Published:Updated:

''திறமையான ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்ஸ் சினிமாவுலயும் ஜொலிக்கணும்!'' - நெகிழும் வீஜே நக்‌ஷத்ரா

கு.ஆனந்தராஜ்
''திறமையான ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்ஸ் சினிமாவுலயும் ஜொலிக்கணும்!'' - நெகிழும் வீஜே நக்‌ஷத்ரா
''திறமையான ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்ஸ் சினிமாவுலயும் ஜொலிக்கணும்!'' - நெகிழும் வீஜே நக்‌ஷத்ரா

வீஜேவாக சின்னத்திரையில் தனி ரசிகர் பட்டாளத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் நக்‌ஷத்ரா, குறும்படங்களில் நடிப்பதுடன், சினிமா கனவுகளுடன் குறும்பட இயக்குநராக அடியெடுத்து வைக்கும் பலருக்கும் பக்கபலமாக இருக்கிறார். எப்போதும் போல பளிச் புன்னகையுடன் பேசத் தொடங்கினார், நக்‌ஷத்ரா. 

''என் கரியர் இப்போ சூப்பரா போயிட்டு இருக்கு. சன் டிவியின் 'சன் சிங்கர்', அவார்டு ஃபங்ஷன்ஸ், சினிமானு பல நிகழ்சிகளுக்கும் வீஜேவா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இப்போ, தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் பரிட்சயமான முகமா முன்னேறி இருக்கிறதா நினைக்கிறேன். இந்த அடையாளத்தை தக்கவெச்சுக்க சின்சியரா வொர்க் பண்ணியிருக்கேன்னு சந்தோஷமா சொல்லிக்கிறேன். கிளாஸிக்கல் டான்ஸரான நான், மீடியா ஃபீல்டுக்குள்ளே வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. பிளஸ் டூ முடிச்ச டைம்ல, என் ஃப்ரெண்ட் தந்தி டிவியின் ஒரு நிகழ்ச்சிக்கான ஆடிஷன்ல கலந்துக்க ஆசைப்பட்டாங்க. அது, நிறைவேறாம போகவே என்னை டிரைப் பண்ணச் சொன்னாங்க. சர்ப்ரைஸா அந்த ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டேன். காலேஜ்ல ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சுட்டே தொடர்ந்து தந்தி டிவியில் ஒளிபரப்பான அந்த ஷோவுக்கு காம்பியரிங் செய்துட்டு இருந்தேன். எனக்கான மீடியா வாய்ப்பு ஈஸியா கிடைச்சுட்டாலும், எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்" என்றார் நக்‌ஷத்ரா. 

குறும்படங்கள் மீதான ஆர்வம் பற்றிக் கேட்டவுடன் உற்சாகமாகிறார். 

"சின்னச் சின்ன ஷார்ட் ஃபிலிம் நடிச்சுதான், கேமரா முன்னாடி என்னை நிறைய அப்டேட் செஞ்சுகிட்டேன். அதுக்குப் பிறகுதான் டெலிவிஷன் வாய்ப்பு கிடைச்சது. சினிமா கனவுகளோட இருக்கும் பலருக்கும் பெரிய ஏணிப்படி, ஷார்ட் ஃபிலிம்தான். ஆனா, பலருக்கும் ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறது பெரிய சவால். படத்துக்கான செலவு, ஆர்டிஸ்ட் செலக்‌ஷன், யூடியூப்ல ஹிட் அடிக்க வைக்கிறதுனு பெரிய ரிஸ்க் இருக்கும். அதையெல்லாம் எனக்குத் தெரிஞ்ச ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்ஸ் அனுபவசிச்சதை நேரிலேயே பார்த்திருக்கேன். இப்படிபட்ட டைரக்டர்களுக்கு முடிஞ்ச உதவியை செய்யணும்னு ரொம்ப நாளாவே நினைச்சுட்டு இருந்தேன். நல்ல கதையோட என்னை அணுகுகிறவங்களுக்கு நடிக்கிறதோடு, பண ரீதியான உதவிகளையும் செய்றேன். 'ஏனோ வானிலை மாறுதே', 'என் இனிய பொன் நிலாவே'னு நான் நடிச்ச பல லவ் ஷார்ட் ஃபிலிம்ஸ் ரொம்பவே வரவேற்பைப் பெற்றுச்சு. பெண்களை உயர்வா சித்தரிக்கும், அதிக ஸ்கோப் கொடுக்கும் ஷார்ட் ஃபிலிம்ஸ் நிறைய வருது. அதனாலதான், எனக்கு ஷார்ட் ஃபிலிம்ல நடிக்க ஆர்வம் அதிகமா இருக்கு. அப்படி நான் நடிச்ச 'இவள் அழகு' படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைச்சு இருக்கு. திறமையான ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்கள் சினிமாவிலும் ஜெயிக்கணும். இதுதான் என்னோட ஆசை'' என்கிறார் மகிழ்ச்சியுடன். 

