Published:Updated:

"மணிரத்னம் அழைப்புக்காக வெயிட்டிங்!"- `பொன்னியின் செல்வன்' கெட்டப்பில் தியேட்டரில் கலக்கிய பெண்கள்

பொன்னியில் செல்வன் கெட்டப்பில் படம் பார்க்க வந்த பெண்கள்

"மேக்கப் முடிச்சுட்டு கண்ணாடில முகத்தப் பார்த்தா, அதுல எங்க முகம் தெரியல, நிஜ கேரக்டர்கள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தோம். தியேட்டர்ல படம் பார்க்க வந்திருந்தவங்க எங்களைச் சூழ்ந்துக்கிட்டாங்க."

"மணிரத்னம் அழைப்புக்காக வெயிட்டிங்!"- `பொன்னியின் செல்வன்' கெட்டப்பில் தியேட்டரில் கலக்கிய பெண்கள்

"மேக்கப் முடிச்சுட்டு கண்ணாடில முகத்தப் பார்த்தா, அதுல எங்க முகம் தெரியல, நிஜ கேரக்டர்கள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தோம். தியேட்டர்ல படம் பார்க்க வந்திருந்தவங்க எங்களைச் சூழ்ந்துக்கிட்டாங்க."

Published:Updated:
பொன்னியில் செல்வன் கெட்டப்பில் படம் பார்க்க வந்த பெண்கள்
சோழர்கள் வரலாற்றை இளைய தலைமுறையினரும், உலக மக்களும் அறிந்துகொள்வதற்காக 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மேக்கப் போட்டு அந்த கெட்டப்பிலேயே தியேட்டரில் படம் பார்த்த சுவராஸ்ய சம்பவம் கும்பகோணம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக, கெட்டப் சேஞ்ச் செய்த பெண்கள் மணிரத்னம் பாராட்டுக்காகக் காத்திருப்பதாக கோரஸாகக் கூறுகின்றனர்.
பொன்னியின் செல்வன் கெட்டப்பில் கும்பகோணம் தியேட்டருக்கு வந்த பெண்கள்
பொன்னியின் செல்வன் கெட்டப்பில் கும்பகோணம் தியேட்டருக்கு வந்த பெண்கள்

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் ’பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கத் தொடங்கியதுமே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. உலகமே வியக்கும் வகையில் ஆட்சி செய்து தமிழர்களின் பெருமையை எங்கும் பரவச் செய்த சோழ மன்னர்கள் நீர்மேலாண்மை, கட்டடக்கலை, வணிகம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதற்கான அடையாளங்கள் இப்போதும் நம் முன்னே இருக்கின்றன.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் சோழர்களின் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அழகும் கம்பீரமும் குறையாமல் வானுயர்ந்து நிற்கிறது. பெரியகோயில் கட்டுமானம் குறித்து உலக மக்கள் ஆச்சர்யம் விலகாமல் பேசி வருகின்றனர். இப்படியான சோழ மன்னர்களுடைய பெருமைப் பட்டியலின் நீளம் அதிகம்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

சோழர்களின் சிறப்பு மிக்க வரலாற்றை கல்கி, பொன்னியின் செல்வனில் எழுத்து வடிவாக்கினார். அதனைப் படமாக்கிக் காட்சி வடிவில் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

தமிழக மக்கள் பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டாடி வரும் இந்தச் சூழலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்கள் பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் போன்றே வேடமிட்டு தியேட்டருக்குச் சென்று படம் பார்த்த சுவராஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்னர்வீல் கிளப் ஆப் கும்பகோணம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், சோழர்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பதற்காகவே அந்த கேரக்டர்களாக மாறி தியேட்டருக்குச் சென்றதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

மைதிலி வைத்தியநாதன்
மைதிலி வைத்தியநாதன்

பொன்னியின் செல்வன் வேடமணிந்த இன்னர்வீல் கிளப் ஆப் கும்பகோணம் அமைப்பின் முன்னாள் தலைவர் மைதிலி வைத்தியநாதனிடம் பேசினோம், ”சோழர்கள் ஆட்சி செய்த பெருமையான மண்ணில் வாழ்கிறோம். நம்முடைய பாரம்பர்யம், கலாசாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட படங்கள் வருவதே இல்லை. கொலை, கொள்ளை, அடிதடியைக் கருவாகக் கொண்ட படங்களே அதிகம் வருகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர், முன்னோர்களுக்குப் பயனளிக்கக்கூடிய எதிர்காலச் சிந்தனையோடு ஆட்சி செய்ததுடன் அதனை ஆவணப்படுத்தியும் சென்றுள்ளனர் சோழ மன்னர்கள். பொன்னியின் செல்வனில் வந்த உண்மை வரலாற்றை மணிரத்னம் அற்புதமாகப் படமாக்கியுள்ளார். இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு சோழர்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. உலகம் முழுவதும் பல தரப்பினரும் சோழர்களின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம்.

