Published:Updated:

ஒரு வீடியோ பதிவு... சினிமா வாய்ப்பு... தேடி வந்த மகள்! - சாலையோரப் பாடகிக்கு அடித்த ஜாக்பாட்

ranu mondal
ranu mondal ( PC: SET India )

ரானுவின் வசீகரமான குரலால் ஈர்க்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான், அவருக்கு ₹55 லட்சம் மதிப்புள்ள வீட்டைப்பரிசாக வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரானு மோண்டல் மேற்கு வங்கத்தில் உள்ள ராணாகாட் ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கரின் `ஏக் ப்யார் கா நக்மா ஹை' பாடலைப் பாடி , இணையதளத்தில் வைரலானார். மேலும், அவர் தன் மகள் சுவாதியைக் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படமும் நேற்றிலிருந்து வைரலாகிவருகிறது.

ரானு மோண்டல் மேற்கு வங்கத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் கிருஷ்ணகிரி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால், தன் தாயாரின் மரணத்துக்குப் பின், பெரும்பாலும் தனது குழந்தைப் பருவத்தை ராணாகாட்டில் உள்ள தன் அத்தை வீட்டில்தான் கழித்தார். சிறு வயதிலிருந்தே ரானு மோண்டல் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகை. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் இவர் ராணாகாட் ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கரின் பாடலைப் பாடிக்கொண்டிருக்கையில் பொறியாளர் அதிந்த்ரா சக்கரபோர்த்தி, அந்தக் காணொலியைத் தனது முகநூலில் பதிவிட்டார். உடனே அது சமூக வலைதளத்தில் வைரலானது. அதனால், மும்பையைச் சேர்ந்த 'சூப்பர் ஸ்டார் சிங்கர்' என்னும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள ரானு மோண்டலுக்கு அழைப்பு வந்தது. அங்குதான் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிமேஷ் ரேஷம்மையாவை முதன்முதலில் சந்தித்தார்.

மகளுடன் ரானு மோண்டல்
மகளுடன் ரானு மோண்டல்

அதன் பின்னர், பல்வேறு பாடல்களைப்பாட அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், சமீபத்தில்தான் அவருக்கு ராணாகாட்டில் ரானு ராய் என்ற பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அது திருமணத்துக்கு முன் இருந்த குடும்பப் பெயர். இதனால் அதிகாரிகள் அவருக்கு அவரின் தந்தையின் குடும்ப பெயரிலேயே அடையாள அட்டை வழங்கி உதவி செய்தனர். இதன்மூலம் ரானு, ஹிமேஷ் ரேஷம்மையா இசையில் தேரி மேரி கஹானி (படம்: ஹாப்பி ஹார்டி அன்ட் ஹீர்) என்ற முதல் பாடலைப் பாட மும்பை புறப்பட்டார்.

மும்பையிலிருந்து திரும்பிய பின்னர் ரானு, ஹிமேஷ் ரேஷம்மையா அளித்த வாய்ப்பில் பாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கொல்கத்தாவில் ஒரு பெங்காலி பாடலையும் டெல்லியில் ஒரு புதிய இந்திப் பாடலையும் பாடியுள்ளேன்" எனக் கூறினார். பல்வேறு பாடல்களைப் பாடிய பின்னர், மிக நீண்ட காலம் பிரிந்திருந்த தன் மகள் சுவாதியைச் சந்தித்தது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது அவருக்கு. இருவரும் இத்தனை காலம் பிரிந்திருந்தும் ரானுவின் பாடல் வைரலான காரணத்தால் மறுபடியும் சந்திக்க முடிந்தது.

salman khan
salman khan

ரானுவின் வசீகரமான குரலால் ஈர்க்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான், அவருக்கு ₹ 55 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாக வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் தனது அடுத்த படமான `டபங் 3'யிலும் ஒரு பாடலைப்பாட வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், சல்மான் கான் தரப்பிலிருந்து இது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது சல்மான் கான் பாலிவுட்டில் தனது 31 வருட பயணத்தைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரானு மோண்டல் நிச்சயம் கொல்கத்தாவின் லதா மங்கேஷ்கர்தான்!!

அடுத்த கட்டுரைக்கு