Published:Updated:

'' '4ஜி' ரிலீஸாகியிருந்தா அருண் இறந்திருக்க மாட்டார்!'' - இயக்குநர் ஷங்கரைத் தொடரும் சோகம்

அருண் பிரசாத்
அருண் பிரசாத்

ஷங்கரிடம்  உதவி இயக்குநராக பணிபுரிந்த அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷை வைத்து '4ஜி' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். படம் ரிலீஸுக்கு முன்பாகவே அருண் மரணம் அடைந்திருப்பது அவரது நட்பு வட்டாரத்தில் இருப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம், மீனாட்சி தம்பதியின் மகன் அருண் பிரசாத். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் ஷங்கரிடம் `ஐ' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடிச்சிருந்த '4 ஜி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், இவர் இன்று காலை அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

'' '4ஜி' ரிலீஸாகியிருந்தா அருண் இறந்திருக்க மாட்டார்!'' - இயக்குநர் ஷங்கரைத் தொடரும் சோகம்

பின்னர் அன்னூருக்கு திரும்பிய போது, ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மீது, அருண் பிரசாத்தின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது காவல்துறை. லாரி ஓட்டுநரான வீரபாண்டியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருணின் இறப்பு குறித்து அவரின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான `ராட்சசன்' ராம்குமாரிடம் பேசினேன்.

ராம்குமார்
ராம்குமார்

``அருண் பிரசாத் இறந்துட்டார்னு என்னால நம்பவே முடியல. நண்பர்கள் மூலமாதான் எனக்கு அருண் இறந்த செய்தி வந்தது. முதல்ல, `விபத்து நடந்திருக்கு, ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்காங்க'னு கேள்விப்பட்டேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காதுனு நினைச்சிக்கிட்டு இருந்தபோதே, `அருண் இறந்துட்டார்'னு தகவல் வர ஆரம்பிச்சிருச்சு. அதிர்ச்சி ஆகிட்டேன்.

`நாளைய இயக்குநர்' ஷோவின்போதுதான் அருண் பழக்கமானார். எனக்கு மட்டுமல்ல `இன்று நேற்று நாளை' ரவிக்குமார் மற்றும் `மரகத நாணயம்' இயக்குநர் சரவணன் எல்லோருக்கும் அருண் நல்ல நண்பர். அடிக்கடி சந்திச்சுப் பேசுவோம். `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின்போதுகூட என்னோட `முண்டாசுப்பட்டி' படமும், அருணோட `கொக்கரோக்கோ' படமும் பெஸ்ட் சீரிஸ்னு அவார்டு வாங்குச்சு. பலமுறை, என்னோட ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு கமென்ட் சொல்லியிருக்கார். அவரோட ஸ்க்ரிப்ட் எங்ககிட்ட படிக்கச் சொல்லுவார். நிறைய டிஸ்கஷன் பண்ணுவோம். அடிக்கடி போன்ல பேசுவார். கோயம்புத்தூர் பக்கத்துல அன்னூர் அவரோட சொந்த ஊர். லாக்டெளனால ஊருக்குப் போயிருந்தார்.

நான் பத்து நாளைக்கு முன்னாடிதான் என்னோட சொந்த ஊர் திருப்பூர் போனேன். ஊருக்கு நான் வந்திருக்கேன்னு கேள்விப்பட்டு போன் பண்ணி பேசுனார். நேர்ல பார்க்கலாம்னு இருந்தோம். ஆனா, அதுக்குள்ள இந்தச் சம்பவம் நடந்துருச்சு. லாக்டெளன் நேரத்துல சாலை விபத்துல அருண் பலியானது அதிர்ச்சியா இருக்கு. `ஐ' படத்தின்போது ஷங்கர் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருந்தார்.

அருண் பயணித்த புல்லட்
அருண் பயணித்த புல்லட்

ஜி.வி.பிரகாஷ் நடிச்சிருந்த `4ஜி' படத்தை இயக்கியிருந்தார். படம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸாக வேண்டியது. ஆனா, சில காரணங்களால் தள்ளிப் போயிருச்சு. கடைசில படம் ரிலீஸ் ஆகமா இறந்துட்டார்னு நினைக்குறப்போ ரொம்ப வேதனையா இருக்கு. கொஞ்சநாளைக்கு முன்னாடி வரைக்கும் தன்னோட அடுத்த படத்துக்காக ரெடியாகிட்டு இருந்தார். ஒருவேளை `4ஜி' ரிலீஸாகி இருந்துச்சுனா அருண் லைஃப் ஸ்டைல் வேற மாதிரி இருந்திருக்கும். இந்தச் சாலை விபத்துகூட நடக்காம இருந்திருக்கலாம். இதை நினைச்சா மனசு ரொம்ப கஷ்டமாருக்கு.

அருணோட இறுதிச்சடங்குல கலந்துக்குறதுக்காக நான், ரவிக்குமார் மற்றும் `மரகத நாணயம்' இயக்குநர் சரவணன் கோயம்புத்தூர் போயிட்டு இருக்கோம். அருணோட இறப்பு எங்களுக்கு பேரிழப்பு'' என்றார் இயக்குநர் ராம்குமார்.

இந்தியன் - 2 விபத்தில் தன் உதவியாளரை இழந்த இயக்குநர் ஷங்கர், அடுத்தபடியாக தன் முன்னாள் உதவி இயக்குநர் சாலை விபத்தில் இறந்திருப்பதைக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு