Published:Updated:

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

போலீஸ் சினிமாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
போலீஸ் சினிமாக்கள்

தமிழ் சினிமாவில் போலீஸின் வருகை நெடுங்காலத்துக்கு முன்பே நிகழ்ந்துவிட்டாலும் அந்த போலீஸ் பெரும்பாலும் க்ளைமாக்ஸில்தான் வந்து சேர்வது வழக்கம்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணங்கள் காவல்துறை வன்முறையையும் போலீஸ் திரைப் படங்களையும் விவாதப் பொருளாக்கியிருக்கிறது. “காவல் துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்” என்று சொல்லி யிருக்கிறார் இயக்குநர் ஹரி. “போலீஸை ஹீரோவாக வைத்து ஒருபோதும் படமெடுக்க மாட்டேன்” என்று எப்போதோ இயக்குநர் ராம் ஒருமுறை நேர்காணலில் கூறியது, இப்போது வைரல் ஆகியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழ் சினிமாவில் போலீஸின் வருகை நெடுங்காலத்துக்கு முன்பே நிகழ்ந்துவிட்டாலும் அந்த போலீஸ் பெரும்பாலும் க்ளைமாக்ஸில்தான் வந்து சேர்வது வழக்கம். ‘க்ளைமாக்ஸ் போலீஸ்’ என்பது கேலிப்பொருளாக இருந்தது ஒரு காலகட்டம். ஹீரோயிச சினிமாக்களைத் தொடங்கிவைத்த எம்.ஜி.ஆர் சில படங்களில் போலீஸாக நடித்திருக்கிறார். கொலைகாரர்கள், கடத்தல் கும்பல், சமூக விரோதி களுடன் விறுவிறுப்பாகச் சண்டையிட்டாலும் ரத்தம்தெறிக்கும் சண்டைக்காட்சிகள் ஒருபோதும் அவர் படங்களில் இடம் பெற்றதில்லை. (மிஞ்சிப்போனால் எம்.ஜி.ஆர் உதட்டில் ஒருதுளி ரத்தம்!) போலீஸாக நடிக்காத பல படங்களிலும் அவர்களின் கடமையைத் தானே எடுத்துக்கொண்டு சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டிவிடுவார் எம்.ஜி.ஆர். வழக்கம்போல க்ளைமாக்ஸில் போலீஸ் வந்து குற்றவாளியைப் பிடித்துச்செல்லும். குற்றவாளிகள் மனம் திருந்துவது அல்லது அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பது ஆகிய இரண்டு வாய்ப்புகள்தான் எம்.ஜி.ஆர் படங்களில் இருந்தன. குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்ல ஒருபோதும் அவர் துப்பாக்கியைக் கையில் எடுத்ததில்லை. சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ படத்திலேயே தமிழ் சினிமாவில் என்கவுன்டர் தொடங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், சமூக விரோதியாகிப்போன தன் மகனைத் திருத்தப் பல வாய்ப்புகள் கொடுத்தும் திருந்தாததால், மனம் வெதும்பி சுட்டுக்கொன்ற கடமை தவறாத ஒரு காவல் அதிகாரியைச் சித்திரித்த அந்தப் படம் என்கவுன்டரைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தவில்லை.

