீங்க? ‘ஆடிய ஆட்டம் எங்கே’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.

ரஞ்சன் ராமநாயக்கே படம் பார்த்த கெத்தில் மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு மேலும் சில சிங்களப் படங்களைப் பார்த்தேன்...

‘கெலும் குலரத்னே’ என்ற இளம் நடிகர் ‘கோரி’ என்ற படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். மகளோடு நுவரேலியாவில் பேக்கரி வைத்துப் பிழைப்பு நடத்தித் தலைமறைவாக வாழும் குலரத்னே, ஃப்ளாஷ்பேக்கில் மினிஸ்டர் மெண்டிஸின் மகனைக் கொடூரமாகக் கொன்று சாக்கடையில் வீசிவிட்டு, ‘டிபன் சொல்லுங்க ராஜேந்திரன்!’ என்கிறார்.

ஆமாம். அதேதான் நம்ம ஊர் ‘தெறி’யை வேற மாதிரி தெறிக்க விட்டிருக்கிறார்கள். ஓப்பனிங் பாட்டெல்லாம் ‘நம்ம ஊர் ஸ்டவ்வு மேல கடாயி... சாகத்துல சட்டாயி’ மாதிரியே இருக்கிறது. ‘ஏமிரா இதி ஏமி ஜாக்ஸன் ரோல்ல அனாபெல்லே பேய்ப்படத்துல வந்த கிறிஸ்டோபர் அம்மாவ நடிக்க வெச்சிருக்கீங்க?’ எனக் கலாய்க்கிறார்கள்.

ஒரிஜினலைவிட புதுமையா பண்ணுவோம் என வேதாளம் படத்தையும் கோரியில் கொஞ்சம் கலந்து கட்டி ரீமேக் செய்திருக்கிறார்கள்.

குலரத்னே அண்ணே, அப்படி என்ன கொலவெறிண்ணே?

பத்துக் கல்லில் ஒரு மாங்காய் விழுவதுபோல அவ்வப்போது ரீமேக்கில் செமையாய் கல்லா கட்டியும்விடுகிறார்கள். நம்ம ஊர் காஞ்சனாவை ‘மாயா’வாக்கி 3டியில் விட்டிருக்கிறார்கள். அது அதிரிபுதிரி ஹிட்டும் அடித்திருக்கிறது. புப்புடு சதுரங்கா என்ற அந்த ஊர் இளைய தளபதி நடித்த ‘மாயா’ படத்தில் ஒரிஜினலில் சரத்குமார் ஏற்ற காஞ்சனா திருநங்கை ரோலில் சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ரணசிங்கே மிரட்டி யிருந்தார். புப்புடுதான் ‘அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே’ எனச் சொல்லும்படி நடித்திருந்தார். அதற்கே தேசிய விருது வரை அங்கு வாரிக்கொடுத்திருப்பதெல்லாம் தகராறு வரலாறு!

இது ‘கொழும்பு 28’ - கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்ட்டாய் வருவோம் என இளம் நடிகர்கள் ஹேமல் ரணசிங்கேயும், சாரங்கா திஷாசேகராவும், புப்புடு சதுரங்காவும் இணைந்து நடித்த படம் ‘சூப்பர் சிக்ஸ்!’

மேக்கிங்கில் மேம்போக்காய் இருந்தாலும் சீன் பை சீன் கார்பன் பேப்பரை வைத்து அப்படியே `சென்னை 28’-ஐ ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த மூன்றுபேரைத் தவிர, எல்லோரும் வயிற்றுக் கடுப்போடு நடித்ததைப் போல படத்தின் ஜீவனைக் கொன்று புதைத்து ஸ்டெம்ப் ஊன்றியிருந்தார்கள். ஆனால், படம் அங்கே செம கலெக்‌ஷன். இப்போதும் ஏதாவது ஒரு சேனலில் இந்தப்படம் ஓடிக் கொண்டி ருக்கிறது என்று கேள்விப்பட்டால் தலைசுற்றுகிறது.

இளம் புயல் ஹேமல் ரணசிங்கே தான் இப்போது அந்த ஊர் தனுஷ். நடிப்பிலும் தனுஷை காப்பியடிக்கிறார். ‘ப்ரவாக்யா’ என்ற படம் நம்ம ஊர் லொள்ளு சபா ரீமேக்கில் பார்த்த ‘பொல்லாதவன்’ படம் போல இருக்கிறது.

சொதப்பல் மேக்கிங்கிலும் ஹேமல் நடிப்புக்கு அங்கே ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அண்டர்ப்ளே நடிப்பில் இங்கே கிஷோர் செய்த ரோலை புப்புடு செய்து பப்படமாக்கியிருக்கிறார். ஆனால், டேனியல் பாலாஜி செய்த ரோலை ஒரு மொட்டை செய்து மொத்தப் படத்தையும் காலி செய்து சிரிக்கிறார். கத்திக்கத்தியே நம் காதைக்கிழிக்கிறார் இந்த மொட்டை. ஏன்யா ஏன்?