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள்
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள்

அதன்படி பொன்னியின் செல்வனில் வரும் முக்கிய கேரக்டர்கள் போல் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் வேடமிட்டுப் படம் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

அவங்க அவங்க வீட்ல இத சொன்னப்ப ’என்னாது ராஜா வேஷம் போடப்போறீங்களா, காமெடி ஆகப்போகுது, ஏன் இந்த வேண்டாத வேலை’ன்னு கிண்டல் செஞ்சாங்க. அதைக் கண்டுக்காம நாங்க மேக்கப் போட்டுக்கிட்டோம்.

வந்தியத் தேவனாக ஹேமா மனோகரன், ஆதித்ய கரிகாலனாக துர்கா, அருள்மொழி வர்மனாக நான், நந்தினியாக டாக்டர் வசந்தி சந்திரசேகர், குந்தவையாக விஜயா, பெரிய பழுவேட்டரையராக உஷா மோகன் என ஒன்பது முக்கிய கதாபாத்திரங்களுக்கான வேடமிட்டோம். மேக்கப்புக்கு மட்டும் மூன்று மணி நேரம் ஆனது. டிரஸ்ஸுக்கான வாடகை உட்பட ஒரு நபருக்கு ரூ.1,000 செலவானது.

பொன்னியின் செல்வன் கெட்டப்
பொன்னியின் செல்வன் கெட்டப்

மேக்கப் முடிச்சுட்டு கண்ணாடில முகத்தப் பார்த்தா, அதுல எங்க முகம் தெரியல, நிஜ கேரக்டர்கள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தோம். சோழர்கள் கெட்டப்புல கும்பகோணம் பரணிகா தியேட்டருக்குப் போனோம். படம் பார்க்க வந்திருந்தவங்க எங்களைச் சூழ்ந்துக்கிட்டாங்க. எங்ககூட நின்னு செல்பி எடுத்துக்கிட்டாங்க. நாங்க தியேட்டர்ல போட்டோஷூட் எடுத்துக்கிட்டோம். படம் பார்த்தவங்க அதை விட்டுட்டு எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாங்க. கிட்டதட்ட இது படத்துக்கான புரொமோஷன் மாதிரி இருந்தது. இதனை போட்டோவோட சமூக வலைதளங்களில் பதிவிட்டோம். பாராட்டுகள் குவிந்த அளவிற்கு நெட்டிசன்கள் எங்களைக் கழுவி ஊத்தவும் செஞ்சாங்க. இதுங்கள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேக்கணும்னு ஒருத்தர் கமென்ட் அடிச்சிருந்தார்.

எல்லாத்துக்கும் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்பதை உணர்ந்திருந்தால் அதை பாசிட்டிவாகவே எடுத்துக்கிட்டோம். ரெண்டு பேரைத் தவிர வேடமிட்ட அனைவருமே 60 வயதைத் தாண்டியவங்க என்பதை இதுல குறிப்பிட்டுச் சொல்லணும். 72 வயசுல 'பொன்னியின் செல்வன்' வேடமிட்டதை என் பாக்கியமாகக் கருதுறேன். வயதை கவனத்துல கொள்ளாம வரலாற்றைப் பரப்பவே இதைச் செய்தோம். மணிரத்னம் எங்களை அழைத்துப் பாராட்டுவார்ன்னு அவரது அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

நந்தினி நேடத்தில் டாக்டர் வசந்தி சந்திரசேகர்
நந்தினி நேடத்தில் டாக்டர் வசந்தி சந்திரசேகர்

நந்தினி வேடமிட்ட ஆர்த்தோ டாக்டரான வசந்தி சந்திரசேகர், ”நான் என் கணவரோட மருத்துவமனையை நிர்வாகம் செய்து வருகிறேன். பொன்னியின் செல்வன் படத்துக்கு நாமும் எதாச்சும் டிரெண்டியா செய்யணும் என்ற நோக்கத்தில் எங்க கிளப் மெம்பர்ஸ் அதே வேடத்தில் படம் பார்க்கப் போனோம். வந்தியதேவன், ஆதித்ய கரிகாலன் என அந்தந்த கேரக்டர் தெரியற அளவுக்குத் தத்ரூபமா மேக்கப் அமைஞ்சிருந்தது வரம். ஒவ்வொரு கேரக்டரையும் அடையாளம் கண்டு எங்ககூட நின்னு மக்கள் போட்டோ எடுத்துக்கிட்டாங்க.

பொன்னியின் செல்வன் கதையை ரேடியோவுல ஒலிச்சித்திரமா கேட்டிருப்பாங்க. நாடகமாக பாத்திருப்பாங்க. அதைப் படமாக எடுத்த மணிரத்னம் குழுவினருக்கு எங்கள் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும், தமிழ்க் கலாசாரம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் சோழ மன்னர்கள் ஆண்ட மண்ணில் அதே வேடத்தில் படம் பார்த்தோம். ஒரு நாள் முழுக்க சோழர்கள் வேடத்தில் இருந்ததை எங்க வாழ்நாள் தவமாகக் கருதுகிறோம். தமிழக அரசு, பள்ளி மாணவர்களை இலவசமாக தியேட்டருக்கு அழைத்துச் சென்று பொன்னியின் செல்வன் படத்தைக் காட்ட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமாவது இதைச் செய்ய வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். இதன் மூலம் சோழர்களின் வரலாற்றை அவர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.