தொடர்கள்
Published:Updated:

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்?

விஜய் முதல் விஷால் வரை
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் முதல் விஷால் வரை

தமிழ் சினிமாவின் தீராப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்கிறது, பட ரிலீஸ்.

டங்களைக் குறித்த தேதியில் ரிலீஸ் செய்வதில் ஏற்படும் சிக்கல் முன்பெல்லாம் அவ்வப்போது நடக்கும். இப்போது, ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படங்களில் ஏதோ ஒன்று பிரச்னைகளுக்குப் பிறகுதான் வெளியாகிறது. பிரசவ வேதனைக்குச் சமமாக ஒரு சினிமாவை வெளியிடுவதில் வலி இருப்பதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கள நிலவரமும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

விஜய்யின் ‘தலைவா’, சர்கார், கமலின் ‘விஸ்வரூபம்’ மட்டுமல்ல... சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, அதர்வாவின் ‘100’, விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’, விஷாலின் ‘அயோக்யா’, நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’, அமலா பாலின் ‘ஆடை’ எனப் பெரிய நடிகர்கள் தொடங்கி, வளரும் நடிகர்கள் வரை ரிலீஸுக்கு முன்பும், பின்பும் நிதி நெருக்கடி, டைட்டில் பிரச்னை, கதைத்திருட்டுப் புகார், ஃபைனான்ஸ் பிரச்னை எனப் பல அக்னிப் பரீட்சைகளைத் தாண்டியே ஒரு படம் ரிலீஸாகிறது. சிறிய படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்காதது பிரச்னை, பெரிய படங்களுக்கு ஃபைனான்ஸ் பிரச்னை பிரதானமாக இருக்க, அவ்வப்போது கதைத்திருட்டும், அரசியல் காரணங்களும் சேர்ந்துகொள்கின்றன. தவிர, சில நேரங்களில் ‘பீட்டா’ போன்ற தன்னார்வ அமைப்புகள் சிலவும் ரிலீஸுக்குத் தடை வாங்கும் அளவுக்கு இருக்கிறது தமிழ் சினிமாவின் நிலை.

‘பாபா’வுக்கு பாமக பிரச்னை, ‘தலைவா’வுக்கு டைட்டிலுக்குக் கீழே இருக்கும் கேப்ஷன் பிரச்னை, ‘இனம்’ படத்திற்கு அரசியல் பிரச்னை என, பிரச்னைகளைச் சந்திக்கும் ஒரு தமிழ் சினிமாவுக்குப் பின்னால், ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தாமதமாக ரிலீஸானதால் ஓடாமல்போன படங்களும் இருக்கின்றன; தாமதமாக வெளியான படங்கள் கோடிகளில் வசூலைக் குவித்த கதைகளும் இருக்கின்றன. பிரச்னைகளைத் தீர்க்க என்ன செய்யலாம்?!

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்?

வரவு எட்டணா; செலவு பத்தணா!

90-களில் பல திறமையாளர்களைத் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, “ஒருகாலத்தில் தயாரிப்பாளர்கள் முடிவு செய்த பட்ஜெட், இன்று கதாநாயகர்கள் கையில் இருக்கிறது. சமீபகாலமாக எல்லாப் படங்களின் ரிலீஸும் ஒரேமாதிரியான பிரச்னைகளைச் சந்திப்பதன் காரணத்தை ஆராய்ந்தால், அதிகப்படியான தயாரிப்புச் செலவுதான் முதல் காரணமாக இருக்கும். முன்பெல்லாம் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது; நடிகர்களின் கால்ஷீட் எளிதாகக் கிடைத்தது. இன்று, வருடத்திற்கு

150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால், நடிகர்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பளமும் உயர்கிறது. தவிர, சினிமாவின் அடிப்படை தெரியாதவர்கள் அதிக படங்களைத் தயாரிப்பதும், இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம்.

ஒரு ஹீரோவின் தேதி கிடைத்ததும், கடன் வாங்கியாவது படத்தை ஆரம்பிக்கிறார்கள். படத்தின் வியாபாரத்தை மீறி, ஒரு படத்திற்குச் செலவு செய்கிறார்கள். அதிகமாக விளம்பரப்படுத்திப் படத்தை விற்கலாம் எனக் களமிறங்குகிறார்கள்... இப்படிப் பல விஷயங்கள் தயாரிப்பாளரை நிலைகுலையச் செய்கின்றன. ஃபைனான்ஸியர்கள்தான் இதற்குக் காரணமா என்றால், அதுமட்டும் இல்லைதான். அவர்களுக்கும் இன்று பேசியபடி வட்டிப் பணம் வருவதில்லை. அவர்கள் பெரும்பாலும் அசலைப் பெறவே, குறிப்பிட்ட படத்தின் ரிலீஸுக்கு முன்பு பேச்சு வார்த்தைக்குத் தயாரா கிறார்கள்.

வருடத்திற்கு நான்கு படங்களைத் தயாரித்த நான், இப்போது படங்களைத் தயாரிப்பதில்லை. பயமாக இருக்கிறது” என்கிறார்.

முற்பகல் செய்யின்...

“தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த என்னுடைய ‘அயோக்யா’ படத்திற்கே ஃபைனான்ஸ் பிரச்னை வந்தது. விஷால் என்கிற ஹீரோவின் படத்திற்கு, வியாபாரம் எவ்வளவு என்று எனக்குத் தெளிவாகத் தெரியும்.

முந்தைய படத்தைக் கடன் வாங்கி ரிலீஸ் செய்துவிட்டு, அதனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தைத் தயாரிக்கும் முன் முந்தைய படத்தின் பிரச்னைகளைக் களைய வேண்டும். அப்படிச் செய்யாமல் போவதால் அடுத்த படங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால்தான், இனி சொந்தத் தயாரிப்பில் நடிப்பதைத் தவிர, வெளிநிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பதில்லை என நான் உறுதியான முடிவெடுத்தி ருக்கிறேன்!” என்கிறார், விஷால்.

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்?

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் வெளியான அமலா பாலின் ‘ஆடை’ படம், அறிவிக்கப்பட்ட தேதியில் இரண்டு காட்சிகளுக்குப் பிறகே திரைக்கு வந்தது. அதற்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர்தான். ‘ஆடை’ ரிலீஸுக்கு முந்தைய நாள் படத்தின் கடன் பிரச்னை பேருருவம் எடுத்தது. ‘ஆடை’ படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர், திரைத்துறையில் நன்கு அறியப்பட்டவர்தான். அவரோ, தயாரிப்பாளரின் எந்தவிதமான பதிலுக்கும் காத்திருக்காமல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். படத்தின் ரிலீஸ் அன்று, சம்பளமாகப் பெற்ற பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்ததோடு, அந்த ஃபைனான்ஸியருக்குப் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரும், அமலா பாலும் தலா ஒரு படம் செய்துகொடுக்க வேண்டும் என்று உறுதி கொடுத்த பிறகே, படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தி ருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இதே மாதிரி, ‘96’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களுக்குத் தனது கால்ஷீட்டுகளை விநியோ கஸ்தர்களுக்குக் கொடுத்து, படத்தின் ரிலீஸுக்கு உதவி யிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் பிரச்னையின்போதும், விஷால் தலையிட்டு ஒரு தொகையைக் கொடுத்து உதவியிருக்கிறார்.

அது நஷ்ட ஈடு இல்லை; ரீ-ஃபண்டு!

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான அருள்பதியிடம் பேசினோம். “ஒரு படத்தின் மீதான கடன், விநியோகஸ்தர் பிரச்னை என எல்லாமே அந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்தே இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் சிலர், அதை நீட்டி மடக்கி ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். சங்கத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்கள், சட்டரீதியாகப் பிரச்னைகளைச் சந்திக்க முடிவு செய்வார்கள். ஆனால், அதெல்லாம் நமக்குச் செய்திகள் மூலம்தான் தெரியவரும்.

ஆனால், ‘விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள்’ என்ற ஒரு தவறான பரப்புரை இங்கே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. தமிழ் சினிமாவில் மூன்றுவிதமான வியாபார முறையில் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குகிறார்கள். கமிஷன் அடிப்படையில் முன்பணம் செலுத்துகிறார்கள். மினிமம் கியாரண்டி மற்றும் அவுட்ரைட் முறையில் பணம் செலுத்தி வாங்குகிறார்கள். அவுட் ரைட் மற்றும் மினிமம் கியாரண்டி முறையில் வணிகம் செய்யும் விநியோகஸ்தர்கள் படம் ஓடினால் கல்லா கட்டுவார்கள். ஓடாவிட்டால், தொகையைத் திருப்பிக் கேட்க மாட்டார்கள்.

கதைத்திருட்டு வழக்கு என்பது இப்போ இல்லை; காலம் காலமாக நடக்கிறது.

