Published:Updated:

வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை!

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிகா

ஓ.டி.டி மிக வேகமாக வளர்வதற்கு இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களாக மாறுவதும் ஒரு முக்கியமான காரணம்!

டந்த வாரம் அமேசானில் வெளியானது ஜோதிகா நடித்த `பொன்மகள் வந்தாள்.’ `தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக...’ என்ற பெருமை `பொன்மகளு’க்குக் கிடைத்திருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். இனி இன்னும் பல படங்கள் இனிவரும் காலத்தில் ஓ.டி.டி ஃப்ளாட்ஃபார்மில் வெளியிடப்படலாம்.

ஓ.டி.டி என்றால்...?

ஓ.டி.டி என்பது Over-the-top-ன் சுருக்கம். திரையில் ஏற்கெனவே வெளியான சினிமாப் படங்களை யூடியூபிலிருந்து டௌன்லோடு செய்து பார்ப்பதுபோல, `தியேட்டரில் வெளியாகாமல் இணையத்தில் மட்டும் வெளியாகும்’ படங்களைக் காசு கொடுத்து, டௌன்லோடு செய்து பார்ப்பதுதான் ஓ.டி.டி. ஒரு பத்திரிகையையோ, புத்தகத்தையோ இன்டர்நெட்டில் பணம் கட்டி, டௌன்லோடு செய்து படிப்பதுபோலத்தான் இதுவும்.

வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓ.டி.டி-க்கு என்ன அவசியம்?

`திரைப்படங்களைப் பார்ப்பதற்கு உலகம் முழுக்கவுமே தியேட்டர்கள் இருக்க, இணையத்தில் சினிமா பார்க்கும் இந்த ஓ.டி.டி-க்கு என்ன அவசியம்?’ என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எங்கோ இருக்கும் சினிமா தியேட்டருக்குச் சென்று பார்ப்பதில் பல சிரமங்கள்... குடும்பத்துடன் செல்ல கார் தேவை; தியேட்டரில் ஸ்நாக்ஸுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பது; இதையெல்லாம் தாண்டி டிக்கெட் செலவு... என ஒரு முறை குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துவர செய்ய வேண்டிய செலவு பல மடங்கு அதிகரித்துவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தவிர, சமீபத்திய நிகழ்வான கொரோனா தொற்று திரையரங்குகளைச் செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படலாம் என்றாலும், `சமூக இடைவெளி’ என்ற பெயரில் ஓர் இருக்கைவிட்டு இன்னோர் இருக்கையில் ஆட்களை உட்கார வைத்தால், தனிநபர்களுக்கு அது பிரச்னை இல்லை. இருவர் அல்லது குடும்பத்துடன் தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவர்கள் அதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், ஏற்கெனவே அதிகமாக இருக்கும் டிக்கெட் கட்டணம் இதனால் இன்னும் உயர வாய்ப்பிருக்கிறது. மேலும், காட்சிமொழிப் படைப்புகளை (Visual Contents) சினிமா தியேட்டர்கள் அன்றி, எல்.இ.டி டி.வி-யிலும், செல்போனிலும் நுகரும் கலாசாரம்தான் தற்போது உலக அளவில் இளைஞர்களிடம் பிரபலமாக இருக்கிறது. அலைச்சல் இல்லை, கட்டணம் குறைவு, குடும்பத்துடன் பார்க்கும் வசதி எனப் பல விஷயங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர் களையும் தற்போது ஓ.டி.டி-யில் படம் பார்க்க வைக்கத் தொடங்கியிருக்கிறது.

வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை!

ஓ.டி.டி-ல் பார்ப்பவர்கள்..!

`கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச்’ (Counterpoint Research) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஓ.டி.டி பார்ப்பவர்களில் 89% பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள்; பெண்களைவிட ஆண்களே (77%) அதிகம் ஓ.டி.டி-யில் பார்க்கிறார்கள். 55% பேர் மெட்ரோ நகரங்களைச் சேர்ந்தவர்கள். பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களே அதிகமாக ஓ.டி.டி-யில் பார்க்கிறார்கள்.

இந்தியாவில் ஓ.டி.டி பயனாளர்களில் 65% பேர் ஸ்மார்ட்போனில்தான் பார்க்கிறார்கள். இந்தி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்டிக் கன்டென்ட்டுகளையே அவர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆர்மேக்ஸ் மீடியா (Ormax Media), வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாவது ஓ.டி.டி-யில் நேரம் செலவிடுபவர்கள் இந்தியா முழுக்க சுமார் எட்டு கோடிப் பேர் இருப்பதாகச் சொல்கிறது. இது ஆண்டுக்கு 20%-25% வளர்ச்சி கண்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிவைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

ஊத், ஜீ5, ஈராஸ் (Voot, Zee5, EROS) போன்ற பலமான இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாக அமெரிக்க நிறுவனங்களான ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் மட்டுமல்லாமல், டிஸ்னியும், ஆப்பிளும்கூட ஓ.டி.டி போட்டியில் குதித்திருக்கின்றன. இது எவ்வளவு தூரம் ஓ.டி.டி சந்தை எதிர்காலத்தில் வளரவிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. `மற்ற நாடுகளைவிட இந்தியாவில் ஓ.டி.டி வாய்ப்பு அதிகமாக இருக்கும்’ என்று கூறுகிறார்கள். அதற்குக் காரணம், இந்திய மக்கள்தொகையில் 65%-க்கு அதிகமானவர்கள் 35 வயதுக்குக் குறைவாக இருப்பது. இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் ஓ.டி.டி வாய்ப்புகளைக் கையகப்படுத்துவதே வெளிநாட்டு நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் முதலாவது காலாண்டில் 16 மில்லியன் புதிய பயனாளர்களைப் பெற்றிருக்கிறது. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 ஆகியவைகூட பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றன.

ஜோதிகா
ஜோதிகா

தியேட்டர் மூடப்பட்டிருப்பது, ஐ.பி.எல் தடைப்பட்டிருப்பது, மக்களுக்கு அதிகமான ஓய்வு நேரம் கிடைத்தது ஆகியவை வேகமான வளர்ச்சிக்குக் காரணிகளாகப் பார்க்கப் படுகின்றன. தவிர, ஓ.டி.டி மிக வேகமாக வளர்வதற்கு இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களாக மாறுவதும் காரணம், ஜியோ போன்றவற்றின் வருகைக்குப் பின்னர் டேட்டா கட்டணங்கள் குறைந்ததும் சாதகமான காரணியாகப் பார்க்கப்படுகிறது.

ஓ.டி.டி-யின் எதிர்காலம்!

`இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில், டிஜிட்டல் கன்டென்ட்டுகளின் பாவனையும், தேவையும் எதிர்வரும் ஆண்டுகளில் மிக அதிக வளர்ச்சியைத் தரும்’ என்று கூறுகிறது கே.பி.எம்.ஜி-ன் (KPMG) ஆய்வு. `டிஜிட்டல் வளர்ச்சி ஓ.டி.டி-யை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும்’ என்று கூறுகிறார்கள். அதாவது, ஓ.டி.டி-யின் பாவனை ஸ்மார்ட்போன்களிலிருந்து பெரிய தொலைக்காட்சித் திரையை நோக்கி நகரும். மொபைல் நிறுவனங்களைப்போல, ஓ.டி.டி-யிலும் அதிக போட்டி இருப்பதால், பயனாளர்களுக்கு நிறையவே அனுகூலங்கள் கிடைக்கும். மாதாந்தரக் கட்டணங்கள் பெருமளவில் குறையவும் வாய்ப்பிருக்கிறது.

K. Bhagyaraj, R. Parthiban, Pandiarajan, pratap pothen, Jyothika
K. Bhagyaraj, R. Parthiban, Pandiarajan, pratap pothen, Jyothika

ஓ.டி.டி-யால் பின்னடைவைச் சந்திக்கும் தியேட்டர்கள்

1973-ம் ஆண்டில் வெளிவந்த படம் `ராஜபார்ட் ரங்கதுரை.’ இதில் ஹீரோ சிவாஜியின் நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு சினிமா தியேட்டரைத் திறக்கிறார் வில்லன் நம்பியார். சினிமா பார்க்கச் செல்கிறார்கள் மக்கள். 90-களின் பிற்பகுதியில் சினிமா தியேட்டர்களுக்கு மாற்றாக, தொலைக்காட்சிகள் வந்தன. டி.வி.டி., வி.சி.டி என அடுத்தடுத்து சினிமா தியேட்டர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இவற்றின் நீட்சியாக இப்போது ஓ.டி.டி வந்திருக்கிறது.

நம் அம்மாக்கள் சினிமாவை ரசித்துப் பார்த்தார்கள்; பிற்பாடு தொலைக்காட்சிக்கு அடிமையாகிப் போனார்கள். நம் தலைமுறையோ கொஞ்சம் சினிமா, கொஞ்சம் டி.வி., கொஞ்சம் செல்போன் என இருக்கிறது. நம் குழந்தைகளோ நிறைய டி.வி., நிறைய செல்போன் என்று இருக்கிறார்கள். ஓ.டி.டி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறையினர் தியேட்டரை நோக்கிச் செல்வதைக் குறைக்கவே வாய்ப்பிருக்கிறது. இனி சினிமா தியேட்டர்களே இல்லாமல் போய்விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஓ.டி.டி என்ற மீடியம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஓ.டி.டி வருமானம் எவ்வளவு?

மேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பட்ஜெட் ரூ.5.5 கோடி. ரூ.5 கோடிக்கு அமேசான் பிரைமுக்கும், ரூ.1.5 கோடிக்கு விஜய் டி.வி சேட்டிலைட் உரிமைக்கும் விற்கப்பட்டிருக்கிறது. இனிமேல் கிடைக்கும் ஓவர்சீஸ் உரிமை மூலமான வருமானம் போனஸ்தான். ஆன்லைன் தளங்களின் பிசினஸ், மார்கெட்டிங் பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் பேசினேன்.

வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை!

“ஓ.டி.டி தளங்களைப் பொறுத்தவரை, இரண்டு வகையான பிசினஸ் இருக்கு. ஒண்ணு AVOD (Advertisement of Video on Demand); இதற்கு மக்கள் பணம் கட்டத் தேவையில்லை. ஆனால், படம் பார்க்கும்போது நிறைய விளம்பரங்கள் வரும். SVOD (Subscription of Video on Demand) என்பது பணம் செலுத்திப் படம் பார்க்கும் முறை. FOD (Free on Demand) என்ற ஒன்றும் இருக்கிறது. அது மூலமாகத்தான் இப்போது அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை மக்களை ஈர்க்கின்றன. எல்லோரும் இதில் படம் பார்த்துப் பழகிய பிறகு, அதிக பணம் செலுத்திப் பார்ப்பதுபோல பிளானை மாற்றுவார்கள். முன்பு டி.டி.ஹெச்-ல் இலவசமாகப் படம் பார்க்க முடிந்தது. பிறகு, பத்து சேனல்களுக்கு ரூ.100 என்றார்கள். இப்போது ஒவ்வொரு சேனலுக்கும் ரூ.3, ரூ.4 என்று வாங்குகிறார்கள். கோடிக்கணக்கான பேர் அதைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் வருமானம் மிகப் பெரிதாக இருக்கும். 99 ரூபாய்க்கு இத்தனை சேனல் என்று சொல்லி, அதை ஒரு கோடிப் பேர் பயன்படுத்தினால், அதில் 99 கோடி வந்துவிடும். பிறகு அதில் விளம்பரங்கள் சேர்ப்பார்கள். அதுபோன்றவைதான் ஓ.டி.டி தளங்களும். ‘பொன்மகள் வந்தாள்’ படம் பார்க்கச் சுமார் 10 லட்சம் புது சப்ஸ்கிரைபர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் 100 ரூபாய் கட்டியிருந்தால், 10 கோடி ரூபாய் வந்திருக்கும். அமிதாப் பச்சன் நடித்த ‘குலாபோ சிதாபோ’ அமேசானில் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்க்க 50 லட்சம் புது சப்ஸ்கிரைபர்கள் வருவார்கள். இந்தியாவில் 30 கோடிப் பேரிடம் இன்டர்நெட் இருக்கிறது. இந்த 30 கோடிப் பேரும் ஓ.டி.டி-யில் படம் பார்த்தால், வருமானம் அமோகமாக இருக்கும்’’ என்றார் அவர்.

- உ.சுதர்சன் காந்தி

பங்கு நிறுவனங்களுக்கு பாதிப்பா?

வளர்ந்துவரும் ஓ.டி.டி தொழில்நுட்பம்! - சினிமா பயணிக்கும் புதிய பாதை!

பொழுதுபோக்குத்துறையில் சினிமா தியேட்டர்களை முக்கியமாக நம்பித் தொழில் செய்யும் நிறுவனங்களென்றால், பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் லீசர் நிறுவனங்கள்தான். இந்த இரு நிறுவனங்களின் பங்கு விலையும் கடந்த திங்கள்கிழமை அன்று ஐந்து சதவிகிதத்துக்குமேல் விலை உயர்ந்து வர்த்தகமாகின. ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, `ஜூலை முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்படத் தொடங்கும்’ எனத் தகவல் வெளியானதால், இந்த விலையேற்றம் நடந்திருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்த காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், இந்த நிறுவனங்களுக்கு வருமானம் இருக்காது என்று நினைத்துப் பலரும் இந்த நிறுவனப் பங்குகளை விற்றனர். இதனால் இந்தப் பங்குகளின் விலை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 48%, ஐநாக்ஸ் நிறுவனப் பங்கின் விலை 41% குறைந்திருக்கிறது. இந்த நிலையில், `இப்போது ஓ.டி.டி படங்கள் வர ஆரம்பித்திருப்பது இந்த நிறுவனத்துக்கு நீண்டகாலத்தில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்கிறார்கள் பங்கு ஆய்வாளர்கள்.