Published:Updated:

தம்பி பக்கம் நிற்பதா? கணவர் பக்கம் நிற்பதா?

காஷ்மீரா
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீரா

படங்கள்: தீரன்

வண்ணக் கனவுகள்

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கும் புதுவரவு லிஜோ மோல். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் மாமனுக்கும் மச்சானுக்கும் இடையே நடக்கும் சண்டையில், தம்பி பக்கம் நிற்பதா, கணவர் பக்கம் நிற்பதா எனத் தெரியாமல் தவிக்கும் தன் நிலையை, கண்களாலேயே கடத்தி அசத்தியிருப்பார் லிஜோ. மலையாளம் கலந்த கொஞ்சும் தமிழில் பேசிய லிஜோவுடன் கொஞ்சம் உரையாடினோம்.

தம்பி பக்கம் நிற்பதா? கணவர் பக்கம் நிற்பதா?

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தயாரிப்பாளர் தரப்புல இருந்துதான் எனக்கு போன் வந்தது. `சென்னைக்கு வாங்க’ன்னு சொன்னாங்க. என்ன கதை, யார் நடிக்கிறாங்கன்னு எதையுமே சொல்லலை. `சசி சார்தான் டைரக்டர்’னு மட்டும் சொன்னாங்க. எனக்கு அவர் `பிச்சைக்காரன்’ பட டைரக்டர்னு மட்டும்தான் தெரியும். மத்தபடி, அவரோட படங்களை நான் பார்த்தது இல்லை. நான் சென்னைக்கு வந்ததும், சசி சார்தான் படத்தின் கதை, யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு சொன்னார். சில காட்சிகளை கொடுத்து ஒரு நாள் முழுக்க நடிக்கச் சொன்னார். அப்புறம், ‘இப்போ நீங்க ஊருக்குக் கிளம்புங்க; நானே திரும்ப கூப்பிடுறேன்’னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. திரும்ப ஒருநாள் வரவெச்சு, அதே மாதிரி வேற சில காட்சிகள் கொடுத்து நடிக்கச்சொன்னாங்க. அப்புறம் கொஞ்ச நாள் வொர்க் ஷாப் வெச்சுட்டு, ஷூட்டிங் கிளம்பிட்டோம்.

தம்பி பக்கம் நிற்பதா? கணவர் பக்கம் நிற்பதா?

படத்தோட மெயின் எமோஷனே உங்க கேரக்டரைச் சுற்றிதான் நடக்கும்; இந்தப் பெரிய ரோலை நாம பண்ணிடுவோம் என்கிற நம்பிக்கை எப்படி வந்தது?

இந்தப் படத்தில் நான் கமிட்டானதுக்குப் பிறகு சசி சார் என்கிட்ட, ‘வீட்டுக்குப் போய் ஒரு தம்பிக்கு எப்படி நல்ல அக்காவா இருக்கலாம்னு யோசி. அந்த எமோஷனை நாம அப்படியே யூஸ் பண்ணக்கலாம்’னு சொன்னார். ஷூட் ஆரம்பிச்சதுக்கு அப்புறம், `இந்தக் கதையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் உன் வாழ்க்கையில நடந்தா, நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோ அதை மட்டும் பண்ணினால் போதும். நடிக்க வேணாம்’னு சொன்னார். அவரது வார்த்தைகள் எனக்கு பயங்கர நம்பிக்கையை கொடுத்தது.

காஷ்மீரா
காஷ்மீரா

மலையாளப் படங்களில் நடித்ததற்கும் தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

அங்க ஒரு படத்தோட மொத்த டீமும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்போம். எல்லாரும் பெயர் சொல்லித்தான் கூப்பிட்டுப்போம். இங்க ரொம்ப மரியாதை தராங்க. புது நடிகையா தமிழுக்கு வந்த என்னை, `மேடம், மேடம்’னுதான் கூப்பிட்டாங்க. அதெல்லாம் பார்க்கும்போது புது அனுபவமா இருந்துச்சு.

தம்பி பக்கம் நிற்பதா? கணவர் பக்கம் நிற்பதா?

இந்தப் படத்தை ஒரு பார்வையாளரா நீங்க பார்க்கும்போது, அக்கா கேரக்டரா, மனைவி கேரக்டரா... எது பிடிச்சிருந்ததா?

