Published:Updated:

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

கோலிவுட்
பிரீமியம் ஸ்டோரி
கோலிவுட்

அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும்குழப்பமும் தமிழ் சினிமாவைச் சூழ்ந்திருக்கிறது.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும்குழப்பமும் தமிழ் சினிமாவைச் சூழ்ந்திருக்கிறது.

Published:Updated:
கோலிவுட்
பிரீமியம் ஸ்டோரி
கோலிவுட்
கலக்கத்தில் இருக்கிறது கோலிவுட். கண்களுக்கு எட்டிய தூரம்வரை நிலைமை சரியாகும், ஷூட்டிங்குகள் ஆரம்பமாகும், தியேட்டர்கள் திறக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

அடுத்து என்ன என்கிற பதில் தெரியாத கேள்வியும், பெரும்குழப்பமும் தமிழ் சினிமாவைச் சூழ்ந்திருக்கிறது.

சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகள் ஓரளவுக்கு இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டன. கடைகள் திறக்கப்படுகின்றன. வியாபாரங்கள் நடக்கின்றன. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரணமான சூழல் முடியும்வரை தியேட்டர்களைத் திறப்பதற்கோ ஷூட்டிங் நடத்தவோ அனுமதி கிடைக்காது என்பதால் சினிமாத்தொழில் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, ‘க/பெ ரணசிங்கம்,’ சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’, விஷாலின் ‘துப்பறிவாளன் -2’, ஆர்யாவின் ‘டெடி’, ராணா- விஷ்ணு விஷாலின் ‘காடன்’ எனப் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் முழுவதுமாக ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்துவிட்டன. கிட்டத்தட்ட ரிலீஸுக்கு ரெடி என்னும் பட்டியலில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவை தவிர, 70 சதவிகிதத்துக்கும் மேல் படப்பிடிப்புகள் முடிந்த பல படங்கள் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கின்றன. தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்ததுவிட்டது. ‘கேஜிஎஃப்-2’ படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. அனிமேஷன் வேலைகள்தான் அதிகம் இருக்கின்றன. விக்ரமின் ‘கோப்ரா’ 70 சதவிகிதம் முடிந்துவிட்டது. பாரிஸில்தான் க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க வேண்டும் என கிரியேட்டிவ் டீம் முடிவெடுத்திருப்பதால் லாக்டெளன் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்... கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியின் ‘துருவ நட்சத்திரம்’ 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. ‘பொன்னியின் செல்வன்’ முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிந்துவிட்டது. ரஜினியின் ‘அண்ணாத்தே’ படத்துக்கான ஷூட்டிங்கில் இன்னும் இரண்டு ஷெட்யூல்களே முடிக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி சினிமாவில் 60 சதவிகிதத்துக்கும் மேல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து தயாரிப்பில் இருக்கும் தமிழ்ப்படங்களின் மதிப்பே 3,000 கோடி ரூபாயைத்தாண்டும் என்கிறார்கள்.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

தியேட்டர்கள் எப்போது திறக்கும்?

தமிழ் சினிமாவின் முக்கியப் பிரபலங்கள் சிலரிடம் பேசினேன். “தமிழ்நாட்டில் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே அக்டோபரில் திறந்தாலும் 30 சதவிகித மக்கள்தான் தியேட்டருக்குள் அனுமதிக் கப்படுவார்கள் என்னும் நிலை. 30 சதவிகித பார்வையாளர்களுடன் ஒருபடத்தை ரிலீஸ் செய்தால் என்ன லாபம் வரும்? தியேட்டர்களுக்கான பராமரிப்புச் செலவுகளுக்கே இந்தப் பணம் சரியாக இருக்கும். அவர்களுக்கும் லாபம் கிடைக்காது. தயாரிப்பாளர்களும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்பு பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்கள் தமிழக தியேட்டர் களை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தன. இன்று தமிழ் சினிமா தமிழ் நாட்டில் மட்டுமே செய்யக் கூடிய வியாபாரமாக இல்லை; சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகளவிலான மார்க்கெட் இருக்கிறது. அதனால் உலகம் முழுக்கவே தியேட்டர்கள் திறந்தால் மட்டுமே படங்களை ரிலீஸ் செய்ய முடியும். அதனால் இப்போதைய சூழலில் கிறிஸ்துமஸ் வரை படங்கள் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியே அக்டோபரில் தியேட்டர்களைத் திறந்தாலும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் 25 முதல் 40 சதவிகிதம் வரை நஷ்டத்தைச் சந்திக்கத்தயாராக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்ய நடிகர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவு’’ என்கிறார்கள் சினிமாத்துறையினர்.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

இப்போது துபாயில் தியேட்டர்கள் திறக்கப்பட்டி ருக்கின்றன. மக்களை வரவைப்பதற்காக இலவச டிக்கெட்டுகள் தரப்படுகின்றன. ஆனாலும் மக்கள் வரவில்லை. அதேபோலத்தான் அமெரிக்காவிலும். தியேட்டர்கள் திறக்கலாம் என அரசு சொன்னாலும், அங்கே தியேட்டர்கள் முழுவதுமாகத் திறக்கப்படவில்லை. 25 சதவிகிதம் அதாவது அதிகபட்சம் 100 பேர்தான் தியேட்டருக்குள் இருக்க வேண்டும், கதவுகள் திறந்துவைக்கப்பட்டிருக்க வேண்டும், கழிவறைகளுக்குள் ஒரே நேரத்தில் எல்லோரும் போகக்கூடாது எனப் பலவிதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி தியேட்டருக்கு மக்களும் வரத்தயாராக இல்லை. தியேட்டர் உரிமையாளர்களும் தியேட்டர்களைத் திறக்கத் தயாராக இல்லை. ஜூன் இறுதியில் அல்லது ஜூலையில் அங்கே தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள். ஆனால், இந்த முடிவும் இறுதிநேர மாற்றங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கும்.

நம்பிக்கையூட்டுகிறதா புதுப்பட அறிவிப்புகள்?!

தியேட்டர்கள் திறக்கவில்லை, படப் பிடிப்புகள் நடக்கவில்லை, படங்கள் ரிலீஸாகவில்லை என சினிமா உலகம் முடங்கியிருந்தாலும், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் அடுத்த படப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டே யிருக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம், கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ என அடுத்தடுத்த படங்களுக்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. ஆனால், பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடக்கவில்லை என்கிறார்கள்.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

இந்த லாக்டெளனில் புதுப் படங்களுக்கான அறிவிப்பு எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், ‘மாஸ்டர்’ படத்தின் இணைத்தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், தன்னுடைய அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். விக்ரம் - த்ருவ் விக்ரம் நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் படம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி யிருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘மாஸ்டர்’ படம் ரிலீஸாகாமல் முடங்கியிருப் பதால் விநியோகஸ்தர்கள் சிலர் பணத்தை லலித்குமாரிடம் கேட்க, அவர்களை சமாதானப்படுத்தவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்கிறார்கள். மிச்சமிருக்கும் ‘கோப்ரா’ படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க வேண்டும். அடுத்து ‘பொன்னியின் செல்வன்’. ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கான சில நாள் ஷூட்டிங், டப்பிங் பணிகள் முடிக்கவேண்டும் என விக்ரம் இந்த புராஜெக்ட்களில் இருந்து வெளியே வரவே இன்னும் ஒரு வருடத்துக்கு மேலாகும் என்கிறார்கள். அதனால், புதுப்பட அறிவிப்புகளைப் பொறுத்தவரை அவற்றின் பின்னால் வேறு விஷயங்கள் ஒளிந்திருக்கின்றனவே தவிர அவை நம்பிக்கையூட்டுபவையாக இல்லை என்கிறார்கள் சினிமாத்துறையினர்.

ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும்?

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா எனப் பெரிய நடிகர்கள் எல்லோருமே ஜனவரிக்கு மேல் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிடுமாறு சொல்லிவிட்டார்கள். நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் ஷூட்டிங்குக்கு வரத் தயாராகவே இருக்கிறார்கள் என்கிறார்கள், அவர்களின் மேனேஜர்கள். ஆனால், நடிகர்கள் தயங்கக் காரணம், படப்பிடிப்பில் யாருக்காவது கொரோனா வந்தால், செய்தியே நடிகரை மையப்படுத்திதான் வெளியாகும் என்பதால் டிசம்பர் வரை ஷூட்டிங் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பெரிய நடிகர்கள் ஷூட்டிங் வேண்டாம் எனச் சொல்ல, அடுத்தகட்ட நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஷூட்டிங் பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்கிறார்கள். டாப் 10 ஹீரோக்களைத் தவிர்த்து அடுத்தகட்ட ஹீரோக்கள் ஷூட்டிங்போகத் தயாராகவே இருக்கிறார்கள். காரணம், வருமானம் இல்லை. ஆனால், படப்பிடிப்புக்கான அனுமதி இல்லாமல் எப்படி ஷூட்டிங்கைத் தொடங்குவது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஷூட்டிங் தொடங்க அனுமதி கிடைக்குமா?

ஆந்திராவில் ஷூட்டிங் நடத்த அனுமதிஅளிக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் ஷூட்டிங் நடந்த அனுமதிகிடைக்கும் எனத் தெரிகிறது. ஆனால், புதிதாக பூஜைபோட்டுப் படம் தொடங்க அனுமதி கிடைக்காது.

‘ஏற்கெனவே படப்பிடிப்பு தொடங்கி முடியும் தறுவாயில் இருக்கும் படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு ஷூட்டிங் நடத்த அனுமதிக்கப்படும். அந்தப் படங்களின் பட்டியலைக் கொடுங்கள்’ என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் தமிழக அரசு கேட்டிருக்கிறது.

சென்னையில் தற்போது டிவி சீரியல் ஷூட்டிங்குகள் தொடங்கப்பட்டு நடந்துவருகின்றன. சன், விஜய், ஜீ என அனைத்து சேனல்களும் சீரியல் ஷூட்டிங்குகளைத் தொடங்கியிருக்கின்றன. இண்டோர் ஷூட், 60 பேருக்கு மட்டுமே அனுமதி, எல்லோரும் வீட்டிலிருந்து உணவு கொண்டுவர வேண்டும் அல்லது பார்சல் சாப்பாடுதான் எனப் பல நிபந்தனைகளுடன் இவை நடத்தப்படுகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வரும் எல்லோருக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை. அதேபோல் காலை, மதியம் என இரண்டு வேலைகளிலும் வெப்பநிலைப் பரிசோதனை செய்யவேண்டும் எனச் சொல்லப்பட்டி ருக்கிறது. முறையான இன்ஷூரன்ஸ் இல்லாத யாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களுக்குத் தயாரிப்புநிறுவனம் 40 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதேபோல், இப்போதுவரை நடிகர் நடிகைகளுக்கு இடையேயான நெருக்கமான காட்சிகளும் எடுக்கப்பட வில்லையாம்.

டிவி சீரியல் ஷூட்டிங்குகளின் நிலைமை இப்படியிருப்பதால், படத் தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்தாலும், ஷூட்டிங்கை நடத்த வேண்டுமா என்கிற யோசனையில் இருக்கிறார்கள். அப்படியே படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும் நடிகர்களால் அச்ச உணர்வு இல்லாமல், இயல்பாக நடிக்க முடியுமா என்பதிலும் சந்தேகங்கள் இருப்பதால் ஷூட்டிங் தொடங்கியும் பயனில்லாமல் போய்விடக்கூடாது என்பது எல்லோரின் கவலையுமாகவும் இருக்கிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ் வியாபாரம் லாபம் கொடுக்கிறதா?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இதுவரை பெரிய நடிகர்கள் நடித்து, கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நேரடியாக ரிலீஸாகியிருக்கும் ஒரே படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப்படம் மொத்தமாக 4-5 கோடி ரூபாயில் எடுத்து முடிக்கப்பட்டு அமேசானுக்கு 5.5 கோடி ரூபாய்க்கும், விஜய் டிவிக்கு தொலைக்காட்சி உரிமையாக 1.5 கோடி ரூபாய்க்கும் விற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. லாபமாகப் பார்த்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு 1-2 கோடி ரூபாய்வரைதான் என்கிறார்கள். புரமோஷன் செலவுகளை அமேசான் நிறுவனமே பார்த்திருக்கிறது. அடுத்து கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து தயாரித்திருக்கும் ‘பெண்குயின்’ படமும் ஒரு கோடி ரூபாய் லாபம் வைத்துதான் விற்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இவை திரையரங்கில் வெளியாகி ஹிட் ஆகியிருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

ஓடிடி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் புதிய படங்கள் லிஸ்ட்டில் வருடத்துக்கு அதிகபட்சமாக 20 படங்களுக்குள்தான் வாங்குகிறார்கள். அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள்தான் பெருமளவில் படங்களை வாங்குகின்றன. சன் டிவி தான் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ஓடிடி உரிமையை வாங்குவது கிடையாது.

ஓடிடி நிறுவனங்கள் 5 அல்லது 10 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படங்களை வாங்குகின்றன. அமேசான் நிறுவனம் ‘தர்பார்’ படத்தை வாங்கியிருக்கிறது என்றால், இந்தியாவில் மட்டும்தான் அமேசானில் இந்தப்படம் வெளியாகும். வெளிநாடுகளில் அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டென்ட்டுகொட்டாய் எனப் பல தளங்களிலும் இந்தப்படத்தை விற்கும் உரிமை தயாரிப்பாளருக்கு உண்டு. 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் அந்தப்படத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கலாம்.

தியேட்டரா, ஓ.டி.டியா? திசை தேடும் கோலிவுட்!

தியேட்டரில் படத்தை வெளியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் மொத்தப்பணமும் வந்துவிடும். ஆனால், ஓடிடியில் அப்படி இல்லை. அமேசானைத் தவிர்த்து மற்ற தளங்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் வரை ஒப்பந்தம் செய்த தொகையைப் பிரித்துப் பிரித்துத் தருகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பணம் விரைந்து வந்துசேர்வதில்லை என்கிற குறையிருக்கிறது.

அதேபோல், 50 கோடி, 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கும் படங்களால் நிச்சயம் ஓடிடி-யில் லாபம் கிடைக்காது என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள். ‘`முதலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பெரிய நடிகரின் படத்தைப் பெருந்தொகைக்கு வாங்குவார்களே தவிர, தொடர்ந்து வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் கிடைக்காது. ஒரே விஷயம் என்னவென்றால், படம் சுமாராக இருந்தாலும் ஓடிடிக்கு விற்றால் ஒப்பந்தம் செய்த பணம் வந்துவிடும். ஆனால், தியேட்டர் ரிலீஸில் அப்படியில்லை. படத்துக்கான விமர்சனங்களைப் பொறுத்து இது மாறுபடும். எப்படியிருந்தாலும் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகாது. அவர்களின் சம்பளமே பல கோடிகள். அவ்வளவு பணம் கொடுத்துப் பெரிய படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் இப்போதைய சூழலில் தயாராக இல்லை என்பதே உண்மை’’ என்கிறார்கள்.

படங்கள் ஓடிடி-யில் வெளியாவதால் அரசுக்கு நஷ்டமா?

வெளியில் இருந்து பார்த்தால் அரசுக்கு நஷ்டம் என்பதுபோலத்தான் தெரியும். ஆனால், இதில் உண்மையில்லை. ஓடிடி-யில் நேரடி ரிலீஸ் என்பது மிகவும் குறைவு என்பதோடு, பெரிய நடிகர்களின் படங்கள் இப்படி நேரடி ரிலீஸ் ஆகப்போவதில்லை என்பதால் இதனால் கேளிக்கை வரி இழப்பு ஏற்படாது என்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் டிசம்பர், 2020 வரை சினிமா உலகம் இயங்குவது கடினம். தியேட்டர்கள் திறப்பு, பெரிய படங்களுக்கான ஷூட்டிங் என எல்லாமே ஜனவரி 2021-ல் இருந்தே தொடங்கும். புத்தாண்டு வரை பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் கோலிவுட்டின் குரலாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism