`ஏன் ஆனந்த் இவ்வளவு அவசரம்’ என்று தன்னுடைய முகநூலில் பதறியிருந்தார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். இவரும் மறைந்த கே.வி.ஆனந்தும் கிட்டத்தட்ட 40 வருட நண்பர்கள்.
``கொஞ்சம்கூட நம்ப முடியலைங்க. ஹாஸ்பிடல்ல இருந்தார். பத்து நாள் உயிருக்குப் போராடியிருந்தார்னா மனசு இந்த அதிர்ச்சிக்குத் தயாராகி இருந்திருக்கும். இப்படித் திடீர்னு... நம்பவே முடியலைங்க. நாங்க பத்திரிகை உலகத்துல இருந்தபோதிருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ்.
எங்க ரெண்டு பேர் நட்பைத்தாண்டி எங்க ரெண்டு குடும்பங்களும்கூட நட்பா இருந்துச்சு. அவர் தோட்டத்துல இருந்து என் வீட்டுக்கு மாம்பழம் அனுப்பி வெப்பாரு. காலையில என் பொண்ணுங்க போன் பண்ணி, `ஆனந்த் அங்கிளுக்கு ஏம்ப்பா இப்படி நடந்துச்சு’ன்னு அழுதாங்க. என்னால அவங்களை சமாதானம் செய்யவே முடியலை’’ என்றவரின் குரலில், வலி ரணமாகத் தெரிகிறது.
``ரொம்ப தன்மையான குணம் கொண்ட மனுஷன் அவர். ஏற்காட்ல ஒரு ஹோட்டல்ல தங்கி `காப்பான்’ பட டிஸ்கஷன் நடத்திக்கிட்டிருந்தோம். அந்த ஹோட்டல்ல வேலைபார்த்துக் கிட்டிருந்த ரூம் பாய் ஆனந்தோட ரசிகர். `அவரோட கல்யாணத்துக்கு என்னை அழைச்சிருந்தார். என்னால அப்போ கல்யாணத்துக்குப் போக முடியல. அதனால, இப்போ அவர் வீட்டுக்குப் போயிட்டு வருவோம்’னு என்னையும் கூட அழைச்சிட்டுப் போனார்.

நாங்க அங்க போனதும், அக்கம் பக்கத்து வீட்ல இருந்தவங்க எல்லாரும் `கே.வி.ஆனந்த் வந்திருக்கார்’னு வந்துட்டாங்க. அவங்க எல்லார்கிட்டேயும் சந்தோஷமா பேசிட்டிருந்தார். அப்போ, அந்தக் கூட்டத்துல இருந்த ஒரு பொண்ணு, `சார், நான் நடிகர் ஜீவா சாரோட ஃபேன். எனக்கு அவர்கிட்ட பேசணும். உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா’ன்னு கேட்டாங்க. அவ்ளோதானே அப்படின்னு சொல்லிட்டு உடனே ஜீவாவுக்கு போனை போட்டு விஷயத்தைச் சொல்லி, அந்தப் பொண்ணுகிட்ட பேச வெச்சார். அந்தப் பொண்ணு, `என் வாழ்க்கையில இதை நான் மறக்க மாட்டேன் சார்’னு சொல்லி சந்தோஷத்துல அழுதாங்க. தன்னை சுத்தியிருக்கிற எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சவர். இவ்ளோ அவசரமா உலகத்தைவிட்டு நீங்க போயிருக்கக் கூடாது ஆனந்த்’’ என்கிறார், உடைந்த குரலில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.