மலையாள சினிமாவை ரசிக்கும் பெரும் கூட்டம் இந்தியா முழுக்க இருக்கிறது. மலையாளத்தில் வெளிவரும் கதைகளுக்கும் அதில் நடிக்கும் நடிகர்களின் யதார்த்த நடிப்பிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கேரளத்து நாயகிகள் தங்களது யதார்த்த நடிப்பின் மூலம் இந்திய சினிமா முழுக்க பேசுபொருளாக இருப்பார்கள். ரேவதி, நதியா, ஊர்வசி தொடங்கி நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப் பல உதாரணங்கள். தற்போது, கேரள சினிமாவில் அடுத்த நடிகை படை உருவாகிவிட்டது. அதில் உள்ள முக்கியமானவர்களைப் பற்றிய சிறு அப்டேட்!

ஐஸ்வர்யா லட்சுமி
‘நண்டுகளுடே நாட்டில் ஓரிடவளா’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்து டொவினோ தாமஸுக்கு ஜோடியாக ‘மாயநதி’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் சூப்பர்ஹிட். டொவினோ ஹீரோவாகிக் கிடைத்த முதல் சூப்பர்ஹிட் இதுதான். அதனைத் தொடர்ந்து, ஃபகத் பாசிலுடன் ‘வரதன்’, தெலுங்கில் ஹிட்டான ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மலையாள ரீமேக், காளிதாஸ் ஜெயராமுடன் ‘அர்ஜென்டினா ஃபேன்ஸ் காட்டூர்கடவு’ என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தில் தமன்னாவுடன் நடித்தார். மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு முதல் தமிழ்ப் படம், வெற்றிகரமாக அமையவில்லை. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்போதும் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘பிஸ்மி ஸ்பெஷல்’, டொவினோ தாமஸுடன் ‘காணக்காணே’, ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’, ‘குமாரி’ ஆகிய ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் எனப் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

நிமிஷா சஜயன்
மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நிமிஷாவின் பூர்வீகம் கேரளம்தான். திலீஷ் போத்தன் இயக்கத்தில் உருவான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படம்தான் இவரின் அறிமுகப்படம். இந்தப் படத்திற்காக ஃபகத் பாசிலுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘ஈடா’ படத்தில் கல்லூரி மாணவி, ‘மாங்கல்யம் தந்துனானேனா’ படத்தில் திருமணமான பெண், ‘ஒரு குப்ரசித்த பையன்’ படத்தில் வழக்கறிஞர் என நிமிஷா சஜயன் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்குப் படம் நிச்சயம் மாறுபடும். இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியான ‘சோழா’ படத்தில் இவரது நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. நிமிஷாவின் வசம் ‘ஒன்’, ‘துறமுகம்’, ‘மாலிக்’, ‘நயட்டு’, ‘Footprints of water’ எனும் ஆங்கிலப் படம் ஆகியவை உள்ளன.

அபர்ணா பாலமுரளி
அப்பா மலையாள சினிமாவில் இசையமைப்பாளர். ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்தவருக்கு பரதநாட்டியம், குச்சுப்புடி என நடனக்கலைமீது ஆர்வம் அதிகம். அபர்ணாவை கவனிக்க வைத்தது ‘மஹிஷிண்டே ப்ரதிகாரம்’ படம்தான். மலையாளத்தில் இவருக்கான கரியர் தொடங்கிய சில வருடங்களில் தமிழில் ‘8 தோட்டாக்கள்’ வாய்ப்பு. அடுத்து இவர் நடித்த சில மலையாளப் படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. அடுத்ததாக, தமிழில் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்தார். இந்த எல்லாவற்றையும்விட, ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா எந்த அளவு பேசப்பட்டாரோ அதே அளவுக்கு அபர்ணாவும் கவனிக்கப்பட்டார். இவரது நடிப்பும் மாநிலங்கள் கடந்து பேசப்பட்டது. படத்தில் இவரை ரசித்தது போதாதென்று அந்தப் படத்திற்காக இவர் நடிப்புப் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் ரசித்து அதனை வைரலாக்கினர்.

ரஜிஷா விஜயன்
தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்த நடிகைகளுள் ரஜிஷாவும் முக்கியமானவர். ‘அனுராகக்கரிக்கின் வெள்ளம்’ படத்தில் இவர் நடிப்பிற்கு ஏகப்பட்ட விருதுகள் குவிந்தன. முதல் படத்திலேயே அனைவரின் பார்வையும் இவர் பக்கம் திரும்பியது. ‘ஜார்ஜேட்டன் பூரம்’, ‘ஒரு சினிமாக்காரன்’ என்று தனக்கு வந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ‘ஜூன்’, ‘ஃபைனஸ்’, ‘ஸ்டான்ட் அப்’ என 2019-ல் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவரை மையப்படுத்திய கதைகள்தான். அடுத்ததாக, ‘கோ-கோ’ எனும் படத்தில் கோகோ வீராங்கனையாக நடித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவரைத்தான் முத்தையா முரளிதரன் பயோபிக்கான ‘800’ படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தது படக்குழு. ‘கர்ணன்’ வெளியாகும் முன்பே தமிழில் நிறைய கதைகள் கேட்டு வருகிறார். விரைவில் ஒரு பெரிய அப்டேட் வரும் என்கிறார்கள்.

அன்னா பென்
ஃபேஷன் டிசைனிங் முடித்த அன்னா பென், ‘கும்பளங்கி நைட்ஸ்’ பட ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வானார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அன்னா பென்னின் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ‘ஹெலன்’. ஃப்ரீசரில் மாட்டிக்கொண்டு தப்பிக்க முயலும் அத்தனை காட்சிகளிலும் திரைக்குள் இருக்கும் குளிர் நம்மையும் தொற்றிக்கொள்ளும். தமிழ், இந்தி என இந்தப் படம் ரீமேக்காகிறது. பின் ‘கப்பேலா.’ இந்தப் படமும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தற்போது, டொவினோ தாமஸுடன் ‘நாரதன்’, சன்னி வெய்னுடன் ‘சாரா’ ஆகிய படங்கள் அன்னா பென்னின் கைவசமுள்ளன. ‘சாரா’ படத்தில் இயக்குநராகப் போராடும் உதவி இயக்குநர் கேரக்டரில் நடிக்கிறார்.