நக்‌ஷத்ராவின் சினிமா ஆர்வம் பற்றி கேட்டதும் புன்னகைக்கிறார். 

''ஷார்ட் ஃபிலிம்ல இருந்து விலகி, சினிமாவுல கவனம் செலுத்தலாமேன்னு பலரும் சொல்றாங்க. நான் சில படங்களில் நடிச்சிருந்தாலும், எனக்குப் பிடிச்ச கேரக்டராக இருந்தாலதான் நடிப்பேன். இல்லைன்னா, இப்போ எனக்குப் பிடிச்ச வீஜே, ஷார்ட் ஃபிலிம் ஆக்டிங்கே போதும். என்னை பொருத்தவரை ஷார்ட் ஃபிலிம், சின்னத்திரை, வெள்ளித்திரை என எல்லாத்தையும் ஒரே பார்வையிலதான் பார்க்கிறேன். அது பெருசு, இது சிறுசு எனப் பார்க்கிறது இல்லை. மூணு மீடியாவுக்கும் ஈக்குவல் ரெஸ்பான்ஸ் கொடுத்து, முழு ஈடுபாடோடு செய்றேன். வெள்ளித்திரையும் சின்னதிரையும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுது. அதனால், மக்களால் மத்தியில் அதிகம் ஃபெமிலியர் ஆவாங்க. ஷார்ட் ஃபிலிம்ஸ் சில லட்சம் பேரால்தான் பார்க்கப்படுது. அதனால், இதுக்கான பாப்புலாரிட்டி குறைவுதான்'' என்பவரிடம், உங்கள் பளிச் அழகு, சிரிப்புக்குக் காரணம் என்ன எனக் கேட்டதும் வாய்விட்டுச் சிரிக்கிறார். 

"பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு மேக்கப், டிரெஸ்ஸிங்ல ரொம்பவே ஆர்வமும் கவனமும் இருக்கும். நான் மீடியாவுல வொர்க் பண்றதால, எல்லோரையும் கவரும்படியாக மேக்கப், டிரெஸ்ஸிங் செஞ்சுக்குவேன். வேலை, தனிப்பட்ட பிரச்னைகளை மறக்கவே ஆடியன்ஸ் டிவியைப் பார்க்கிறாங்க. நம்ம புன்னகையைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி ரசிக்கணும்னு நான் நினைப்பேன். தவிர, சின்ன வயசுல இருந்தே ரொம்ப கலகலன்னு பேசிட்டே இருப்பேன். அதனால், நான் நார்மலா செய்ற விஷயமே, என்னோட ஃபீல்டுக்கு செட் ஆகிடுச்சு. நான் விடாமல் பேசிட்டே இருக்கிறதைப் பார்த்து ரொம்பவே ரசிக்குறோம்னு பலரும் சொல்றப்போ, எனக்கும் சந்தோஷமா இருக்கும். இதெல்லாம்தானே ஒரு வீஜேவுக்கான அடித்தளம்" எனச் சிரிக்கிறார் நக்‌ஷத்ரா. 

- கு.ஆனந்தராஜ்