Published:Updated:

`அந்த வருத்தம் கூட காரணமாக இருக்கலாம்!' - விவேக் நினைவுகள் குறித்து சாலமன் பாப்பையா

Solomon Pappaiah
Solomon Pappaiah ( Photo: Vikatan )

`இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்கிற பிரபலமான அந்த வசனம், விவேக் கல்லூரிப் பருவத்தில் கேம்பஸில் போட்ட ஒரு நாடகத்தில் பயன்படுத்தியதுதான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சனங்களின் கலைஞன், இயற்கை ஆர்வலர் நடிகர் விவேக்கின் மரணம் உலகத் தமிழர்களை உலுக்கியுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினரை, நண்பரை இழந்ததுபோல் தமிழக மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, விவேக்குக்கு நாடகம், சினிமா, கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் வரக் காரணமாக அமைந்த அவர் படித்த அமெரிக்கன் கல்லூரி, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், மதுரை மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளனர்.

இரண்டு நாள்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி உற்சாகமாகப் பேசிய விவேக், இன்று நம்முடன் இல்லை என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அமெரிக்கன் கல்லூரியில் அஞ்சலி
அமெரிக்கன் கல்லூரியில் அஞ்சலி

அமெரிக்கன் கல்லூரியில் இன்று அவருக்கான அஞ்சலி செலுத்தப்பட, கல்லூரி மாணவர்களிடம் பேசினோம். ``விவேக் சார் எங்க காலேஜ் சூப்பர் சீனியர் என்பதில் எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமை. நகைச்சுவை நடிகராக மட்டும் தன் பங்களிப்பை செய்யாமல், தனக்குக் கிடைச்ச திரைப்பட வாய்ப்புகள் மூலம் சமத்துவம், சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்துகளையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை எளிய மக்களுக்குப் புரியும் வகையிலும் சொன்னவர்.

1990 முதல் இப்போவரை கடந்த 30 வருஷமா நகைச்சுவையில தனக்குனு தனி வழியைக் கடைப்பிடித்து வந்தவர். எங்க சீனியரோட இழப்பை எங்களால ஏற்றுக்கொள்ள முடியலை" என்றனர்.

மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் வந்ததிலிருந்து அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் பதற்றமானார்கள். இன்று அவர் மரணச் செய்தியில் இடிந்துபோயுள்ளனர்.

அமெரிக்கன் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடந்த நிலையில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரிடம் பேசினோம். ``1978-ல் எங்கள் கல்லூரியில் படித்தவர் விவேக். அவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டமாக இருந்தாலும் அப்போதே மதுரைக்காரராகவே நடந்துகொள்வார் என்று ஆசிரியர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி விழாக்களில் நாடகங்கள் போடுவது, அதற்கு ஸ்கிரிப்ட் எழுதுவது எல்லாம் அப்போதே கைவந்திருக்கிறது விவேக்குக்கு.

கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்
கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்

`இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்கிற பிரபலமான அந்த வசனம், விவேக் கல்லூரிப் பருவத்தில் கேம்பஸில் போட்ட ஒரு நாடகத்தில் பயன்படுத்தியதுதான். எங்கள் கல்லூரியிலிருந்து திரையுலகத்துக்குப் பலர் சென்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். அதில் விவேக் ரொம்ப பெருமை சேர்த்தவர். சமகாலத்தில் எங்கள் கல்லூரி நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசியிருக்கிறார். அதிலும் மரம் வளர்க்க மாணவர்களை நிறைய ஊக்கப்படுத்தி யிருக்கிறார். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது" என்றார்.

நடிகரும் தற்காப்பு கலை வீரருமான ஷிஹான் ஹுசைனி உட்பட பல திறமையாளர்கள், தொழிலதிபர்கள் அக்காலகட்டத்தில் நடிகர் விவேக்கோடு அமெரிக்கன் கல்லூரியில் படித்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவேக் மிகவும் மதித்த தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் பேசினோம். ``விவேக்கின் இழப்பை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. நடிகர் என்பதைக் கடந்து அவர் நல்ல சமூக சிந்தனையாளர். அறிவாளி. சினிமா மூலம் அவர் சொன்ன நகைச்சுவை ஒவ்வொரு ரசிகரையும் யோசிக்க வைக்கும். சின்ன கலைவாணர் என்ற பட்டம் அவருக்குப் பொருத்தமானது.

என் பெயரை பல படங்களில் குறிப்பிடுவார். ஒரு கட்டத்தில் அவருடன் சேர்ந்து படத்தில் நடிக்கும் சூழலும் ஏற்பட்டது. சந்திக்கும் போதெல்லாம் பல விஷயங்களைப் பேசுவார். எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்த செய்தியை முதலில் போன் போட்டு தெரிவித்தவர் விவேக்தான். அவரை என் குடும்பத்தில் ஒருவராகத்தான் இதுவரை நினைத்து வருகிறேன். திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்களில் ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் உடனே பேசிவிடுவார். மதுரைக்கு வந்துவிட்டால் என் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மரம் வளர்க்கும் இயக்கத்தைத் தொடங்கி சாதித்துக்காட்டியவர் அவர்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா
பேராசிரியர் சாலமன் பாப்பையா

அமெரிக்கன் கல்லூரியில் அவரின் மாணவ காலத்தில் அவர் வணிகவியல் படித்ததால், தமிழாசிரியரான என்னுடன் அதிக தொடர்பு இல்லாவிட்டாலும், தமிழ் வகுப்புகளில் ஆர்வமாகக் கலந்துகொள்வார். அப்போது பேச்சுக்கலை என்ற தலைப்பில் பாடம் நடத்துவோம். அதில் சிறப்பாகப் பங்களிப்பார்.

சில வருடங்களுக்கு முன் அவரின் மகன் மரணமடைந்ததிலிருந்து உள்ளுக்குள் மிகுந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். அந்த இழப்பை மறப்பதற்கு நானும் பல தடவை ஆறுதல் கூறி வந்தேன். ஆனாலும், அது அவர் மனதை மிகவும் பாதித்திருந்ததும் இந்த வயதில் அவர் மரணத்தை தழுவ ஒரு காரணமாக நினைக்கிறேன். அவர் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்றார் தழுதழுத்த குரலில்.

விவேக்கின் மறைவுக்கு அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மட்டுமன்றி மதுரை மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு