Published:Updated:

துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை!

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது 'குரூப்' சினிமா. 37 ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் நடந்த மிகப்பெரிய குற்றச் சம்பவத்தை அடிபடையாகக் கொண்டது இந்த திரைப்படம்.

1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அதிகாலையில் மாவேலிக்கரை - செங்கன்னூர் சாலையை ஒட்டிய வயல் வெளியில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அப்பகுதியினர் அதுபற்றி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். அப்போது காருக்குள் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தியபோது எரிந்த கார் பாஸ்கர பிள்ளை என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. பாஸ்கரபிள்ளையிடம் விசாரித்தபோது அந்த கார் தன்னுடையது என ஒப்புக்கொண்டார். மேலும் காரில் இறந்துகிடந்தது தன்னுடைய மைத்துனர் சுகுமார குரூப் எனவும் தெரிவித்தார் பாஸ்கரபிள்ளை. ஆனால் பிரேத பரிசோதனையில் அது சுகுமார குரூப்பின் உடல் அல்ல என தெரியவந்தது.

இன்று ரிலீஸ் செய்யப்பட்ட குரூப் சினிமா
இன்று ரிலீஸ் செய்யப்பட்ட குரூப் சினிமா

இதையடுத்து காரின் உரிமையாளர் என்ற முறையில் பாஸ்கர பிள்ளையை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாஸ்கர பிள்ளையின் உடலில் சில இடங்களில் தீ காயங்கள் இருந்ததை போலீஸார் கவனித்தனர். அதுமட்டுமல்லாது, அவரது வீட்டில் சென்று பார்த்தபோது இறந்தவரின் வீடுபோல் இல்லாமல் இருந்தது. மேலும் கார் தீப்பிடித்து எரிந்த இடத்தில் ஒரு கை உறையை (கிளவுஸ்) போலீஸார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவரின் மூச்சுக்குழாய்க்குள் தீ எரிந்த புகை செல்லவில்லை, எனவே கார் எரிவதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. இது அனைத்தும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கார் எரிந்த சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு காவல் நிலையத்தில் மேன் மிஸ்ஸிங் வழக்கு ஒன்று பதிவானது. பிலிம் ரெப்ரசென்றேற்றிவ் ஆன சாக்கோ என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் புகாரளித்தனர். இதையடுத்து விசாரணை நடத்தி காரில் இருந்து மீட்கப்பட்ட உடல் சாக்கோவினுடையது எனக் கண்டறியப்பட்டது. சாக்கோவின் உடல் பாஸ்கர பிள்ளையின் காரில் வந்தது எப்படி, அவரைக் கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

போலீஸால் பிடிக்க முடியாத சுகுமார குறுப்பு
போலீஸால் பிடிக்க முடியாத சுகுமார குறுப்பு
`காயம்பட்ட அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!'-சர்ச்சை காட்சிக்கு துல்கர் சல்மான் விளக்கம்

போலீஸார் தங்கள் பாணியில் பாஸ்கர பிள்ளையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல்கள் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஸ்கர பிள்ளையின் வாக்குமூலம் இதுதான். பாஸ்கர பிள்ளையின் மைத்துனர் சுகுமான குரூப் அபுதாபியில் மனைவியுடன் வசித்து வந்தார். அவரின் மனைவிக்கு நர்ஸ் வேலை. இதற்கிடையே திடீர் பணக்காரன் ஆக வேண்டும் என யோசித்திருக்கிறார் சுகுமார குரூப். அபுதாபியில் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் மூன்று லட்சம் திர்ஹம் ரிட்டன் பணம் மனைவிக்கு கிடைக்கும் வகையில் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார் சுகுமார குரூப். தான் இறந்ததாக இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப வைத்தால் அந்த பணம் மனைவிக்கு கிடைக்கும். பின்னர் அந்த பணத்தில் நினைத்த வாழ்க்கை வாழலாம் என கணக்குப்போட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த திட்டத்துடன் கேரளா வந்த அவர் தனது மைத்துனர் பாஸ்கர பிள்ளை, அபுதாபியில் தன்னுடன் வேலை செய்த நம்பிக்கைக்குரிய நண்பன் சாகு, டிரைவர் பொன்னப்பன் ஆகியோர் உதவியோடு இந்த திட்டத்தை அரங்கேற்றும் படலத்தில் இறங்கினார். தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரது உடலைக் காட்டி, தான் இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என முதலில் திட்டம் போட்டனர். அதற்காக 1984-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி ஆலப்புழா மெடிக்கல் காலேஜில் சென்று ஒரு உடலை திருடுவதற்காக முயன்றார்கள். அது வெற்றி பெறவில்லை.

குரூப் சினிமாவில் துல்கர் சல்மான்
குரூப் சினிமாவில் துல்கர் சல்மான்

எனவே தன்னைப்போல சாயல் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்து கொலை செய்யலாம் எனத் திட்டமிட்டார் சுகுமார குரூப். அதற்காக இரண்டு கார்களில் ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் ஆட்களைத் தேடியிருக்கிறார்கள். இதற்காக இரவு நேரத்தில் அதிக தூரம் இரண்டு கார்களில் பயணித்தார்கள். ஆனாலும் சுகுமார குரூப்பைப் போல ஒரு ஆள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டுக்குக் காரைத் திருப்பியிருக்கிறார்கள். திரும்பி வரும் வழியில் ஒருவர் இவருடைய காரை நோக்கி கை காட்டி லிப்ட் கேட்டார். அவர் சுகுமார குரூப்பைப் போல இருந்ததால் உடனே அவருக்கு லிப்ட் கொடுத்தார்கள். காரில் ஏறிய அவர் தன் பெயர் சாக்கோ என்றும், பிலிம் ரெப்ரசென்டேட்டிவாக இருப்பதாகவும், வீட்டுக்குப் போவதற்காக வண்டிக்குக் காத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் சுகுமார குரூப்பைப் போல இருந்ததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டனர். காரில் சென்று கொண்டிருக்கும்போதே `மது குடிக்கிறீங்களா?' எனக் கேட்டிருக்கிறார்கள். சாக்கோ வேண்டாம் எனக்கூறவே வலுக்கட்டாயமாக மயக்கமருந்து கலந்த மதுவை சாக்கோவுக்கு கொடுத்திருக்கிறார்கள். சாக்கோ மயக்க நிலைக்கு சென்ற உடனே பின்னர் இருந்த பாஸ்கர பிள்ளை துண்டைக் கொண்டு (டவல்) சாக்கோவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார். பின்னர் சாக்கோவின் உடலை சுகுமார குரூப்பின் மனைவி வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு அறையில் வைத்து சாக்கோவின் உடலுக்கு சுகுமார குரூப்பின் ஆடைகளை அணிவித்தனர்.

சுகுமார குரூப்பின் முழுமையடையாத வீடு
சுகுமார குரூப்பின் முழுமையடையாத வீடு

அவரது உடலை எங்கு போடலாம் என யோசித்தபடி மீண்டும் இரண்டு கார்களில் பயணித்தனர். மாவேலிக்கரை -செங்கன்னூர் சாலை ஓரத்தில் காரை நிறுத்தி, டிரைவர் இருக்கையில் சாக்கோவின் உடலை வைத்தனர். பின்னர் காரை வயலில் தள்ளிவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த விட வேகமாக பற்றியதால் பாஸ்கர பிள்ளையின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. தீக்காயத்தை அணைக்க முற்பட்டபோது பாஸ்கர பிள்ளையின் கையிலிருந்த கிளவுஸ் கழன்று கீழே விழுந்திருக்கிறது. அதுதான் போலீஸுக்குத் துருப்புச்சீட்டாக அமைந்தது. பின்னர் சாகு, டிரைவர் பொன்னப்பன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அதில் சாகு அப்ரூவராக மாறினார்.

பாஸ்கரபிள்ளை, டிரைவர் பொன்னப்பன் ஆகிய இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆனால், சாக்கோ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகுமார குரூப் எங்கே சென்றார் என போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. 1989 மார்ச் 2-ம் தேதி மாவேலிக்கரை ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு சுகுமார குரூப்புக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்தது. ஆனாலும் இன்றுவரை அவரைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

தான் இறந்ததாக விமானப்படையையே ஏமாற்றியிருக்கிறார் சுகுமார குரூப். அவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் குரூப் எனவும், ப்ரீ டிகிரி தோல்வி அடைந்த நிலையில் விமான படையில் பணிக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு பணி செய்ய முடியாததால் ஊருக்கு வந்தவர் தான் மரணம் அடைந்துவிட்டதாக போலி டாக்குமெண்ட் தயாரித்து விமானப்படைக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பின்னர்தான் கோபாலகிருஷ்ணன் குரூப் என்ற தனது பெயரை சுகுமார குரூப் என மாற்றிக் கொண்டார் என்கிறார்கள்.

குறுப்பு சினிமா காட்சி
குறுப்பு சினிமா காட்சி

பல மர்மங்கக் நிறைந்த சுகுமார குரூப்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட `குரூப்' என்ற சினிமாவை ஸ்ரீநாத் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார். அதில் துல்கர் சல்மான் கதநாயகனாக நடித்திருக்கிறார். சுகுமார குரூப்பால் கொலை செய்யப்பட்ட சாக்கோவின் குடும்பத்தினர் இந்த சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஒரு கொலைகாரனை ஹீரோவாக காட்டக்கூடாது" என சாக்கோவின் மனைவி சாந்தம்மா, மகன் ஜிதின் ஆகியோர் தெரிவித்தனர். இதை அடுத்து ஒரு ஆண்டுக்கு முன்பு குரூப் சினிமா சாக்கோவின் குடும்பதினருக்கு மட்டும் திரையிட்டு காட்டப்பட்டது.

இப்போதும் சோசியல் மீடியாவில் குரூப் சினிமாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சண்டை நடக்கிறது. 'குரூப்' சினிமாவை கலையாக பார்க்க வேண்டும் என்று ஆதரவாக ஒரு தரப்பினரும், கொலைக்காரனுக்கு ஆதரவான படம் என எதிப்பாக மற்றொரு தரப்பினரும் களமிறங்கியிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு