Published:Updated:

இந்தப் பிரச்னைகளை எப்போதுதான் பேசுமோ தமிழ் சினிமா?

சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா

அலசல்

இந்தப் பிரச்னைகளை எப்போதுதான் பேசுமோ தமிழ் சினிமா?

அலசல்

Published:Updated:
சினிமா
பிரீமியம் ஸ்டோரி
சினிமா

ஒரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படுகிறாள்; ஒரு பெண் படிப்பைப் பாதியில் நிறுத்தி திருமணம் செய்விக்கப்படுகிறாள்: ஒரு பெண் தான் காதலித்தவனை ஆணவக்கொலையில் இழந்துநிற்கிறாள். யார் மீது இந்தச் சமூகத்தின் கவனம் குவியும்?

நிச்சயமாகப் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த பேச்சுகள்தான் தேசம் முழுவதும் கவனம் பெறும். கண்டனங்கள், மெழுகுவத்தி ஊர்வலங்கள், பாலியல் வன்முறை ஏன் நடக்கிறது என்பது குறித்த அலசல்கள், `பாலியல் குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும்' என்ற கோரிக்கைகள் ஆகியவை எப்படியும் இரண்டு வாரங்கள் நாட்டை நிறைக்கும்.

இதைச் சொல்வதாலேயே பாலியல் வன் முறை பொருட்படுத்தத்தக்க பிரச்னையில்லை என்று அர்த்தமல்ல. உண்மையிலேயே பெண்களே உடல்ரீதியாகப் பாலியல் வன்முறையை அதிகம் சந்திக்கிறார்கள். இதற்குக் காமம் மட்டும் காரணமில்லை. ஒரு சாதி, மதம், இனம், ராணுவம், காவல்துறை தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நிலமாகத்தான் பெண்ணுடல் பார்க்கப்படுகிறது. அதனால் தான் கும்பல் வெறியாட்டத்தின் ஒரு பகுதியாகப் பாலியல் வன்முறை நடக்கிறது. இன்னொரு புறம் சாதி மற்றும் மதத்தூய்மையைக் காப்பாற்றவும் பெண்கள் சாதி, மதமறுப்புத் திருமணங்களைச் செய்யக் கூடாது என்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. அங்கும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நிலம் பெண்ணுடல்தான்.

எனவே, பெண்கள் மீதான பாலியல் வன்முறையைப் பேசுவது என்பது சமூகத்தேவை. ஆனால், மேற்கொண்ட சமூகப்புரிந்துணர்வுடன்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறை எதிர்ப்பு என்பது பேசப்படுகிறதா? இல்லை. பாலியல் வன்முறை எதிர்ப்பு என்பது `பெண்களின் மாபெரும் பொக்கிஷமான கற்பை இழப்பது' குறித்த அக்கறையாக மாறிவிடுவதுதான் சங்கடமானது. அதிலிருந்துதான் பெண்கள் `கற்பை இழக்காமல் இருக்க' என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் `பாலியல் வன்முறை மட்டுமே பெண்களின் ஒரே பிரச்னை' என்று பார்க்கக்கூடிய பார்வைகள் முற்போக்குப் போர்வையிலும் உருவாகின்றன. ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டால் மட்டுமே அவளின் பிரச்னைகளைப் பேசுவது என்பதும் பாலியல் வன்முறை குறித்து கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதும் அடிப்படையில் ஆணாதிக்க மனநிலைகளே. குறிப்பாக, தமிழ் சினிமாவில் பிற்போக்குப் படங்களும் சரி, முற்போக்குப் படங்கள் என்று சொல்லப்படுபவையும் சரி இந்தப் பிரச்னையில் ஒன்றுபடுகின்றன.

இந்தப் பிரச்னைகளை எப்போதுதான் பேசுமோ தமிழ் சினிமா?

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து வில்லனால் பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதும் கதாநாயகன் வந்து காப்பாற்றும்வரை நாயகி கூச்சலிடுவதும் மட்டுமே தமிழ் சினிமாவின் விதி. இன்னொருபுறம் பெண்கள் என்றால் இப்படித்தான் உடை உடுத்த வேண்டும், ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற வரையறைகளும் முன்வைக்கப்பட்டன. திராவிட இயக்க சினிமாக்களில் பல முற்போக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பெண்களைப் பொறுத்தவரை அவையும் பிற்போக்கு சினிமாக்களாகத்தான் இருந்தன. குடும்பத்துக்குக் கட்டுப்பட்ட, ஆண்களுக்கு அடங்கிய கற்புக்கரசிகளே உத்தமிகளாகவும் குடும்ப அமைப்புக்கு வெளியே உள்ள காந்தா (ரத்தக்கண்ணீர்), வசந்தசேனை (மனோகரா) போன்ற பெண்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகவும் சதிகார வில்லி களாகவும் சித்திரிக்கப்பட்டனர்.

ரஜினி காலத்து சினிமாக்களிலும் நாயகர்களே பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார்கள். இல்லாவிட்டால் பெண் தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள பக்கத்தில் இருக்கும் குத்துவிளக்கையோ கத்தியையோ எடுத்து குத்திக்கொண்டு தன் கற்பைக் காப்பாற்ற வேண்டும். பாலியல் வன்முறையைப் பெண்களே தடுத்து நிறுத்து வதற்கோ, வில்லனைப் பழிவாங்கி நீதியைப் பெறுவதற்கோ எந்த உரிமையும் இல்லை. பழிவாங்க வேண்டும் என்றால்கூட செத்து ஆவியாக வர வேண்டும். `நீயா' ஸ்ரீப்ரியாவில் இருந்து `அரண்மனை' ஹன்சிகா வரை இது தான் விதி.

2000-த்தில் வெளிவந்த `பருத்திவீரன்' முத்தழகுவோ கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளான பிறகு `என்னைக் காணாப்பொணம் ஆக்கிடு' என்று காதலனைக் கெஞ்சினாள். ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளானால் அவள் உயிரைவிட்டே ஆக வேண்டும் என்பது தான் அடிப்படை. 90-களில் வெளியான கிராம சினிமாக்களில் தவறாமல் ஒரு காட்சி இடம்பெறும். வில்லன் வேலைக்காரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து விடுவான். அவனையே திருமணம் செய்ய வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு `நீதி' வழங்குவது நாட்டாமைகளின் தர்மம். `புதிய பாதை' நாயகியோ தானே நாட்டாமையாக மாறி தன்னைப் பாலியல் வன்முறை செய்தவனை விரட்டி விரட்டிக் காதலித்து திருமணம் செய்து, அவனைத் திருத்தி நல்லவன் ஆக்கிவிட்டு அல்பாயுசில் உயிரை விடுவாள்.

கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது, அது பறிக்கப்பட்டால் யார் பறித்தானோ அவனைத் திருமணம் செய்துகொண்டு அதிகாரபூர்வமாக மீண்டும் கற்பைப் பறிகொடுக்கத் தயாராக வேண்டும் அல்லது உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்று தமிழ் சினிமாக்கள் நிரூபித்தன. `விதி' படத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் குறித்த நீதிமன்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழகத்தின் தெருக்களில் எல்லாம் கேசட்கள் வழியாக ஒலித்தன. இந்தப் படங்கள் எல்லாம் `பெண்களுக்கு நீதி கேட்கும் படங்கள்' என்று அடையாளப்படுத்தப்பட்டது அநீதியானது.

`உறவுச்சிக்கல்களைப் பேசிய முற்போக்குப் படங்களும்' மீண்டும் மீண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் அவள் எப்படி உருகி உருகி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையே பேசின. குறிப்பாகப் பாலசந்தரின் படங்கள்.

`அவள் ஒரு தொடர்கதை' கவிதா குடிகார அண்ணனை சகித்துக்கொண்டு, தன் காதலைத் தியாகம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினாள். `சிந்து பைரவி' சிந்து, ஜே.கே என்னும் ஆணவம் கொண்ட கர்னாடக இசைக்கலைஞருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்து புரட்சி செய்தாள். சிந்துவுக்காவது ஜே.கே மீது ஈர்ப்பு இருந்தது. ஆனால், கல்கியோ ஆணாதிக்கப் பிரகாஷால் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட செல்லம்மாவுக்காக அதே ஆணாதிக்கப் பிரகாஷிடம் உறவுகொண்டு குழந்தை பெற்று செல்லம்மாவிடம் ஒப்படைத்தாள். மீண்டும் மீண்டும் பெண்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாகச் சித்திரித்ததுதான் பாலசந்தர் செய்த புரட்சி. கற்பு என்பதும் ஆண்களுக்காக; கற்பு மீறலும் ஆண்களுக்காக என்று `புரட்சி' பேசிய படங்கள் இவை.

பெண்களைக் கவர்ச்சிப்பொருளாகக் காட்டிக்கொண்டே இன்னொருபுறம் `செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே?' என்று பண்பாட்டை வலியுறுத்தவும் செய்தவை தமிழ் சினிமாக்கள். மீண்டும் மீண்டும் பெண்களின் ஒரே பிரச்னையாகப் பாலியல் வன்முறையை மட்டுமே நிறுத்திய தமிழ் சினிமா, அதையும் பெண்களுக்கு ஏற்பட்ட இழப்பாக மட்டுமே சித்திரித்தது. இதைத்தாண்டி பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயமரியாதை, உடல்நலம் போன்ற பிரச்னை குறித்தும் பேசத் தமிழ் சினிமா தயாராக இல்லை.

இப்போது தமிழ் சினிமாக்கள் கொஞ்சம் மாறியிருக்கின்றன. பாலியல் வன்முறை பற்றிப் பேசினாலும் அதற்குப் பெண்களைக் குற்றவாளியாக்காமல், பெண்களை நோக்கி அறிவுரைகளை முழங்காமல் ஆணாதிக்கச் சமூகத்தின் அடிப்படைகள் குறித்துப் பேசுகின்றன. உதாரணத்துக்கு, அஜித்தின் `நேர்கொண்ட பார்வை'. பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குக் காரணமாகச் சொல்லப்படும் உடை உள்ளிட்ட ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எவ்வளவு அபத்தமானவை என்று பேசுவது நல்ல நகர்வு.

பாலியல் தொல்லையோ, அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு மிரட்டப்பட்டாலோ அவமானத்துக்கு உள்ளாக வேண்டியவள் அவள் இல்லை. அவற்றுக்கான நீதியைப் பெறுவ துடன் அத்தகைய சம்பவங்களை விபத்தாக எடுத்துக்கொண்டு, அதற்குத் தான் பொறுப்பில்லை என்ற புரிந்துணர்வுடன் வாழப் பழக வேண்டும். இதை `சில நேரங்களில் சில மனிதர்கள்' காலத்திலேயே முன்வைத்தார் ஜெயகாந்தன். `அவள் அப்படித்தான்' மஞ்சுவும் பல ஆண் களால் ஏமாற்றப்பட்டவள் என்றாலும், அதைக்கொண்டு அனுதாபம் கோரியவள் இல்லை. மாறாக அதை அனுதாபமாக்கும் போலிப் பெண்ணியத்தின் மீது கேள்விகளை முன்வைத்தவள். `அருவி' உள்ளிட்ட சில சமகாலப்படங்களும் இத்தகைய புரிந்துணர்வுகளை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

சமீபகாலமாக நாயகிகளை மையப்படுத்திய சினிமாக்கள் அதிகம் வரத்தொடங்கியிருக்கின்றன. ஆனால், அவையும்கூட முழுமையான புரிந்துணர்வுடன் வருவதில்லை. `ஆடை' பட நாயகி காமினி ஒரு பெண்ணின் நிர்வாணத்தைப் பொதுச்சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வியை எழுப்பியது சரிதான். ஆனால், மணிப்பூரில் பெண்களே நடத்திய நிர்வாணப்போராட்டத்தில் இருந்த `என் உடலைச் சிதைப்பதன் மூலம் என் உரிமைகளையோ அரசியலையோ சிதைக்க முடியாது' என்ற குரலின் தீவிரம் இருந்ததா? மாறாக வெறுமனே பிராங்க் வீடியோக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதாக மடைமாற்றி மலினப் படுத்தியதே!

ஒப்பீட்டளவில் ஜோதிகாவுக்கு பாலியலைத் தாண்டி பல்வேறு பிரச்னைகளைப் பேசும் பெண் பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாற்றுத்திறனாளிப் பெண்ணின் இயல்பை முன்வைக்கும் `மொழி' அர்ச்சனா, ஆணவக்கொலை எதிர்ப்பு, சமையற்கூடத்தைத் தாண்டி பெண்களுக்கான விரிந்தவெளி பற்றிப் பேசும் `மகளிர் மட்டும்' பிரபாவதி, கல்விப் பிரச்னைகளைப் பேசிய `ராட்சசி' கீதாராணி ஆகியோர் சமகாலப் பெண்களின் பிரச்னைகளைப் பேசினர்.