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

தமிழ் சினிமாவில் அதிகம் போலீஸ் வேடங்களை ஏற்று நடித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் தமிழகத்தில் இருந்த ஒரே நேர்மையான போலீஸ் அதிகாரியும் விஜயகாந்த்தான். அதனாலேயே அரசியல்வாதிகள் மற்றும் மேலதிகாரிகளின் சூழ்ச்சியால் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார். ஆனால் ஒரு முக்கியமான வழக்கை விசாரிக்க, தகுதியான யாரும் இல்லாதபோது, பணிநீக்கம் செய்யப்பட்டு, குழந்தைகளுடனும் செல்லப்பிராணிகளுடனும் வீட்டில் பொழுதைக் கழிக்கும் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார். விஜயகாந்தின் போலீஸ் படங்களில் காவல்துறையில் நடக்கும் ஊழல்கள், அரசியல்வாதிகளுக்கும் சமூகவிரோதிகளுக்கும் காவல்துறையுடன் இருக்கும் தொடர்புகள் ஆகியவை மசாலாத்தனத்துடன் சித்திரிக்கப்பட்டன. பின்னாள்களில் பதவி உயர்வு பெற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் ரட்சகராக அவரும் அர்ஜுனும் அவதாரம் எடுத்தபோது துப்பாக்கிகள் சகட்டுமேனிக்கு வெடித்துத்தீர்த்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸின் அதிகாரத்தையும் என்கவுன்டர்களையும் நியாயப்படுத்திய படங்களை எடுத்து, போலீஸ் ஜானர் படங்களுக்கு ‘வலு’சேர்த்த பெருமை இயக்குநர்கள் கௌதம் மேனனையும் ஹரியையும் சேரும். அதிலும் தமிழ் சினிமாவில் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’களை அறிமுகப்படுத்திய கூடுதல் பெருமை கௌதம் மேனனைச் சேரும். ஆங்கிலக் கெட்டவார்த்தைகள், ஹாலிவுட் ஸ்டைல் உத்திகள், காபிஷாப் காதல் ஆகியவை கௌதம் மேனன் போலீஸ் நாயகர்களின் பண்புகள் என்றால் அதிரடி வேகமும் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகளும் ஹரி பட போலீஸ் நாயகர்களின் பண்புகள். ‘போலீஸ் இல்லைடா பொறுக்கி’, ‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ போன்ற வசனங்கள் தமிழுக்கு அவர்கள் அளித்த கொடைகள். இந்த போலீஸ் படங்களில் நாயகனும் துப்பாக்கியும் போட்டி போட்டு அதிகம் பேசுவார்கள். ஆறு புல்லட்டுகளைக் கொண்ட துப்பாக்கியில் எட்டு ரவுண்டுகள் சுட்டிருப்பார்கள். திருநெல்வேலி யிலிருந்து சென்னைக்கு, ஸ்விகி டெலிவரி நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் வந்து சேர்வது, நிறவெறி வசனத்துடன் ஆப்பிரிக்கச் சமூகவிரோதிகளை ஆப்பிரிக்காவுக்கே போய்ப் பிடிப்பது போன்ற பல அற்புதங்களும் நிகழ்த்தப்படும். பலகாலங்களாகவே தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், குறிப்பிட்ட நிறத்தில் இருப்பவர்கள், குறிப்பிட்ட சாதி, மத அடையாளம் கொண்டவர்களே குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்பட்டதால் எளிதில் என்கவுன்டர்களுக்கு இலக்கானவர் களும் இவர்களே.

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

என்கவுன்டர்களை நியாயப்படுத்த இரண்டு காரணங்கள் சொல்லப்படுவது வழக்கம். குற்றவாளிகள் நீண்ட விசாரணைக்குப்பின் சட்டத்தின் ஓட்டையில் நுழைந்து தப்பித்துவிடுவது மற்றும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு ரவுடிகளால் ஏற்படும் அச்சுறுத்தல். இது எவ்வளவுதூரம் உண்மையோ தெரியாது. ஆனால் போலீஸ்காரர்களுக்கு என்று உண்மையிலேயே சில பிரச்னைகள் இருக்கின்றன. வரைமுறையற்ற வேலைநேரம், மேலதிகாரிகளின் ஒடுக்குமுறை, சிறுநீர் கழிக்கக்கூட வழியில்லாமல் பலமணி நேரம் பந்தோபஸ்துப் பணியில் இருக்க வேண்டிய அவலம், தங்கள் உரிமைகளுக்காகச் சங்கம் அமைக்க முடியாத நிலை ஆகியவை. மன அழுத்தத்தால் பல போலீஸார் தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் காவல்துறையில் பெண் போலீஸார்மீது நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. ஆனால் போலீஸாரின் உண்மையான பிரச்னைகள் தமிழ் சினிமாவில் யதார்த்தத்துடன் சித்திரிக்கப்பட்டதில்லை. காவல்நிலையத்தில் உள்ள ஈகோ மோதலைச் சித்திரித்த ‘ராம்’, காவல்துறைத் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தொட்டுக்காட்டிய ‘அஞ்சாதே’, வரைமுறையற்ற வேலைநேரம், பணிச்சூழல் மற்றும் குடும்பத்திலிருந்து வரும் நெருக்கடி ஆகியவற்றைக் காட்சிப்படுத்திய ‘மைனா’, பெண் போலீஸின் அவஸ்தையைச் சொன்ன ‘மிக மிக அவசரம்’ என்று போலீஸாரின் யதார்த்தமான பிரச்னைகளை மிகமிகக் குறைவான படங்களே மிகமிகக் குறைவாகவே சித்திரித்திருக்கின்றன. மற்றபடி ஆகாயத்தில் பறக்கும் சண்டைக்காட்சிகளும் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகளும் இரக்கமற்ற என்கவுன்டர் நியாயப்படுத்தல்களுமே தமிழில் போலீஸ் சினிமாக்கள்.

போலீஸ் வன்முறையையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சொன்ன சினிமாக்களும் உண்டு. தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு தவறுதலான துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இளைஞனின் மரணத்தை ‘மௌனராகம்’ சொன்னது. பழங்குடிகள் மீது போலீஸ் நடத்திய வன்முறைத் தாக்குதலை ‘பேராண்மை’ சொன்னது. அதிகார வர்க்கத்துக்குத் துணைபோய் எளிய மக்களைக் குற்றவாளிகளாக பொய்ப்பழி சுமத்தும் போலீஸின் தந்திரத்தை ‘வழக்கு எண் 18/9’ சொன்னது. போலீஸாரே குற்றச்செயல்களில் ஈடுபடு வதையும் அப்பாவிகளை அதற்காகப் பலிகடா ஆக்குவதையும் ‘மௌனகுரு’ சொன்னது. வன்முறையை ரசிக்கும்விதத்தில் காட்சிப்படுத்தியது, குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரித்தது ஆகியவை ‘விக்ரம் வேதா’ படத்தின் பிரச்னைகள் என்றாலும் என்கவுன்டர்கள் என்பவை போலி மோதல்களே என்பதையும் என்கவுன்டர்களுக்குப் பின்னால் நீதியை நிலைநாட்டுவதைத் தாண்டி வேறு ‘உள்நோக்கங்களும்’ இருக்கின்றன என்பதையும் அந்தப் படம் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

எல்லாவற்றையும்விட காவல்துறையின் வன்முறையையும் என்கவுன்டருக்குப் பின்னாலான உண்மைகளையும் கலை நேர்த்தியுடனும் அரசியலோடும் சித்திரித்த முழுமையான சினிமா என்றால் அது வெற்றிமாறனின் ‘விசாரணை.’ தனக்கு நிகழ்ந்த அநீதியைப் பதிவு செய்த சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலை எடுத்துக்கொண்டு அத்துடன் வேளச்சேரி என்கவுன்டரை இணைத்து வெற்றிமாறன் உருவாக்கிய ‘விசாரணை’, ஈழம், சிறுபான்மையினர் அடையாளங்கள், போலீஸ் வன்முறை, நேர்மையான அதிகாரிகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் எனப் பலவற்றையும் விரிவாகப் பேசியது.

ஆனால் வெற்றிமாறனின் ‘விசாரணை’ தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சிப்பூதான். பெரும்பாலும் போலீஸின் வரைமுறையற்ற அதிகாரத்தையும் என்கவுன்டர் களையும் நியாயப்படுத்தி வரும் சினிமாக்கள்தான் தமிழில் அதிகம். இந்த சினிமாக்களில் மனித உரிமைகள் மட்டுமல்ல மனித உரிமை ஆர்வலர் களும் எள்ளி நகையாடப்படு வார்கள். அதில் உச்சம் சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்.’ என்கவுன்டர்களைக் கேள்விகேட்க வரும் மனித உரிமை ஆணையத் தலைவரே ‘தர்பார்’ போலீஸால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவார். மனித உரிமை ஆணையம் வேறு, மனித உரிமை அமைப்புகள் வேறு என்பது தெரியாமலே ‘மனித உரிமைக் கழகம்’ என்று வசனம் பேசியிருப்பார் அதே ‘தர்பார்’ போலீஸ். (ஒருவேளை ரஜினியின் கழக எதிர்ப்பு அரசியலோ!)

என்கவுன்டர்கள் வெறுமனே மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, அவை சட்டவிரோதச் செயல்களும்கூட. விசாரணை, பிணை, மேல் முறையீடு, கருணை மனு என குற்றம் சாட்டப்படுபவருக்கு சட்டம் அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் அடைத்துவிட்டு சட்டத்தின் வாயைத் தோட்டாவால் அடைக்கிறது என்கவுன்டர். முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு வழங்கப்படும் மரணதண்டனைக்கு எதிரான குரல்களே உலகளவில் அதிகரித்திருக்கும்போது, எந்த விசாரணையும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்கவுன்டர்களை ஆதரிப்பது நியாயமில்லை.

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் தண்டனையையே வழங்கக்கூடாது என்று சொல்லவில்லை; குற்றங்களை ஆதரிக்கவுமில்லை. ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்படும் தண்டனை என்பது சட்ட வாதங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விதிக்கப்படுகிறதே தவிர நூறு சதவிகிதம் உண்மையை உறுதிப்படுத்தி அல்ல. அரசுத் தரப்பின் செயல்பாடு, வழக்கறிஞரின் வாதத்திறமை, நீதிபதியின் மனநிலை, குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி எனத் தீர்ப்பைத் தீர்மானிக்கும் பல விஷயங்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்பு ஓர் உயிரைப் பறித்துவிடக்கூடாது, கொலைக்குத் தண்டனை இன்னொரு கொலையல்ல என்னும் அடிப்படைகளிலேயே மரணதண்டனை எதிர்க்கப்படுகிறது. தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் காவலிலோ சிறையிலோ இருந்து தப்பித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் எத்தனையோ சினிமாக்களில் ‘ஆனந்த ஜோதி’ எம்.ஜி.ஆர் முதல் ‘ராஜாதி ராஜா’ ரஜினி வரை நடித்திருக்கிறார்கள். உண்மைக்குப் புறம்பாக வாய்ப்புகளும் சாட்சியங்களும் மரணதண்டனை விதிக்கக் காரணமாகிவிடுகின்றன என்பதைக் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ சித்திரித்தது.

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

சினிமாக்கள் ஒருபுறம் போலீஸ் வன்முறையை நியாயப்படுத்தினாலும் அதைக் கேள்விக்குள்ளாக்கும் வெப் சீரிஸ்கள் மறுபுறத்தில் உருவாகியிருப்பதும் ஆறுதல். ‘ஃபேமிலி மேன்’, ‘பாதாள் லோக்’ போன்ற இந்தி வெப் சீரிஸ்கள் என்கவுன்டர்களை அம்பலப்படுத்துவதோடு, குற்றவாளிகளும் ‘குற்றங்களும்’ எப்படி உருவாக்கப்படுகின்றனர் என்பதையும் சித்திரிக்கின்றன. சினிமா சாகச நாயகர்களுக்கு மாறாக இந்த வெப் சீரிஸ்களில் இயல்பான பலவீனங்களுடன் காவல்துறையினர் சித்திரிக்கப்படுகிறார்கள். யதார்த்தத்திலும் எப்படி ‘குற்றம்’ உருவாக்கப்படுகிறது என்பதை சாத்தான்குளம் வழக்கில் சி.சி.டிவி காட்சிகள் சொல்கின்றன. இனியாவது தமிழ் சினிமாக்கள் போலீஸ் படங்களில் யதார்த்தத்தைச் சித்திரிப்பதுடன் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

இயக்குநர் வெற்றிமாறன் :

‘`தமிழ் சினிமா என்றில்லை... உலகம் முழுக்கவே எடுக்கப்படும் போலீஸ் படங்களில் லாக்கப் சித்திரவதைகள், என்கவுன்டர்களை நியாயப்படுத்தும் பழக்கம் இருக்கிறது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதித்துறை மூலமாகவே தண்டனை வாங்கித் தருவதுதான் காவல்துறையின் கடமை. ஆனால், உடனடியாக நம்மைத் திருப்திப்படுத்தும் விஷயங்களை அவர்கள் செய்யும்போது பாராட்டத் தொடங்குகிறோம். அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளை உடைப்பதிலிருந்து என்கவுன்டர் வரை நடக்கின்றன. கதாநாயகர்களுக்கு இதுபோன்ற காட்சிகளை திரைக்கதை ஆசிரியர்கள் எழுதவே கூடாது, அதேபோல் கதாநாயகர்களும் இதுபோன்ற காட்சிகளைத் தங்கள் படங்களில் வைக்கச்சொல்லிக் கேட்கக்கூடாது.”

இயக்குநர் வினோத் :

‘` ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இறுதியில் வரும் வாய்ஸ்ஓவர்தான் என்னோட கருத்து. அதிகாரத்துல இருக்கிறவங்களோட உயிருக்குக் கொடுக்குற அதே மரியாதையை காமன்மேனுக்கும் கொடுத்தா இவ்ளோ பேர் பாதிக்கப்படமாட்டாங்க. இது போலீஸ் டிபார்ட்மென்ட்டோட தப்பா, அதை வழிநடத்துற அதிகாரத்தோட தப்பா, இல்ல அவங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவந்த மக்களோட தப்பான்னு நிறைய கேள்விகள் விவாதிக்கப்படணும்.”

வெற்றிமாறன்  - வினோத் - மிஷ்கின் - ரவி ஐ.பி.எஸ்
வெற்றிமாறன் - வினோத் - மிஷ்கின் - ரவி ஐ.பி.எஸ்

இயக்குநர் மிஷ்கின் :

‘`என் படங்களில் நான் அறத்தை மட்டுமே வலியுறுத்துவேன். சமூகத்தில் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் என இரண்டுவகையான மனிதர்களும் இருக்கிறார்கள். என் படத்தில் மோசமான போலீஸ்காரர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேபோல் நல்ல போலீஸுக்கான உரிய மரியாதையும் வழங்கப்படும். சாத்தான்குளத்தில் நடந்ததைப்போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.”

ரவி ஐ.பி.எஸ், சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி

‘`போலீஸைப் பற்றிய அதீத மிகைப்படுத்துதல்கள்தான் சினிமாவில் இருக்கும். ‘காக்க காக்க’, முதல் ‘விசாரணை’ வரை எல்லாப்படங்களுமே இப்படித்தான். இந்தப்படங்களில் காட்டப்படுவதற்கும், உண்மைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒருவர் காவல்துறைக்குள் வரும்போதே அவருக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான அதிகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகுதான் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால் சினிமாக்களைப் பார்த்து போலீஸ்காரர்கள் செயல்படுகிறார்கள் என்று சொல்வதில் உண்மையில்லை.’’