நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் பிரிவு தென்னிந்திய சினிமாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷன் ‘யே மாய சேசாவே' படத்தில் நாக சைதன்யாவுடன் அறிமுகம், நட்பு. பிறகு `மனம்’, ‘ஆட்டோநகர் சூர்யா' என்ற படங்கள். இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறி இனிதே திருமண பந்தத்தில் முடிந்தது. கோவாவில் ஆரவாரமாக இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
சென்னைப் பெண் சமந்தா ஹைதராபாத் மருமகள் ஆனார். சமந்தா ரூத்பிரபு - சமந்தா அக்கினேனி ஆனார். திருமணத்திற்குப் கணவன் மனைவியாகவே இருவரும் நடித்த ‘மஜிலி’ படம் சூப்பர் ஹிட். அந்தத் தம்பதியின் காதல் வாழ்க்கையைத் தெலுங்கு சினிமா ரசிகர்கள் அங்கீகரித்த தருணம் அது.

இருவரும் மணிக்கட்டில் ஒரே மாதிரி டாட்டூ குத்திக்கொண்டனர். ‘சாய்’ என சைதன்யா பெயரை டாட்டூ குத்திக்கொண்டார் சமந்தா. சைதன்யா பற்றிப் பேசும்போது சமந்தா முகம் வெட்கத்தில் சிவக்கும். ‘‘ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தாவை முதன்முதலாகப் பார்த்தேன். அப்போது முதல் அவரை இம்ப்ரஸ் பண்ண முயற்சி செய்கிறேன்’’ என சைதன்யா சொல்ல, ‘‘இவர் பல பெண்களின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார். என்னை லேட்டாகத்தான் கவனித்தார்’’ என்று சொல்லிச் சிரித்தார் சமந்தா.
திருமணமானாலும் இருவரும் தங்கள் கரியரில் மிகவும் கவனமாக இருந்தனர். ‘திருமணமாகிவிட்டால் ஹீரோயின்களுக்கு மார்க்கெட் அவ்வளவுதான். அதனால், வாய்ப்புகள் குறைந்துவிடும். நடிப்பதை நிறுத்திவிடுவார்கள்' என்ற எழுதப்படாத நடைமுறையை மாற்றி யமைத்தவர், சமந்தா. சொல்லப் போனால், திருமணத்திற்குப் பிறகு அவர் மார்க்கெட் அதிகரிக்கவே செய்தது. தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின், ஓ.டி.டி தளங்களில் என்ட்ரி என தன்னை அப்டேட் செய்துகொண்டே இருக்கும் நாயகி. நாக சைதன்யாவும் திருமணத்திற்குப் பிறகு, ஐந்து படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘லவ் ஸ்டோரி' சூப்பர் ஹிட். அமீர் கானின் ‘லால் சிங் சத்தா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். தங்கள் பாதையில் டாப் கியரில் சென்றுகொண்டிருந்தனர் சமந்தாவும் நாக சைதன்யாவும். இன்ஸ்டாகிராமில் இருவரும் செம ஆக்டிவாக பதிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். கடந்த லாக்டெளனில்கூட, சமந்தா தொகுத்து வழங்கிய ‘Sam Jam' நிகழ்ச்சிக்கு நாக சைதன்யா விருந்தினராக வந்திருந்ததும் அவரை சமந்தா பேட்டி எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. திடீரென்று சோஷியல் மீடியா பக்கங்களில் அக்கினேனி என்ற தனது புகுந்த வீட்டுப் பெயரை சமந்தா நீக்கியதும் ‘இருவருக்குள் மனக்கசப்பு, பிரியப்போகிறார்கள்’ எனத் தகவல்கள் கசிய ஆரம்பித்தன. ஆனால், அதை சமந்தாவும் நாக சைதன்யாவும் எங்கேயும் சொல்லாமல் இருந்தனர்.

இது வதந்திதான் என்று நினைத்த கணத்தில் இருவரும் தங்களது பிரிவை சோஷியல் மீடியா பக்கங்களில் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தனர். ஒரே தகவலை இருவரும் தனித்தனியாகப் பகிர்ந்து விஷயத்தை உலகிற்குச் சொல்லும் அளவுக்கு கண்ணியமான பதிவு அது. அவர்களுக்குள் என்ன மனக்கசப்பு இருந்திருந்தாலும் பொதுவெளியில் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொண்டனர் ‘நிறைய எண்ணங்களுக்கும் யோசனைக்கும் பிறகு, நாங்கள் பிரிவதாக முடிவெடுத்துவிட்டோம். இனி அவரவர் பாதையில் பயணிக்கவிருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு மேலான நட்பு எங்களுக்குள் இருந்திருக்கிறது. அது எங்களுக்கிடையே எப்போதும் ஒரு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்' என அதில் குறிப்பிட்டிருந்தனர். சமந்தா - நாக சைதன்யாவின் எத்தனையோ பதிவுகளுக்கு ஹார்டின்களைத் தெறிக்கவிட்ட ரசிகர்களுக்கு இந்தப் பதிவு அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்திருக்கிறது.


சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவும் ட்விட்டரில், ‘நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்குமிடையே என்ன நடந்திருந்தாலும் அது துரதிர்ஷ்டவசமானது. கணவன் மனைவி உறவுக்குள் நடக்கும் விஷயங்கள் அவர்களின் பர்சனல். இருவரும் எப்போதும் என் அன்பிற்குரியவர்கள்தான்'' என்று பதிவிட்டார். ‘பிரியும் அளவுக்கு அவர்களுக்குள் என்ன பிரச்னை’ என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கும் என்றாலும், அவர்களின் பர்சனலை மதிக்க வேண்டியது மாண்பு.
மனம் விரும்பியவரைப் பிரிவது என்பது பெரும் வலி. அந்தப் பிரிவைச் சந்திக்க வேண்டிய சூழல் வந்தால் அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தனக்கான உறவு கிடைப்பது எப்படி இயல்போ, அது போலதான் அந்த உறவிலிருந்து பிரிவதும். நட்சத்திரங்கள் என்பதால் அவர்கள் என்ன செய்தாலும் பொதுவெளியில் பேசுபொருளாகிறது. ஆஃப் ஸ்கிரீனில்கூட அவர்கள் அவர்களாக இருக்க முடியாததுதான் அவர்களின் சாபம்.
மாற்றங்களே வினா... மாற்றங்களே விடை...