Published:Updated:

தேன் - சினிமா விமர்சனம்

தேன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தேன் - சினிமா விமர்சனம்

நாயகன் தருண்குமார் ஒருசில காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் கனமான உணர்ச்சிகளைக் கடத்தத் தடுமாறுகிறார்.

தேன் - சினிமா விமர்சனம்

நாயகன் தருண்குமார் ஒருசில காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் கனமான உணர்ச்சிகளைக் கடத்தத் தடுமாறுகிறார்.

Published:Updated:
தேன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தேன் - சினிமா விமர்சனம்
மதள நிலத்தின் பேராசையும் லாப நோக்கமும் மலை மனிதர்களான தொல் குடிகளை இறுக்கிப் பிழிந்து உறிஞ்சி எறிவதே இந்தத் துயரத் ‘தேன்.’

மேற்குத் தொடர்ச்சியின் குறிஞ்சி மலையில் வாழ்ந்து வருகிறார்கள் தருணும் அபர்ணதியும். ஊரை எதிர்த்து, தாங்கள் வணங்கும் தெய்வத்தின் வாக்கை மீறி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். காதலுக்கு சாட்சியாய் குழந்தையும் பிறக்க, மனம் நிறைய மலையை நேசித்தபடி வாழ்கிறார்கள். இன்னொருபக்கம் மலையை ஆக்ரமிக்க நினைக்கும் அரசுத் திட்டங்களுக்கு தருண் தலைமையில் மக்கள் தடைபோடுகிறார்கள். திடீரென அபர்ணதியை நோய் தாக்க, சிகிச்சைக்கு சமதள நிலத்திற்கு வந்தாகவேண்டிய நிலை. அப்படி தேனிக்கு இறங்கி வரும் அந்த வெள்ளந்தி மனிதர்களை அரசு இயந்திரம் ஆதார் உட்பட ஆதாரங்கள் கேட்டுத் துரத்துகிறது. அடையாள அட்டைகள் எதுவுமின்றி சிகிச்சைக்கும் வழியின்றி மூன்று உயிர்களும் அல்லாடுவதே மீதிக்கதை.

தேன் - சினிமா விமர்சனம்

நாயகன் தருண்குமார் ஒருசில காட்சிகளில் நன்றாக நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் கனமான உணர்ச்சிகளைக் கடத்தத் தடுமாறுகிறார். படத்தின் பலம் நாயகி அபர்ணதியும் அவரின் மகளாக நடித்திருக்கும் அனுஸ்ரீயும். பசியை உணர்த்தும் கண்களைக் குழந்தை வெளிக்காட்ட, வலியைக் கடத்தும் உடல்மொழியைச் சிறப்பாகக் கையாள்கிறார் அபர்ணதி. இவர்கள் இருவரின் உறவு வழியே இரண்டாம் பாதி கண்ணீரும் சோகமுமாய் விரிகிறது. ஒரு சில காட்சிகளே வந்தாலும் ‘சூப்பர்குட்’ லெட்சுமணன் யதார்த்தத்தின் நக்கல் பிரதிபலிப்பு.

குறிஞ்சி நிலப்பரப்பு சுகுமாரின் விருப்பத்துக்குரிய ஏரியா. பறவைப் பார்வையில் பிரமாண்டமாய், மரங்களுக்கிடையே பாயும் ஒளிக்கதிராய் எங்கும் ஊடுருவி ஈர்க்கிறது அவரின் கேமரா. சனத் பரத்வாஜின் இசை ஓகே ரகம். லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் ஆங்காங்கே துண்டுதுண்டாய்த் தெரிவது படத்தின் குறை.

தொல்குடிகளை அவர்களின் வேரிலிருந்து பிடுங்கி இடம்மாற்றுவது, அவர்களை வெறும் வாக்குச்சீட்டுப் பெயர்களாக மட்டுமே பார்ப்பது என நடைமுறைச் சிக்கல்களை சமரசமில்லாமல் பேசியதற்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். ஆங்காங்கே நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துக் கதை தைத்திருப்பதால் நம்மாலும் படத்தோடு ஒன்ற முடிகிறது. சுளீரென முகத்திலறையும், சட்டென சிரிப்பு வரவழைக்கும் ராசி.தங்கதுரையின் அரசியல் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

தேன் - சினிமா விமர்சனம்

டப்பிங் உதட்டசைவுக்குப் பொருந்தாதது, போக்குவரத்தே இல்லாத மலையுச்சியில் ரகசியமாய் இயங்கும் தொழிற்சாலை, கண்ணீரை வலிந்து வரவைக்கும் நீண்ட க்ளைமாக்ஸ், நகரத்து மனிதர்கள் என்றாலே கெட்டவர்கள் எனப் பறைசாற்றும் காட்சியமைப்புகள் போன்றவை படத்தின் பிரச்னைகள். நவீன மருத்துவம் எளியவர்கள் அணுகமுடியாத ஆபத்து என்கிற தொனி அழுத்தமாய்த் தென்படுவதைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் குறைகளைத் தாண்டியும் தித்திக்கிறது இந்தத் திரைத்தேன்.