Published:Updated:

“மண்டி விளம்பரத்திலிருந்து விலகவில்லையெனில், விஜய் சேதுபதியின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோம்!”

விளம்பரத்தில் விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விளம்பரத்தில் விஜய் சேதுபதி

மல்லுக்கட்டும் வணிகர்கள்

“மண்டி விளம்பரத்திலிருந்து விலகவில்லையெனில், விஜய் சேதுபதியின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோம்!”

மல்லுக்கட்டும் வணிகர்கள்

Published:Updated:
விளம்பரத்தில் விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விளம்பரத்தில் விஜய் சேதுபதி

எளிமையான மனிதர், அலட்டிக்கொள்ளாத நடிகர், சமூகப் பிரச்னைகளுக்காக முதல் குரல் எழுப்புபவர் என மக்கள் மனதில் உயர்ந்திருந்த விஜய் சேதுபதி ‘மண்டி’ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவன விளம்பரத்தில் நடித்ததால், சிறு வணிகர்கள் அவரை வில்லனாகப் பார்க்கிறார்கள்.

பலசரக்கு விற்பனையில் பழுத்த அனுபவமுள்ள சேலம் ‘ஜெயம் நிறுவனம்’, தற்போது ‘மண்டி’ என்ற பெயரில் புதிதாக ஆன்லைன் பலசரக்கு வர்த்தகத்தையும் தொடங்கியிருக்கிறது. விவசாயிகள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என இந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து தங்களுக்குள் சரக்குகளை வாங்கவும் விற்கவுமான ஏற்பாட்டைச் செய்வதுதான் ‘மண்டி’யின் நோக்கம் என்கிறார்கள்.

ரவி, கார்த்திகேயன், விக்கிரமராஜா, வெள்ளையன்
ரவி, கார்த்திகேயன், விக்கிரமராஜா, வெள்ளையன்

இதற்கென பிரத்யேகமாக ‘மண்டி’ என்கிற செயலியை உருவாக்கியிருக்கின்றனர். அந்தச் செயலிக்கான விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதுதான் இப்போதைய சர்ச்சை. ‘வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு விஜய் சேதுபதி துணைபோகலாமா?’ என்ற முழக்கத்துடன் விஜய்

சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மண்டியால் என்ன பிரச்னை? தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ரவியிடம் பேசினோம். ‘‘சிறு கடைகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்குத் தேவையான சரக்குகளை ‘மண்டி’ ஆன்லைன் மூலம் வாங்குவார்களேயானால், மொத்த விற்பனை செய்துவரும் கடைகளுக்கு வியாபாரம் பாதிக்கும். அவர்கள் தங்கள் தொழிலை இழக்கவேண்டிய நிலை வரும். கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நிறைய சலுகைகள் கொடுப்பார்கள். அவர்களோடு போட்டிபோட முடியாமல், விநியோகஸ்தர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள் என பலசரக்குத் தொழிலில் உள்ள அனைவருமே தொழிலை இழந்து தவிக்க வேண்டிய நிலை வரும்’’ என்றார்.

“மண்டி விளம்பரத்திலிருந்து விலகவில்லையெனில், விஜய் சேதுபதியின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோம்!”

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திகேயன், ‘‘ஏற்கெனவே இருக்கும் ஆன்லைன் வர்த்தக பெருநிறுவனங்களைச் சமாளித்து வியாபாரம் செய்வதே எங்களுக்குப் பெரும்போராட்டமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ‘மண்டி’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளனர். அதற்கான விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால், மக்களிடையே மண்டி பிரபலமாகியிருக்கிறது. இது, எங்கள் வியாபாரத்தை ஒரேயடியாக குழிதோண்டி புதைத்துவிடுமோ என அச்சப்படுகிறோம். பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடைவிதித்த பிறகு பாலித்தீன் பைகளில் அடைத்து ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட மிக்ஸர், காராசேவு விற்பனை முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆனாலும், பெரும் நிறுவனங்களின் நொறுக்குத்தீனிகள் கலர் கலர் பாக்கெட்டுகளில் இன்று வரை விற்கப்படுகின்றன. சிறு வியாபரிகளை அழிக்கும் முயற்சியில் விஜய் சேதுபதியும் கைகோத்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்றார் கொதிப்பாக.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, ‘‘வியாபாரிகளுக்கு மட்டுமல்லாது வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் நேரடியாக சப்ளை செய்துவருகிறது. இது, மார்க்கெட் என்ற அடிப்படையையே அழித்துவிடும். டெலிவரி செய்பவர்களை மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக குடோன்களிலிருந்து சரக்குகளை எடுத்து வந்து சப்ளை செய்துவிடுவார்கள். கடை வாடகை, கரன்ட் பில் எனப் பல செலவுகள் செய்து கடை வைத்திருப்பவர்கள், ஆன்லைன் வர்த்தகர்கள் எனும் இந்தப் பணமுதலைகளோடு போட்டியிட முடியாது. இதனால், பலசரக்குத் தொழில் எனும் வணிகமே முற்றிலும் அழிந்துவிடும். இதை உணர்ந்து மண்டி செயலி விளம்பரத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகவேண்டும். இல்லையெனில், எங்கள் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடிகர் விஜய் சேதுபதியின் தொழிலில் எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார் சூடாக.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், ‘‘ஏற்கெனவே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, `புதிய பொருளாதாரம்’ என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறந்துவைத்தது. இப்போது உள்ள மத்திய பா.ஜ.க அரசோ, அந்தக் கதவுகளைத் தூக்கித் தூர எறிந்துவிட்டது. அதனால்தான் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டை அடியோடு சூறையாடிக்கொண்டிருக்கின்றன” என்றார்.

விஜய் சேதுபதி தரப்பில் தொடர்புகொண்டோம். இதுபற்றிப் பேசுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதையடுத்து ‘மண்டி’ ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தினரைத் தொடர்புகொண்டோம். “எங்களுக்கு, பலசரக்கு விற்பனையில் 30 வருட அனுபவமுள்ளது. இந்தத் துறையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் நோக்கிலேயே ‘மண்டி’யை அறிமுகப்

படுத்தியுள்ளோம். மக்கள்மீது அக்கறைகொண்டவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பதாலேயே விஜய் சேதுபதியை ‘மண்டி’ விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். அவரும் எங்களது வியாபார உத்தியை நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் நம்பகத்தன்மையை உணர்ந்த பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இது முழுக்க முழுக்க வியாபாரிகளுக்கு மட்டுமேயான தளம். பலசரக்குத் துறையில் உள்ள மொத்த வணிகர்கள், சிறுவணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே நீடித்துவரும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் கூடுதல் பலனளிக்கக் கூடியதாகவுமே இந்தத் தளம் இருக்கும்’’ என்கின்றனர்.

பிரச்னைகள் மண்டிக்கிடக்கும் தமிழகத்தில் மண்டியால் ஒரு பிரச்னை!