Published:Updated:

‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!
பிரீமியம் ஸ்டோரி
‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

‘இந்தக்காலம் ரொம்ப மோசம், அந்தக்காலம் போல இல்லை’ என்பது எந்தக் காலத்திலும் சொல்லப்படும் குற்றச் சாட்டுதான்.

‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

‘இந்தக்காலம் ரொம்ப மோசம், அந்தக்காலம் போல இல்லை’ என்பது எந்தக் காலத்திலும் சொல்லப்படும் குற்றச் சாட்டுதான்.

Published:Updated:
‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!
பிரீமியம் ஸ்டோரி
‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆபாசம் குறித்து சூடான விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. ‘இந்தக்காலம் ரொம்ப மோசம், அந்தக்காலம் போல இல்லை’ என்பது எந்தக் காலத்திலும் சொல்லப்படும் குற்றச் சாட்டுதான். உண்மையிலேயே இப்போது தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்திருக்கிறதா என்று பேச வேண்டுமானால் தமிழ் சினிமா வரலாற்றில் எப்படியெல்லாம் காமம், பாலியல், ‘ஆபாசம்’ அணுகப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

கறுப்பு வெள்ளைப் படங்களில் முத்தக்காட்சிகள் என்றால் நாயகன் - நாயகிக்குப் பதிலாக இரண்டு கிளிகள் முத்தமிட்டுக்கொள்வது, பூக்களைப் பிடித்து ஆட்டுவது போன்ற காட்சிகள் இருக்கும். எம்.ஜி.ஆர் தனக்கு வயதான தோற்றம் தெரிகிறது என்று உணர ஆரம்பித்தபோது, மஞ்சுளா, லதா, ராதா சலூஜா என்று சிறுவயதுப்பெண்களுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துத் தன் முதுமைத்தோற்றத்தை ஈடுகட்ட முயன்றார். சிவாஜி கணேசனும் இதைப் பின்பற்றி தன் முதிர்காலத்தில் அம்பிகா, ஸ்ரீதேவி போன்ற இளவயது நடிகைகளுடன் நடித்த காட்சிகளை இப்போது பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

‘16 வயதினிலே’க்குப் பிறகு தமிழ் சினிமாவின் முகம் பலவகைகளில் மாறத் தொடங் கியதைப்போலவே பாலியல், நெருக்கமான காட்சிகளிலும் மாறத்தொடங்கியது. இப்போது ‘இரண்டாம் குத்து’ போஸ்டரைக் கடுமையாக விமர்சிக்கும் பாரதிராஜாவின் பழைய ‘டிக் டிக் டிக்’ போஸ்டரை எடுத்துப்போட்டு ‘இது ஆபாசமில்லையா?’ என்று கேட்கிறார் அந்தப் படத்தின் இயக்குநர். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வாலிபமே வா வா’, ‘டிக் டிக் டிக்’ என்று பாரதிராஜாவின் படங்களிலும் நெருக்கமான, கவர்ச்சிகரமான காட்சிகள் இருந்தன. ‘முதல் மரியாதை’ படத்தை அதன் கதைக்காவும் இசைக்காகவும் பார்த்தவர்கள் பலர் என்றால், ரவிக்கை அணியாத ராதவையும் ரஞ்சனியையும் ரசிப்பதற்காகப் பார்த்த சிலரும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் பாரதிராஜா படத்தின் இத்தகைய காட்சிகள் அதன் கதை எல்லைக்கோட்டைத் தாண்டாமல் இருந்தன என்பது உண்மைதான்.

பாலசந்தர் படங்கள் முறைமீறிய உறவுகள் குறித்துப் பேசிய படங்கள் என்றாலும் நெருக்கமான கவர்ச்சிகரமான, பாலியல் காட்சிகள் மிகமிகக் குறைவு.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜின் திரைப்படங்கள் ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சிக்கு முன்னோடி. முருங்கைக்காய், ஐஸ்ப்ரூட், மாடு கத்துவது என்று பல பாலியல் குறியீட்டுக் காட்சிகளை வைத்து ‘அதுல ஒரு சமாச்சாரம் என்னன்னா’ என்று விளக்குவார். அவருக்குப் போட்டியாக விளங்கிய டி.ராஜேந்தர் பாக்ய ராஜுக்கு முற்றிலும் நேரெதிர். பெண்களைத் தொட்டுக்கூட நடித்ததில்லை. ஆனால் படங்களில் அவர் தங்கையோ அல்லது அவர் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றப் போகும் காதல் ஜோடியில் ஒருவரான பெண்ணோ, விநோதமான செட்களில் கவர்ச்சி நடனம் புரிவார்கள்.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

காமத்தை அழகியலுடன் காட்சிப்படுத்திய முக்கியமான இயக்குநர் பாலுமகேந்திரா. காதலின் சுருதி தப்பாத காமம் அவர் படங்களில் நிரம்பி வழியும். ‘பொன்மேனி உருகுதே’ பாடலைவிட ‘ஓ வசந்த ராசா’ பாடலில் நுட்பமான காமம் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம். கமல்ஹாசன் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாயகிகளுடனான ரொமான்ஸ் காட்சிகளும் முத்தக்காட்சிகளும் அவருக்கு ‘காதல் இளவரசன்’ பட்டத்தைப் பெற்றுத்தந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்கள் ரசிப்பதற்காகப் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டிய தமிழ் சினிமா, பெண்கள் ரசிப்பதற்காகக் கமல்ஹாசனையும் கவர்ச்சியாகக் காட்டியது. ‘பொன்மேனி உருகுதே’, ‘மீண்டும் மீண்டும் வா’, ‘பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள’ என்று பல பாடல்களில் சட்டையணியாத மேனியுடன் கவர்ச்சி விருந்து படைத்தார் கமல். ‘இதெல்லாம் மோசம்’ என்றபடியே கமல்ஹாசன், பாக்கியராஜ் படங்களை ரசித்த பெண்களும் அதிகமிருந்தார்கள்.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

கறுப்பு வெள்ளை காலத்திலிருந்தே கவர்ச்சி நடிகைகளும் அவர்களது துள்ளல் நடனமும் தமிழ் சினிமாவின் நறுக்க முடியாத நகங்களாக இருந்தன. அவர்கள் வில்லன்களின் ரகசிய இடத்திலோ கிளப்புகளிலோ நடனம் ஆடும்போதுதான் பல முக்கியமான கடத்தல் பொருள்கள் கைமாறுவதோ போலீஸ் சமூக விரோதக்கும்பலைச் சுற்றி வளைப்பதோ நடக்கும். அதேபோல் முதலிரவுப்பாடல்களும் தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத அம்சம். வித்தியாசமான படம் எடுக்க முயன்ற மணிரத்னம்கூட ‘ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்ன சத்தம்’, ‘அரபிக்கடலோரம்’ என்று முதலிரவுப் பாடல்களிலிருந்து தப்பவில்லை.

90களில் நிலைமை கொஞ்சம் மாறியது. கவர்ச்சி நடிகைகளுக்கான இடத்தை நாயகிகளே எடுக்க ஆரம்பித்தார்கள். ஒருபுறம் பேசாமலே காதல், பார்க்காமலே காதல் என்ற புனிதக்காதல்களைத் தமிழ் சினிமா முன்வைத்தாலும் இன்னொருபுறம் நாயகன் - நாயகிக்கு இடையிலான நெருக்கமான காட்சிகளும் அதிகமாகின. ‘காதல் கோட்டை’யில் அஜித் - தேவயானி புனிதக்காதல் இருந்தாலும் ஹீரா என்னும் கவர்ச்சி நாயகியும் இருந்ததாலேயே கோட்டை முழுமையடைந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் காப்பாற்றி தேசப்பற்றை நிலைநாட்டத் துடித்த அர்ஜுனால்கூட ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு நுழைஞ்சிருக்கு’, ‘முத்தம் தர ஏத்த இடம்’ பாடல்கள் இல்லாமல் ‘ஜெய்ஹிந்த்’ சொல்ல முடியவில்லை.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

கண்ணதாசன் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவின் காதல் பாடல்களில் பாலுணர்வு என்பது எப்போதுமே இலைமறை காய்மறைவாகவும் சமயங்களில் வெளிப் படையாகவும் இணைந்தே வந்தது. அதிலும் 80களின் காதல் பாடல்களை இரண்டே வரிகளில் அடக்கிவிடலாம். நாயகன் நாயகியைப் பாலுறவுக்கு அழைப்பார். நாயகியோ ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்’ என்று மறுத்துவிடுவார். இந்த இரண்டு வரிகளையே பாடலாசிரியர்கள் விதவிதமான வரிகளில் எழுதித் தீர்த்தார்கள். இளையராஜா இசையில் எஸ்.பி.பி - ஜானகி பாடல்களில்தான் அதிகம் முக்கல், முனகல், சிணுங்கல் என்று விரக ரசம் வழிந்தோடியது என்று சொல்லலாம்.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

இலைமறைகாயாகவும் இரட்டை அர்த்தத்திலும் முக்கல் முனகலாகவும் இருந்த பாடல்கள் 90களில் எல்லைமீறி கிட்டத்தட்ட நேரடியான அர்த்தத்திலேயே வெளிப்படத் தொடங்கின. கந்தசஷ்டி கவசத்தை சிலர் இழிவுபடுத்திவிட்டதாக சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. ஆனால் ‘சூரியன்’ படத்தில் அதே கந்தசஷ்டி கவச மெட்டிலேயே ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது’ என்று விரகதாபப் பாடல் இடம்பெற்றிருந்தது. இதில் சாதனை படைத்தது பிரபுதேவா நடித்த ‘இந்து’ படம். மற்ற படங்களில் இப்படியான இரட்டை அர்த்தப்பாடல்கள் ஏதாவது ஒன்றிரண்டு இருக்கும். ஆனால் ‘இந்து’ படத்தில் எல்லாப்பாடல்களுமே ஏடாகூடம்தான். பாடல்களில் விரசத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியவர் வாலி.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைப்போல பெண்களின் தொப்புளும் கவர்ச்சிப்பிரதேசம்தான் என்று கண்டுபிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோயின் தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லேட் போடுவது என்று விதவித வீர விளையாட்டுகளை உருவாக்கினார்கள். இதுதான் 2000 வரையிலான தமிழ் சினிமா வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

80கள் மற்றும் 90களில் பெரும்பாலானவை காதல், காதல் தோல்வி என்று காதலை மையப்படுத்திய படங்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அரசியல் சினிமாக்கள், பிளாக் ஹியூமர் சினிமாக்கள், நிழல் உலக வாழ்க்கையைச் சித்திரிக்கும் படங்கள், பேய்ப்படங்களே அதிகம். கவர்ச்சி நடனங்களோ ‘நேத்து ராத்திரி யம்மா’ போன்ற ‘மிட்நைட் மசாலா’ பாடல்களோ கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை. இன்னும் சொல்லப்போனால் காதலன் - காதலிக்கு இடையிலான நெருக்கமான காட்சிகளே இப்போதைய படங்களில் சித்திரிக்கப் படுவதில்லை. நுரைக்க நுரைக்க காதலிக்கும் படங்கள் இப்போது வருவதில்லை. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் வந்ததில் நுரைத்த காதல் படமென்றால் ‘96’-ஐச் சொல்லலாம். ஆனால் அதிலும் காதலர்களுக்கு இடையே நெருக்கமான காட்சிகள் இல்லை. என்ன காரணம்?

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

இணையத்தைத் திறந்தால் மிட்நைட் மசாலாவிலிருந்து அப்பட்டமான பாலுறவுக் காட்சிகள் வரை கொட்டுகின்றன. ஷகிலா படங்களைப்போன்ற பி கிரேடு சினிமாக்களே இப்போது வருவதில்லை. இப்போது ரசிகர்களைத் தியேட்டருக்கு அழைத்துவர தமிழ் சினிமாவுக்கு ‘கவர்ச்சி’ தேவையில்லை.

இன்னொருபுறம் பெண்பாத்திரங்கள்குறித்த சித்திரிப்புகளும் தமிழ் சினிமாவில் மாறியிருக்கின்றன. பல ஆண்டுகளாகவே நாயகிகள் ஹீரோக்களுடன் மரத்தைச் சுற்றி டூயட் ஆடுபவர்களாகவோ, குடும்பக் குத்துவிளக்குகளாகவோ, திமிர் பிடித்த பெண்களாக வந்து ஹீரோக்களால் அடக்கப்பட்டு திருத்தப்படுபவர்களாகவோதான் சித்திரிக்கப்பட்டார்கள். ஆனால் இப்போதைய சினிமாக்களில் இவையெல்லாம் இல்லை. ஓரளவுக்கேனும் பாசாங்கற்று இயல்பாகப் பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள். ‘வுமன் சென்ட்ரிக் சினிமாக்கள்’ அதிகம் வருகின்றன.

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். தன்னை ஆசை நாயகியாகக் கொடுமைப்படுத்திய சிங்கப்பெருமாளையும் ஏமாற்றி, சப்பையையும் ஏமாற்றி பணப்பையுடன் பறக்கும் சுப்புலெட்சுமி நாயகியா, வில்லியா, குணச்சித்திரப் பாத்திரமா? சிங்கப்பெருமாளும் பசுபதியும் ஆண்கள் என்றால் சுப்புலெட்சுமி ஒரு பெண், அவ்வளவுதான். (‘ஆரண்ய காண்ட’த்தில் எல்லோருக்கும் விலங்குகளின் பெயர்கள். விலங்குப்பெயர் இல்லாத பாத்திரம் சுப்புலெட்சுமி)

‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’, ‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்று எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ரஜினி வரை நாயகர்கள் பக்கம்பக்கமாக பெண்களுக்கான வரையறைகளை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன சொல்கிறது? ஒரு பெண் குடிக்கலாம், அவளுக்குப் பல காதல்கள் இருக்கலாம், பாலுறவிலும் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவள் அனுமதியின்றி யாரும் அவள்மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடக்கூடாது. மனைவியாக இருந்தாலும் சம்மதமின்றித் தொட்டால் அது பாலியல் வன்முறைதான். ‘நோ மீன்ஸ் நோ’ என்று உச்சநட்சத்திரமான அஜித் சொல்லும் அளவுக்குத் தமிழ் சினிமா மாறியிருக்கிறது. இத்தகைய மாற்றங்கள் எல்லாம் சேர்ந்துதான் கவர்ச்சி நடனங்களைக் கிட்டத்தட்ட இல்லாமலாக்கியிருக்கின்றன.

 ‘மிட்நைட் மசாலா’வுக்கு குட்பை!

சரி, இணையத்திலேயே எல்லாம் கிடைத்தாலும் ஏன் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ போன்ற படங்கள் வருகின்றன? பாலியல் கல்வி, பாலியல் குறித்த புரிதல் உள்ள நாடுகளிலும்கூட இப்படியான பாலியலை நகைச்சுவையாக அணுகும் படங்கள் வரத்தான் செய்கின்றன. இது ஒரு குறுகுறுப்பு விளையாட்டு மனோபாவம்.

பாலியல் வன்முறையை இத்தகைய படங்கள் தூண்டும் என்று சொல்வதற்கும் எந்தத் தரவுகளும் இல்லை. சரி, இதற்குமுன் பாலியல் வன்முறையைத் தமிழ் சினிமா எப்படி அணுகியிருக்கிறது? பாலியல் வன்முறை செய்யப்பட்ட பெண்ணை அந்த ஆணுக்கே திருமணம் செய்துவைத்து ‘நீதிடா நேர்மைடா’ என்று சொம்பில் ‘புளிச்’ என்று துப்பியிருக்கிறார்கள் நாட்டாமைகள், பாலியல் வன்முறை செய்யப்பட்ட பெண் தன் புனிதம் போய்விட்டது என்று குத்துவிளக்கையோ ஆப்பிள் நறுக்கும் கத்தியையோ எடுத்து வில்லனைக் கொன்றுவிட்டு தானும் குத்திக்கொண்டு இறந்திருக்கிறாள், பாலியல் வன்முறை செய்த ஆணையே தேடிவந்து அவனைத் திருமணம் செய்து ‘புதிய பாதை’ காட்டியிருக்கிறார்கள் நாயகிகள். விடலைத்தனமான ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களைவிட ‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்ற ‘படையப்பா’ வசனம் உருவாக்கும் ஆணாதிக்க மனநிலைதான் பாலியல் வன்முறைக்கு முக்கிய காரணம்.

சரி, இத்தகைய படங்களால் தமிழ்ப்பண்பாடு கெட்டுவிடாதா? சங்க இலக்கியங்கள் தொடங்கித் தமிழ் இலக்கியங்களில் பாலியல் வர்ணனைகள் உண்டு. ‘கொக்கோகம்’, ‘விறலிவிடு தூது’, ‘கூளப்ப நாயக்கன் காதல் கதை’ என்று காமரசம் சொட்டும் நூல்கள் தமிழில் உண்டு. ‘விறலி விடு தூது’வுக்குக் கண்ணதாசன் எழுதிய உரையில் காமம் துள்ளும். கிராமத்து நாடகங்கள், கரகாட்டம் என்று இரட்டை அர்த்தம், பாலுறவு நகைச்சுவைகள் எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ்ப்பண்பாடு.

அப்படியானால் ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களை ஆதரிக்கலாமா? தேவையில்லை, சும்மா இருந்தாலே போதும். இதுபோன்ற படங்கள் ஒன்றிரண்டு வரும்போது தியேட்டர்களில் கூட்டம் கூடும். இதேமாதிரியான படங்கள் அதிகரித்தால் கூட்டம் குவியாது. தானாகவே இத்தகைய படங்கள் அடங்கிவிடும். எதிர்ப்பு என்பதுதான் இந்தப்படங்களுக்கான எதிர்மறை விளம்பரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism