Published:Updated:

`நீங்க சன்னி லியோனா... 150 போன்கால்; தவறான பேச்சு!'- டெல்லி வாலிபருக்கு வந்த சோதனை

கலிலுல்லா.ச

``நான் கூட ஆரம்பத்தில் இது யாரோ நம்ம பையன்தான் ப்ராங் செய்கிறான் என்று நினைத்தேன். பிறகு அடுத்தடுத்து போன்கால்கள் படையெடுக்கத்தான் என்னவென்று புரிந்தது.''

சன்னி லியோன்
சன்னி லியோன்

ஒருவேளை உங்கள் தொலைபேசி எண் ஏதோ ஒரு நடிகரின் எண் என கசியவிட்டு, அதன்மூலம் நாளொன்றுக்கு ஏராளமான போன்கால்கள் வந்தால், உங்கள் உணர்வு என்னவாக இருக்கும். சாப்பிடும்போது, தூங்கும்போது, பேசிக்கொண்டிருக்கும்போது இப்படியாக அந்த போன்கால்கள் உங்களை துரத்திக்கொண்டேயிருந்தால்... அப்படியொரு நிலைமைதான் டெல்லியை இருப்பிடமாகக் கொண்டு வசித்துவரும் புனித் அகர்வாலுக்கு நடந்துள்ளது.

`நீங்கள் சன்னி லியோனா?’ `சன்னி லியோனிடம் பேச வேண்டும்’ என்றெல்லாம் தொந்தரவுகள் வருவதாக கடுப்பாகிறார் அவர். நாளொன்றுக்கு இதுபோல 100 முதல் 150 போன்கால்களை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாக புனித் அகர்வால் வேதனை தெரிவிக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவருக்கு இந்த பிரச்னைதான். என்ன காரணம் என்று தேடியபோது, `அர்ஜூன் பாட்டியாலா’ என்ற இந்திப் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரீலிஸாகியுள்ளது.

இந்தப் படத்தில் சன்னி லியோன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். படத்தில் வரும் காட்சி ஒன்றில் சன்னி லியோன் தனது செல்போன் நம்பரை, கதாநாயகன் தில்ஜித்திடம் கொடுப்பார். பெரும்பாலாக இதுபோன்ற காட்சிகளில் கொடுக்கப்படும் எண்கள் `நாட் இன் யூஸ்’ என்ற நிலையிலே நின்றுவிடும். ஆனால், இதில் அப்படி எதுவும் நடக்காததுதான் புனித் அகர்வாலுக்கு நடந்த துரதிர்ஷ்டம். மேற்கண்ட காட்சியைப் பார்த்த ரசிகர்கள், `இது சன்னி லியோன் போன் நம்பர்தான்’ என்று கால் செய்யத் தொடங்கிவிட்டனர்.

படத்தில் சன்னி லியோன்
படத்தில் சன்னி லியோன்

``ஜூலை 26-ம் தேதிதான் அந்தப் படம் வெளியானது. யாரென்றே தெரியாத பலரிடமிருந்து எனக்கு போன்கால்கள் வந்துகொண்டிருந்தன. `நாங்கள் சன்னி லியோனிடம் பேச வேண்டும்’ என்று அவர்கள் கூறினர். நான்கூட ஆரம்பத்தில் இது யாரோ நம்ம பையன்தான் ப்ராங் செய்கிறான் என்று நினைத்தேன். பிறகு அடுத்தடுத்து போன்கால்கள் படையெடுக்க, `அர்ஜூன் பாட்டியாலா’ படத்தின் இயக்குநர்தான் என்னுடைய நம்பரை சன்னி லியோன் நம்பராகப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது” என்றார்,

மேலும், ``முறைகேடான பல வார்த்தைகளை அந்த கால் செய்பவர்கள் பேசினர். சொல்லமுடியாத செயல்களைச் செய்ய என்னிடம் கோரிக்கைவைத்தனர். நான் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளேன்” என்று குமுறுகிறார் புனித் அகர்வால்.

பாலிவுட் படம்
பாலிவுட் படம்

படத்தை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புனித் அகர்வாலின் இந்த நிலைமை தொடர்பாக உங்கள் கமென்டுகளை இங்கே பதிவிடுங்கள்.