Published:Updated:

இசைத்துறையில் 20 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் சங்கர் ராஜா! #20YearsofYuvanism

கருப்பு
இசைத்துறையில் 20 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் சங்கர் ராஜா! #20YearsofYuvanism
இசைத்துறையில் 20 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் சங்கர் ராஜா! #20YearsofYuvanism

யுவன் சங்கர் ராஜா... இசை ரசிகர்களை 20 வருடங்களாகக் கவர்ந்திழுக்கும் பெயர். 1996-ம் ஆண்டு வெளிவந்த 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான யுவன், இன்றோடு 20 வருடங்களை நிறைவுசெய்கிறார். அந்தத் திரைப்படம் வெளிவந்தபோது யுவனுக்கு வயது 16.

யுவன் இசையமைத்த 'அரவிந்தன்' திரைப்படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆனபோதும், அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஈரநிலா விழிகளை மூடி...' பாடல் இன்னும் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை, முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து, பல வெற்றிப் படங்களை யுவன் தந்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாது பல மொழித் திரையுலகங்களைச் சார்ந்த இயக்குநர்களின் ஆதர்ஷ இசையமைப்பாளராகவும் யுவன் திகழ்கிறார்.

இசைத்துறையில் 20 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யுவன் சங்கர் ராஜா! #20YearsofYuvanism

20 வருடங்களாக இசையுலகில் பயணித்துக்கொண்டிருக்கும் யுவன், "நான் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் என்னுடைய ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்களின் அன்புதான்.  என்னைப் பொறுத்தவரை, நேற்றுதான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பதுபோல உணர்கிறேன். இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும், இறக்கங்களும் என்னை எந்த விதத்திலும் பின்னடையச் செய்யவில்லை.

இசைதான் எனக்கு எல்லாமே! இந்த 20 வருடங்களின் எண்ணிக்கையை நான் இசையமைப்பாளராக பணிபுரிந்த திரைப்படங்கள் மூலமாகத்தான் கணக்கிடப்பட முடியுமே தவிர, நான் இசையமைக்கத் தொடங்கியதிலிருந்து அல்ல. நான் ஒரு பிறவி இசைக்கலைஞன் என்பது என்றென்றும் நீடித்து இருக்கும். இத்தனை வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு, என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில், என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இசைத்துறையில் அதிக கவனம் செலுத்துவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது, என்னுடைய தந்தைதான். அவர்தான் என்னை இசைத்துறையில் வார்த்தெடுத்து வளர்த்தவர். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இசைத்துறையில் இருபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில், நான் 'கொலையுதிர் காலம்' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். விரைவில் என்னுடைய அடுத்த படத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவனை வாழ்த்தியதுபோல, இன்னும் இன்னும் பல இருபது வருடங்கள் இசையில் எங்களைத் திளைக்கவைக்க வாழ்த்துகள் யுவன்!