கௌசல்யா முருகேசன் கண்ட `கனா', ஒரு பெண்ணின் விளையாட்டு வேட்கையைப் பேசியது. பெண்களின் உடல் என்பது வெறுமனே பாலியல் வன்முறைக்கும் காதலுக்குமான களம் மட்டுமல்ல, அது விளையாட்டுத் திறமைக்கான கருவி என்பதைச் சொன்ன வகையில் வரவேற்கத்தக்க கனவு. மேலும், சச்சினும் தோனியும் கொண்டாடப்படும் அளவுக்கு மிதாலி ராஜ் போன்ற எத்தனை இந்திய வீராங்கனைகளின் பெயர்களும் முகங்களும் நமக்குத் தெரியும்?

அதிகார வர்க்கத்தின் மனச்சாட்சியை நோக்கி `அறம்' சார்ந்த கேள்விகளை முன்வைத்த மதிவதனி, ஆழ்துளைக்கிணறு வழியே வர்க்க அரசியலும் பேசினார். ஆனால், அதே நயன் தாரா நடித்த `கோலமாவு கோகிலா'வோ கொலைகளையும் பாலியல் வன்முறையையும் நகைச்சுவைப் பொருளாக மாற்றினார். பாலியல் வன்முறையை அனுதாபத்துக்குரிய, பெண்களின் கற்பை வலியுறுத்தும் விஷயமாகப் பார்ப்பது எந்தளவுக்கு அபத்தமோ அதைவிட அபத்தம், அதன் தீவிரத்தை உணராமல் அதை நகைச்சுவையாக மாற்றும் அபத்தம். சொல்லப்போனால் அதுவும் வன்முறையே.

தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்களை. பாலியல் வன்முறை என்பது பெண்கள் மீதான பல வன்முறைகளில் ஒன்று என்கிற புரிந்துணர்வுடன் பெண்களின் மற்ற பிரச்னைகளையும் பேச வேண்டும். உதா ரணத்துக்கு சென்னையில் வழங்கப்படும் ஒரு வசவுச்சொல் கிட்டத்தட்ட எல்லாத் தமிழ்ப்படங்களிலும் இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது. `சூரரைப்போற்று' திரைப்படக்கதை தென்மாவட்டத்தில் நடந்தாலும் அந்தப் படத்தின் நாயகன் இந்த வசவுச்சொல்லை அடிக்கடி உச்சரிக்கிறார்.

இந்தப் பிரச்னைகளை எப்போதுதான் பேசுமோ தமிழ் சினிமா?

கெட்டவார்த்தைகளை விமர்சிப்பது என்பது ஒழுக்கத்தின் அடிப்படையில் மட்டும் அல்ல. எல்லாக் கெட்டவார்த்தைகளும் ஏன் பெண்களின் ஒழுக்கத்தை அல்லது உறுப்புகளைக் குறிப்பவையாகவே இருக் கின்றன என்று சிந்திக்க வேண்டும். கோபத்தை வெறுப்பை வெளிப்படுத்தும் வசவுச் சொற்களும்கூட ஏன் பெண்களை இழிவு செய்பவையாக இருக்கின்றன என்று சிந்திக்க வேண்டும். ஒரு பெண் இயக்குநரின் திரைப்படத்தில், அதிலும் பெரியாரிய அடையாளங்களுடன் உள்ள ஓர் ஆண் ஏன் பெண்களை இழிவுபடுத்தும் வசைச்சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார்?

பெண்கள் மீதான ஒடுக்குமுறை வெறுமனே பாலியல் வன்முறையில் மட்டுமல்ல; அது இதுபோன்ற வார்த்தைகளைக் கொண்ட மொழியிலும் இருக்கிறது, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஊதியம் வழங்கத் தயாராக இல்லாத திரைத்துறையின் நடைமுறையில் இருக்கிறது; ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பதவி உயர்வுகளுக்கு அவள் நடத்தையைக் காரணமாகச் சொல்லும் சிந்தனையில் இருக்கிறது; பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களை வீழ்த்த அவளது ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தந்திரத்தில் இருக்கிறது. இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

எனவே ஆண், பெண் இயக்குநர்களே பாலியல் வன்முறைக்காக மட்டும் அழுது உருகும் உங்கள் மெழுகுவத்தியைக் கீழே இறக்குங்கள். இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஏராளமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

அது `கிரேட் இண்டியன் கிச்சனை'ப்போல் உங்கள் கதை விவாத அறைக்கு மிக அருகில் இருக்கும் சமையலறையாகவோ மாதவிலக்கான உங்கள் தாய்/சகோதரி/மனைவி நுழையாத பூஜையறையாகவோகூட இருக்கலாம்.