Published:Updated:

`நடிகையானால்கூட 50 சதவிகித பணம் கொடுக்க வேண்டும்!’ - மீரா மிதுன் ஆடியோ விவகாரத்தில் என்ன நடந்தது?

சத்யா கோபாலன்

மீரா மிதுன் சாதாரணமாகத் தன் நண்பரிடம் பேசிய ஆடியோவை வைத்து தவறாகப் புகார் அளித்துள்ளதாக மீரா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

meera mitun
meera mitun ( Instagram/@meeramitun )

`மிஸ் சவுத் இந்தியா’, ‘மிஸ் தமிழ்நாடு’ போன்ற பல பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். மாடல் அழகியும் நடிகையுமான இவர் 'தானா சேர்ந்த கூட்டம்’, `8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

meera mitun
meera mitun
Instagram/@meeramitun

சமீபத்தில் இவர் `மிஸ் தமிழ்நாடு திவா’ என்ற பெயரில் அழகிப் போட்டியை நடத்துவதற்கு முயற்சி செய்தார். அதற்குள் தமிழ்நாடு அழகிப் போட்டியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி இவரது பட்டம் திரும்பப் பெறப்பட்டது. பல்வேறு காரணங்களால் மிஸ் தமிழ்நாடு திவா போட்டியை நடத்த முடியாமல் போனது. இதற்குக் கொச்சியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் என்பவர்தான் காரணம் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் மீரா.

பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மீரா சென்றுவிட்டார். அவர் உள்ளே இருக்கும்போது ஜோ மைக்கேல், `மீரா மிதுனை நிகழ்ச்சியைவிட்டு வெளியேற்றுவேன். அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்’ எனக் கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மீரா, நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.

Miss tamilnadu diva
Miss tamilnadu diva
Facebook/@Joe Michael Praveen

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஜோ மைக்கேல் தரப்பினர், `மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியை நடத்த உதவி கோரி, மீரா மிதுன் ஜோவிடம் வந்தார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜோ, நிகழ்ச்சியின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவிதத்தைத் தனது நிறுவனத்துக்கு ஊதியமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், கடைசியாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பெரிய நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மாடல்களை ஏமாற்றிவருகிறார். மீரா மிதுன் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. விரைவில் அவர் கைதுசெய்யப்படும்போது உண்மை வெளியில் வரும்'' என்றனர்.

இந்நிலையில் ஜோ மைக்கேலை மிரட்டும் தொனியில் மீரா பேசியுள்ள ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மீரா பேசியுள்ள ஆடியோவில், `என்ன பண்ணி வச்சிருக்கான் ஜோ மைக்கேல். என்னைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவனை ஆளை வச்சி தூக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல என்னால முடியல... அவன் கை, கால ஒடச்சி ஆறு மாசம் ஹாஸ்பிடல்ல படுக்க வைக்கணும்’ எனக் கோபமாகப் பேசியுள்ளார்.

"எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது!" - #MissSouthIndia மீரா மிதுன்

இதனால் மீரா மீது அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீரா மிதுனின் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம். ``இது மிகச் சாதாரண உரையாடல். இரு நண்பர்கள் பேசிக்கொள்வது எப்படிக் குற்றமாகும். சாதாரணமாகப் பேசும்போதுகூட கொன்னுடுவேன் என்று பலர் சொல்கிறார்கள், இதற்காக எப்படி எஃப்.ஐ.ஆர் போட முடியும். இந்த ஆடியோ யாரோ ஒரு மூன்றாவது ஆள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

Joe Michael
Joe Michael
Facebook/@Joe Michael Praveen

இருவரும் பேசிக்கொள்கிறார்கள் என்றால் இருவரும்தானே குற்றவாளி ஆவார்கள், மீராவை மட்டும் குறை சொல்வது எப்படிச் சரியாகும். வெறும் ஆடியோவை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் நாளொன்றுக்கு ஆயிரம் ஆடியோக்கள் வெளியாகின்றன. அதற்காக அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

ஜோ மைக்கேலின் பின்னால், ஆல் இந்தியா அளவில் ஃபேஷன் ஷோ நடத்துபவர்கள் உள்ளனர். அவர்களுக்குப் போட்டியாக வேறு யாரையும் துறைக்குள் நுழைய விடமாட்டார்கள். அதையும் மீறிச் செய்தால், முதலில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது போலக் காட்டிவிட்டு, பின்னர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிகழ்ச்சியை நடக்கவிடாமல் செய்துவிடுவார்கள். எதிர்த்துக் கேட்டால், ’நாங்கள் எந்த மாடலையும் அனுப்ப மாட்டோம்’ என மிரட்டுவார்கள். அவர்களுடன் சேர்ந்தவர்தான் ஜோ மைக்கேல்.

adv Shreedhar
adv Shreedhar

மாடலாக இருக்கும் பெண், நடிகையானால்கூட இவர்களுக்கு 50 சதவிகிதம் பணம் அளிக்க வேண்டும். மாடல்களுக்கான கால்ஷீட் போன்ற அனைத்தையும் இவர்களே பார்த்துக்கொள்வார்கள். மூன்று படங்களுக்கு மேல்தான் அந்தப் பெண்ணை தனியாகச் சம்பாதிக்க விடுவார்கள் அதற்கு ஒத்துவரவில்லை என்றால் சினிமாவில் இருந்தே அனுப்பிவிடுவார்கள். இவை அனைத்துக்கும் மீரா மிதுன் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் இப்படிக் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த ஆடியோவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். கொலை மிரட்டல் என வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது சாதாரணமான உரையாடல் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், இந்த ஆடியோ மிகவும் பழையது. அப்போதே ஆடியோவை இணையத்தில் விட்டுவிடுவேன் எனக் கூறிவந்தனர். மீரா மீது தவறு இருந்திருந்தால் அடுத்தநாளே ஆடியோவை வெளியே விட்டிருக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை. இது தவறான குற்றச்சாட்டு” எனக் கொந்தளிப்போடு கூறி முடித்தார்.