Published:Updated:

`தோளில் ஜோல்னா பை, கையில் கேமரா, நண்பர்கள்!’ - சினிமா அரங்கத்திலே பிரிந்த அருண்மொழியின் உயிர்

நாசர், டெல்லி கணேஷ் தவிர, மற்ற பாத்திரங்களில் விவசாயிகளையே நடிக்க வைத்தார். கதை நாயகனாக விவசாய சங்கத்தலைவர் செல்லமுத்துவை நடிக்க வைத்திருந்தார்.

director arunmozhi
director arunmozhi

மக்கள் பிரச்னைகளைப் படம்பிடித்து, பட்டித்தொட்டியெங்கும் எடுத்துச் சென்று அங்கு திரையிட்டுக் காட்டி அப்பிரச்னையை வெகுமக்களிடம் கொண்டு சென்ற கேமரா போராளி அருண்மொழி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பிரச்னையின் முழு பரிமாணத்தையும் அவர் காட்டத் தவறியதில்லை.

director arunmozhi
director arunmozhi

1959-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பிறந்த அருண்மொழி, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ல் திடீர் மாரடைப்பால் காலமானார்.

நாடகம், சினிமா என வாழ்நாளை அர்ப்பணித்த அருண்மொழி, சென்னையில் நடந்த ஜப்பான் திரைப்பட விழாவில் திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு வெளிவரும்போது அங்கேயே இறந்துள்ளார். சினிமாவை உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்த அருண்மொழியின் உயிர், அவர் நேசித்த சினிமா அரங்கத்திலேயே பிரிந்துள்ளது. தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு கற்றவர். இயக்குநர் கே.பாலசந்தர் படங்கள் சிலவற்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

வணிக சினிமாவின் வசதிக்காகத் தன்னை சமரசப்படுத்திக்கொள்ளாத தற்சார்பு கலைஞன். எளிய மக்களின் குரலாகவே கடைசிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் இயக்குநர் அருண்மொழி.

1983-ல் விவசாயிகள் பிரச்னைகளைக் கூறும் 'காணிநிலம்' படத்தை இயக்கி வெளியிட்டார். அந்தப்படம் பல்வேறு வெளிநாட்டு விருதுகளைப் பெற்றது. அதைத்தொடர்ந்து 1987-ல் ரசாயன உரங்களால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளை மையப்படுத்தி 'ஏர்முனை' படத்தை இயக்கினார். விவசாயிகளிடம் நிதி திரட்டித்தான் அந்தப் படத்தை எடுத்தார் அருண்மொழி.

அந்தப் படத்தில் நாசர், டெல்லி கணேஷ் தவிர, மற்ற பாத்திரங்களில் விவசாயிகளையே நடிக்க வைத்தார். கதை நாயகனாக விவசாய சங்கத்தலைவர் செல்லமுத்துவை நடிக்க வைத்திருந்தார். 'ஏர்முனை' திரைப்படத்தை அவர் இயக்கியபோது சில மாதங்கள் அவருடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜீரோ பட்ஜெட் செலவில் திரைப்படம் எடுப்பது எப்படி என்கிற சூட்சுமம் தெரிந்துகொண்டேன். படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் விவசாயிகளின் வீடுகளில்தான் சாப்பாடு. தோட்ட வீடுகளில்தான் உறக்கம், பம்ப்செட் தண்ணீரில்தான் குளியல் என்று செலவுகளைக் குறைத்து படத்தை எடுத்துக்காட்டியவர்.

director arunmozhi
director arunmozhi

தோளில் ஜோல்னா பை, கையில் கேமரா, கொஞ்சம் பணம், நிறைய நண்பர்கள் அதுதான் அருண்மொழியின் பலம்; அடையாளம். சிறுதுளி, நிலமோசடி, தோழி ஆகிய குறும்படங்களையும் பல ஆளுமைகளையும் ஆவணப்படுத்தியவர். பாக்ஸ் ஆபீஸ் சினிமாக்கள் தேவையில்லை பாமர மக்களுக்கான சினிமா போதும் என்று தன்னை எளிமைப்படுத்திக்கொண்ட காவேரி மைந்தன் அருண்மொழி காற்றில் கரைந்துவிட்டார். ஆனால், அவர் பதியம் போட்டு நடவு செய்த கலை மரங்கள் அவர் பெயரைச் சொல்ல எந்நாளும் சாமரம் வீசும்.