அக்கா கேரக்டர்தான். படம் பார்க்கிற வரைக்கும் நான் நடிச்ச சீன் மட்டும்தான் எனக்கு தெரியும். படம் பார்க்கும்போதுதான் அந்த சின்ன வயசு போர்ஷனைப் பார்த்தேன். அதெல்லாம் பார்த்துட்டு எங்க போர்ஷன் வரும்போது ரொம்ப எமோஷனலா இருந்துச்சு. அந்த அக்கா தம்பி பாசத்தைப் பார்த்தப்போ, லைட்டா அழுகை வந்திடுச்சு. அதேபோல மனைவி கேரக்டர்ல இருக்கிற லவ்வும் பிடிச்சிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீங்க ரியல் லைஃப்லையும் ஓர் அக்காதான். ராஜி அக்காவுக்கும் லிஜோ அக்காவுக்கும் இருக்கிற வித்தியாசங்கள் என்ன?

எனக்கு ரெண்டு தங்கச்சிகள் இருக்காங்க. ஓர் அக்காவாப் பார்க்கும்போது இந்த ரெண்டு கேரக்டர்களுக்கும் பெருசா வித்தியாசங்கள் இல்லை. ராஜி தன் தம்பி மேல எப்படி அக்கறையா இருக்காளோ, அதே மாதிரிதான் நானும் என் தங்கச்சிகள் மேல அக்கறையா இருப்பேன். ஆனா, ராஜி இருக்கிற மாதிரி என்னால அவ்வளவு பொறுப்பா இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்பா அம்மா இல்லாம தனி ஆளா தன்னோட தம்பியை வளர்த்த மாதிரி, என்னால பண்ண முடியுமான்னு தெரியலை!

ஜி.வி. பிரகாஷ், லிஜோ
ஜி.வி. பிரகாஷ், லிஜோ

உங்கள் கனவு என்ன?

நிறைய படிக்கணும். போஸ்ட் கிராஜுவேட் முடிச்சிட்டேன். அடுத்து பிஹெச்.டி பண்ணலாம்னு இருக்கேன். காலேஜ் லெக்சரர் ஆகுறதுதான் என் கனவு.

`சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக நடித்திருக்கிறார், மராத்தி பொண்ணு காஷ்மீரா. படத்தில் இவருக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும், எந்த குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். வெளியூரிலிருந்த காஷ்மீராவிடம் தொலைபேசியில் பேசினோம்.

`சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடித்த அனுபவம்?

சசி சார் படத்தில் நான் நடித்ததை நினைத்து ரொம்ப பெருமைப்படுறேன். ஏன்னா, ஒரு நடிகையிடமிருந்து பெஸ்ட்டான நடிப்பை எப்படி வெளியில கொண்டு வரணும்னு அவருக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சிருக்கு. அது ஒரு நடிகையா எனக்கு ரொம்ப வசதியாகவும் இருந்துச்சு. கண்டிப்பா, அவரோடு மறுபடியும் வொர்க் பண்ணுவேன்னு நினைக்கிறேன். இந்தப் படம் மூலமா ஜி.வி-யும் நானும் செம ஃப்ரெண்ட்ஸாகிட்டோம். ஒரு சீனியர் நடிகரா சித்தார்த் சார் நல்லா என்கரேஜ் செய்தார். லிஜோ மிக திறமையான நடிகை. அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்.

ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம்?

முதல் நாள் ஷூட்டிங்கே மறக்க முடியாத நிகழ்ச்சியா அமைஞ்சிருச்சு. முதல் நாளே பெரிய சீன்; அதிக வசனங்கள் கொடுத்துட்டாங்க. படத்தோட மொத்த டீமும் கேமராவுக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தாங்க. எனக்கு செம பதற்றமா இருந்தாலும், ஷூட்டிங்குக்கு முன்னாடியே சசி சார் கொடுத்த வொர்க் ஷாப் செமையா யூஸ் ஆச்சு.

படத்துக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு; அடுத்து என்ன திட்டம்?

படத்தோட ரெஸ்பான்ஸைப் பார்க்கும் போது உண்மையாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் நடிப்பு நன்றாக இருந்ததுன்னு விமர்சனங்களில் பார்க்கிறபோது, ரொம்ப பெருமையாக இருக்கு. என் முதல் தமிழ்ப் படமே எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்ததால், தமிழ் கத்துக்கிட்டு, அதிக படங்களில் நடிக்கணும்னு ஆசை!