தமிழகத்தில் நேற்று அதிகாலை அஜித், விஜய் நடிப்பில் 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைப்படங்கள் வெளியாகின. இதில், முதல் ஷோவுக்காக ரசிகர்களின் கூட்டம் களைகட்டியது. அந்த வகையில் சேலத்திலுள்ள ஒரு பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டரில் இரவு ஒரு மணி அளவில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' படம் வெளியானது. இதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முதல் ஷோ பார்ப்பதற்காக உற்சாகமாக வந்திருந்தனர்.
அதில், அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்குக்குள் செல்லும்போது கூட்ட நெரிசலில் படியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இந்நிலையில் அவரை யாரும் கண்டுகொள்ளாமல் அவர் மீதே ஏறி படம் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த ரசிகரை வெளியில் அடுத்த ஷோ 'வாரிசு' படம் பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோர் ஓடிச்சென்று காப்பாற்றினர்.

பின்னர் கால் முறிவு ஏற்பட்டு மயக்கத்திலிருந்த நபருக்குத் தண்ணீர் கொடுத்து, உடனடியாகத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவரது பெற்றோர்களுக்கும் தகவல் அளித்துவிட்டு மீண்டும் காலை 4 மணி அளவில் 'வாரிசு' படம் பார்க்கத் திரும்பி வந்தனர்.
இதனை அறிந்து அங்குப் பணியிலிருந்த பள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் சம்பந்தப்பட்ட இளைஞர்களான நவீன், கவின், நற்குண ராஜ் ஆகியோரை அழைத்து அவர்களுடைய செயலை வெகுவாகப் பாராட்டினார்.