ஓடுற படத்தை மட்டுமல்ல, ஓடாத படத்தையும் ரீமேக்குவோம் என சிங்களவர்கள் உடைத்த இன்னொரு ஃபர்னிச்சர் ‘தக்கின தக்கின மால்’ - கௌதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’தான். சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா உயிரைக் கொடுத்து நடித்த இந்தப் படத்தின் சிங்கள ரீமேக்கில் நடித்த மூன்று பேருக்குமே படத்தில் நடித்தபோது 55+ வயது. முதியோர் கல்வி பாடத்தைப் போன்ற அரதப்பழசான மேக்கிங். வீட்டில் இந்தப் படத்தை முழுசாய்ப் பார்க்கவே முடியவில்லை. ஏதோ மிட்நைட்டில் ஒளிபரப்பாகும் பி கிரேடு மூவியைப் பார்க்கிறேன் என நினைத்துத் திட்டுதான் விழுந்தது.

இந்த ‘பச்சைக்கிளி’ ஹீரோ ரோஜர் செனிவிதாரனேவும் சூப்பர் ஸ்டார் ரஞ்சன்போல கடும் கோபக்காரர்போல... அரசியல் வாதியான இவர் வீடு புகுந்து ஒருவரைத் தாக்கிய வழக்கில் சிறை சென்று மீண்டிருக்கிறார்.

சிங்கள ரீமேக் சினிமாமீது கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையைத் தகர்த்த படம் ‘கௌடா போலே ஆலீஸ்’!

படத்தை அவ்வை சண்முகி என்று தெரியாத அளவுக்கு உருத்தெரியாமல் சிதைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஹீரோ பண்டு சமரசிங்கேதான் சிங்கள சினிமாவின் நம்பர்1 காமெடியனாம். அவ்வை சண்முகியில் சண்முகி பாட்டி கேரக்டரை ‘ஆத்தோடு’ போகவிட்டு பாண்டியனுடன் ஜானகியும் சேர்வதாக க்ளைமாக்ஸ் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தில் ஆலீஸ் பாட்டியாகவே கடைசிவரை அந்த வீட்டில் தங்கி மனைவி மகளுக்கு காட்மதராக வாழ்வதைப்போல முடிவை மாற்றி வைத்து மொத்தப் படத்தின் திரைக்கதையையும் டிராக்டர் வைத்து உழுதிருக்கிறார்கள். பொறுமையைச் சோதித்துப் பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.

த்ரிஷ்யம்... நம்ம ஊர் ‘பாபநாசம்’ தான். ரீமேக்ஸ் ரைட்ஸ் வாங்கி எடுத்திருக்கிறார்களாம்.

குலநாசம் பண்ணி வைத்திருப் பார்களோ எனத் தயக்கத்தோடு பார்த்தால் ஓரளவு காப்பாற்றி யிருந்தார்கள். படம் மொத்தமிருக்கும் 1335 சிங்கள சினிமாக்களின் கலெக்‌ஷனில் ஆல்டைம் ரெக்கார்டாம். அதுதான் கொஞ்சம் ஓவராகத் தோன்றியது. படத்தை இயக்கியது நம்ம சீரியல் புகழ் செய்யாறு ரவி! கேமராமேன் நம்ம சரவணன். மொத்த பட்ஜெட்டையும் டைரக்டர் - கேமராமேனுக்கு சம்பளமாய்க் கொடுத்துவிட்டு மற்ற எல்லோருமே செல்ல விளையாட்டு ஆடியி ருக்கிறார்கள்.

ஜாக்ஸன் ஆண்டனி என்ற நடிகர் நம்ம மோகன்லாலுக்கும் கமல்ஹாசனுக்கும் டஃப் கொடுத்திருந்தார். ஆனால், பாவம் அவருக்கு நடிப்பு மட்டும் வரவில்லை எனக் கடைசி வரை யாரும் சொல்லவே இல்லை. மனசாட்சியே இல்லாமல் அநியாயத்துக்கு கோட்டிக்காரனாய் நடித்து வைத்திருந்தார்.

பார்ட் 2 எடுப்பதற்கு ரீமேக் ரைட்ஸ் கொடுக்காமல் ஜீத்து ஜோசப் காப்பாற்ற வேண்டும் ஆண்டவரே!

த்ரிஷ்யம் சிங்கள வெர்ஷன் பார்த்து முடித்தபோது ஏன் சிங்களவர்களின் ரசனை இவ்வளவு மோசமாய் இருக்கிறது என அவர்கள்மீது பரிதாபம் வந்தது. உங்களுக்கும் அப்படி இருக்கா..? இதென்ன பிரமாதம், இன்னும் ஸ்பெஷல் ஐட்டம்லாம் இருக்கே...

டோனி (அஞ்சலி), தருவானே (பசங்க), எ காமன் மேன் ( உன்னைப் போல் ஒருவன்)...

ஓடாதீங்க பாஸ்!