கமிஷன் முறையில் விநியோகம் செய்பவர்களுக்குத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்த தொகையைவிடக் குறைவான தொகையே பட வசூல் மூலம் கிடைக்கும்போது, விநியோகஸ்தர்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டிய ‘ரீ-ஃபண்டு’ பணத்தைக் கேட்பார்கள். அதைத்தான் பலரும் ‘நஷ்ட ஈடு’ எனப் பரப்புரை செய்கிறார்கள். தயாரிப்பாளர்களால் நஷ்டமடைந்தவர்கள்தான், அதே தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் ரிலீஸ் பிரச்னை பேச்சுவார்த்தையில் இடம்பெறுகிறார்கள்.

அந்தக் காலத்தில் விநியோகஸ்தர்கள் நியாயமான விலைக்குப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்து, லாப நஷ்டங்களை அனுபவித்தார்கள். அப்போது எந்த நடிகரும் படத்திற்குப் படம் சம்பளத்தை உயர்த்தியதில்லை. எம்.ஜி.ஆர் படங்களோ, சிவாஜி படங்களோ... ‘நல்ல லாபம் கிடைக்கிறது’ என்ற நிலை வரும்போது, தயாரிப்பாளர்களாக முன்வந்து சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள். அதில், படத்தின் வெற்றி தோல்வி முதன்மையாக இருக்கும். இப்போது, அப்படி எதுவும் நடப்பதில்லை. தவிர, இதில் நடிகர்களைக் குற்றம் சொல்லி என்ன ஆகப்போகிறது? தயாரிப்பாளர்கள்தான் ‘இந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் தருகிறேன்’ எனப் போட்டி போட்டுக்கொண்டு தருகிறார்கள். அவரவர் மனசாட்சிப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துவது, நடிகர்களுக்கு லாபத்தில் பங்குகொடுக்கிற ‘ஃபிராஃபிட் ஷேரிங்’ முறைதான்” என்கிறார்.

கதைத் திருட்டு இப்போ இல்லை; காலம் காலமா இருக்கு!

இயக்குநர், நடிகர் பாக்யராஜ் பேசும்போது, “படங்களை ரிலீஸ் செய்யும்போது ஃபைனான்ஸ் சிக்கல் ஆரம்பித்து, கதைத்திருட்டுப் பிரச்னை வரை நானும் சந்தித்திருக்கிறேன். ஒரு படத்தின் கதைக்கரு என்ன என்பது, அப்படத்தின் டிரெய்லர் வரும்போதுதான் தெரியும். இல்லையெனில் டப்பிங்கின்போதும் எடிட்டிங் செய்யும்போதும் தெரியும். கதைத்திருட்டுப் புகாரை சங்கங்களுக்கோ நீதிமன்றத்துக்கோ எடுத்துக்கொண்டு வரும்போது, படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியிருக்கும். அந்தப் புகாரின் சாதக பாதகங்களை ஆராய்ந்து தீர்ப்பு வரும். இதில், ஒரு படத்தை நிறுத்தும் எண்ணம் யாருக்கும் கிடையாது. கதைத்திருட்டு வழக்கு என்பது இப்போ இல்லை; காலம் காலமாக நடக்கிறது. ஸ்ரீதர் சார், கே.பி சார் படங்கள்மீதும் கதைத் திருட்டுப் புகார் வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, ரிலீஸில் இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க சினிமாவை நன்கு அறிந்த தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிக்க வேண்டும்” என்கிறார்.

விஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்?

ஒரு படத்திற்காக வாங்கிய பணத்தை அடுத்த படத்திற்காகப் பயன்படுத்துவது, ஒரு படம் நஷ்டத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், அதைச் சமாளிக்க மற்றொரு படத்தைத் தயாரிக்க ஆயத்தமாவது எனத் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. ஓரிரு படங்கள் வரிசையாக வெற்றியடைந்துவிட்டால் சம்பளத்தைத் தாறுமாறாக உயர்த்திக்கொள்ளும் ஹீரோ ஹீரோயின்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு முறையான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்காத விநியோகஸ்தர்கள் தரப்பிலும் தவறு இருக்கிறது. இந்த மூன்று தரப்புகளும் பிரச்னைகளைத் தீர்த்து ஒரு புள்ளியில் சுமுகமாக இணையும்போதுதான் படத்தின் ரிலீஸ் பிரச்னை தீரும். ஒரு படத்தின் ரிலீஸ் தேதி என்பது, ரசிகர்களிடம் விதைக்கும் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸாகாமல் போகும் பட்சத்தில், நீங்கள் நிராகரிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்பதை எல்லோரும் உணர வேண்டும்!