Published:Updated:

`நான் முதலமைச்சரானா அங்கு நடிக்க மாட்டேன்!’ - சர்கார் ஆடியோ விழாவில் விஜய் அதிரடி

அலாவுதின் ஹுசைன்
மலையரசு
`நான் முதலமைச்சரானா அங்கு நடிக்க மாட்டேன்!’ - சர்கார் ஆடியோ விழாவில் விஜய் அதிரடி
`நான் முதலமைச்சரானா அங்கு நடிக்க மாட்டேன்!’ - சர்கார் ஆடியோ விழாவில் விஜய் அதிரடி

நம்ம மாநிலத்துக்கு நல்ல தலைவன் தேவைப்படுது என சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.  

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி எனப் படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பிற நடிகர்களும் கலந்துகொண்டனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. விழாவை தியா மேனன் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆடியோவை புதுவிதமாக மக்களே வெளியிடுமாறு வடிவமைத்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பலரும் விஜய்யை வாழ்த்திப் பேசினர்.

விழாவில் நடிகர் ராதாரவி, ``இது இசை வெளியீட்டு விழா அல்ல, சிறிய மாநாடு. இப்போது சர்க்கார் சுமாராக நடந்துகொண்டிருப்பதால் தான் இந்த சர்கார் வருகிறது.  இந்த சர்கார் வந்து அதைச் சரி செய்ய வேண்டும்" எனப் பேசினார். இதேபோல் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசுகையில், `விஜய் 3டி படம் பண்ண வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். விழாவில் பேசிய முருகதாஸ், ``தூத்துக்குடிக்கு விஜய் பைக்ல போனாருன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாண்டிச்சேரில இருந்து தூத்துக்குடிக்கு தானே கார் ஓட்டிட்டு போனாருன்னு யாருக்குமே தெரியாது. உங்க இந்த நேர்மைதான் இத்தனை பெரிய ஆரவாரமிக்க ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க. விஜய்யின் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு பெரிய விருதா இருக்கும். நான் மிடில்கிளாஸ்ல இருந்து வந்த ஆளு... நம்ம பட்ட கஷ்டத்த வசனங்களா வலியோடு எழுதி அதை விஜய் பேசினாருன்னா அத அவரே உணர்ந்தமாதிரி பேசுவாரு. சில வசனங்கள சிலர் பேசுனாதான் நல்லா இருக்கும். பொழுதுபோக்கு மட்டுமில்ல... இன்னிக்கு படங்கள்ல கருத்தும் சொல்லணும். விஜய், சன் டிவின்னு பெரிய ஆயுதங்கள் இருக்கும்போது பூக்கடை வைக்கக்கூடாது. பெரிய பீரங்கிதான் இந்தப்படம். படத்தோட டீசர் விரைவிலேயே வரும்" என்றார்.

கடைசியாக விழாவில் பேசிய விஜய், ``இந்தப்படத்துல ரஹ்மான் சார் கிடைச்சது சர்காருக்கு ஆஸ்கார் கிடைச்ச மாதிரி. என் கூட சேரும்போதெல்லாம் வெற்றிப்படம் கொடுக்குற முருகதாஸ் சாருக்கு நன்றி. மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சம் இருந்துச்சு. ஆனா இதுல அரசியல மெர்சல் பண்ணிருக்கோம். கலையை வளக்குறதுக்காகவே நிதியை அள்ளிக் கொடுக்குறதுனால அவருக்கு கலாநிதி மாறன் பேரு வச்சுருக்காங்கனு நினைக்கேன். பழ.கருப்பையா சாரோட படத்துல நடிச்சது பெருமையா இருக்கு. யோகி பாபுவோட வளர்ச்சியா நினைச்சு பெருமைப்படுறேன். வெற்றிக்காக எவ்வளோ வேணுனாலும் உழைக்கணும். ஆனா ஒரு சிலர் வெற்றியடைய கூடாதுனு உழைக்குறாங்க.  `உசுப்பேத்துருவங்ககிட்ட உம்முனு இருந்து கடுப்பேத்துருவங்ககிட்ட கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்'.

இத தான் என் வாழ்க்கையிலே பாலோ பண்ணுறேன். இத நீங்களும் பாலோ பண்ணுங்க. நாங்க சர்கார ஆரம்பிச்சுட்டு தேர்தல்ல நிக்குறோம். எல்லோரும் படத்துக்கு ஓட்டு போடுங்க'' என்றார். அப்போது, நிஜத்தில் நீங்கள் முதல்வர் ஆனால் எதை மாற்றுவீர்கள் எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அவர், ``கற்பனையா தான கேக்குறீங்க. இந்தப் படத்துல நான் முதல்வரா நடிக்கல. நிஜத்தில் நான் முதல்வரா ஆனா எத மாத்துவேன் பார்த்தா, அது லஞ்சம் ஊழல்தான். நான் முதல்வரானா முதலமைச்சரா நடிக்க மாட்டேன். ஒரு மாநிலத்துல தலைவன் நல்லா இருந்தா ஒரு மாநிலமும் ஆட்டோமேட்டிக்காக நல்லா இருக்கும். இங்க பெர்த் சர்டிபிகேட் வாங்குறதுல இருந்து டெத் சர்டிபிகேட் வாங்குறவரை எல்லாத்துக்கும் பணம் தேவை. தர்மம்தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனா கொஞ்சம் லேட் ஆகும். இங்கே நெருக்கடி வரும்போது நல்லவங்க தானா முன் வருவாங்க. அதான் இயற்கை. ஒருத்தன் அடிபட்டு நொந்து நூலாகி வருவான். அவனுக்கு கீழ வர்ற சர்கார் பயங்கரமா இருக்கும்" எனப் பேசி அதிரவைத்தார்.