Published:Updated:

மெஹெந்தி முதல் முகூர்த்தம் வரை... நமீதாவின் திருமண உடைகளின் அணிவகுப்பு!

கானப்ரியா
மெஹெந்தி முதல் முகூர்த்தம் வரை... நமீதாவின் திருமண உடைகளின் அணிவகுப்பு!
மெஹெந்தி முதல் முகூர்த்தம் வரை... நமீதாவின் திருமண உடைகளின் அணிவகுப்பு!

`ஹாய் மச்சான்ஸ்' என கொஞ்சும் தமிழில் பல இளைஞர்களின் இதயத்தை ஈர்த்த நமீதாவுக்குக் கல்யாணம் முடிந்தது. மாடல், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகங்களைக்கொண்ட வீரேந்திர சௌத்ரி என்பவரைக் காதலித்து, சமீபத்தில் திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலில் கரம் பிடித்துள்ளார் நமீதா.

சூரத்தில் பிறந்து வளர்ந்து, 2002-ம் ஆண்டில் தமிழ் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த நமீதா, `பில்லா', `ஏய்', `அழகிய தமிழ் மகன்', `நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர். விஜய், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து, அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். `மானாட மயிலாட', `பிக் பாஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கினார்.

36 வயதான நமீதா, சில வாரங்களுக்கு முன்னர் `தனக்கு நவம்பர் 24-ம் தேதி திருமணம்' என, காணொலி ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டிருந்ததைப்போல், திருப்பதியில் தன் அன்புக் காதலரை தென்னிந்திய முறைப்படி மணமுடித்தார். 

வீராவின் நீண்டகால நல்ல நண்பரான நமீதா, தான் காதலில் விழுந்த தருணத்தைக் கூறி பூரிப்படைகிறார்.

``ஒரு நாள் என்னை கேண்டில் லைட் டின்னருக்கு (Candle Light Dinner) அழைத்துச் சென்ற வீரா, தன் காதலைத் தெரிவித்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். ஒரு வருடமாக எனக்கு வீராவைத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். வீராவைப் பற்றி எனக்கு நன்கு அறிந்த காரணத்தால் அவரின் காதலை ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டேன். வீரா என் வாழ்க்கைத் துணைவராக வந்ததுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன்" என்று கூறி மகிழ்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து திருமண நிகழ்வுகளில் ஒன்றாக, வட இந்திய மெஹெந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பீச் நிற சல்வார் சூட்டில் செம க்யூட்டா இருந்தார் நமீதா. கைகள் முழுக்க மருதாணி, பூக்களால் தொடுக்கப்பட்ட கம்மல், நெத்திச்சுட்டி என மாடர்ன் பெண்ணாகக் கலக்கிய நமீதாவின் புகைப்படம் இணையதளத்தில் வைரல்! ராயல் ப்ளூ குர்தா பைஜாமாவில் வீரா தன் வருங்கால மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி, `பக்கா ஜோடி!' எனச் சொல்லவைக்கும்.

திருமண வரவேற்பு விழாவில் இருவரும் நீல நிற உடைகளை உடுத்தியிருந்தனர். சிந்தடிக் கல் வேலைப்பாடுகள் உடைய புடவை, எளிமையான நெக்லஸ், வளையல், ஜிமிக்கி, நெத்திச்சுட்டி என நமிதாவின் லுக், திருமண க்ளாஸ். ஜோத்புரி சூட், கையில் காப்பு என வீராவின் ஸ்டைலும் மெகா மாஸ்!

திருமணத்தின்போது, மணமக்கள் இருவரும் `பிங்க்' நிறத்தில் தங்களின் ஆடைகளை தேர்வுசெய்திருந்தனர். நமீதா, பிங்க் ஆரஞ்சு நிற பட்டுப்புடவையோடு வளையல், நெத்திச்சுட்டி, ஒட்டியாணம், கனமான நெக்லஸ் மற்றும் ஜிமிக்கி அணிந்து மிகையான ஒப்பனைகள் ஏதுமின்றி அழகான தென்னிந்திய மணமகள் தோற்றத்தில் இருந்தார். இவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் வீராவும் பிங்க் புரோகேட் (Brocade) ஷெர்வானி மற்றும் பீஜ் பட்டியாலா அணிந்து ஆனந்தத்தில்  நிறைந்தார்.

நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களே கூடியிருந்த இந்தத் திருமண விழாவில், ராதிகா - சரத்குமார் தம்பதி கலந்துகொண்டு வாழ்த்தினர். ``எனக்கு ஆதரவளித்துவரும் அனைவருக்கும் நன்றி" எனக் கூறி தன் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துகொண்டார் `மச்சான்ஸ்' அழகி.