Published:Updated:

'இவன் தந்திரனுக்கு தியேட்டர்ல ஒருவாரம் டைம் கொடுங்க ப்ளீஸ்' - கண்ணீருடன் இயக்குநர் ஆர். கண்ணன்

சனா
'இவன் தந்திரனுக்கு தியேட்டர்ல ஒருவாரம் டைம் கொடுங்க ப்ளீஸ்' - கண்ணீருடன் இயக்குநர் ஆர். கண்ணன்
'இவன் தந்திரனுக்கு தியேட்டர்ல ஒருவாரம் டைம் கொடுங்க ப்ளீஸ்' - கண்ணீருடன் இயக்குநர் ஆர். கண்ணன்

“புதிய வரி விதிப்பை எதிர்த்து காலவரையறை அறிக்காமல் தியேட்டரை மூடுறதா திடீர்னு அறிவிச்சிருக்காங்க. இதனால பாதிக்கப்போறது நான்தான். சொத்துக்களை விற்று, கடன் வாங்கி சொந்தமா எடுத்த  ‘இவன் தந்திரன்’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சம் வந்திருக்கிற இந்த சமயத்துல தியேட்டரை மூடுறது அநியாயம். ஒருவாரம் டைம் கொடுங்க...” என்று திரைத்துறையினரிடம் கண்ணீர் மல்க கேட்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். 

ஜி.எஸ்.டி. மற்றும் நகராட்சி வரிகளின் அறிமுகத்தால் டிக்கெட் விலை கடுமையாக உயரும், அதனால் ரசிகர்களின் வருகை குறையும்  என்பதால் இந்த வரி ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் திங்கள் கிழமை முதல் திரையரங்குகள் அனைத்தும்  மூடப்படும்' என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார். 

இந்நிலையில் நேற்று வெளியான 'இவன் தந்திரன்' படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் கண்ணீர் மல்க பேசியுள்ள ஓர் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், ''படம் ரிலீஸாகி திரையரங்குகளில் சக்சஸ் ஃபுல்லா போயிட்டிருக்கு. இப்போ பார்த்து வரும் திங்கள் கிழமை முதல் ஸ்ட்ரைக் என்று சொல்றாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாமால் திடீர்னு ஸ்ட்ரைக் என்று அறிவித்தால் எப்படி? இந்தப் படத்துக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? விக்ரமன் சார், சமுத்திரக்கனி சார், சேரன் சார் ஏதாவது பண்ணுங்க... திடீர்னு ஸ்டிரைக் வந்தா என்ன பண்றது?'' என்று கண்ணீர் மல்க, உடைந்த குரலில் பேசியிருக்கிறார். வைரலாகி வரும் இந்த ஆடியோ தொடர்பாக இயக்குநர் ஆர்.கண்ணனைத் தொடர்பு கொண்டு பேசினேன். 

''அந்த ஆடியோ வாய்ஸ் என்னுடையதுதான்'', என்று தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தார். ``இரண்டு வருஷம் கஷ்டப்பட்டு, ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணி, அதை ஷூட்டிங் முடிச்சு, நல்ல முறையில் ரிலீஸ் பண்ணி... ஓ மை காட் அதை வார்த்தைகளால்  சொல்ல முடியாது. படத்தை ரிலீஸ் பண்ணுற மாதிரி ஒரு அற்புதமான ஃபீல் எதுவும் இல்லை... இப்ப படத்துக்கும் எல்லோர்க்கிட்டயும் நல்ல விமர்சனங்கள் கிடைச்சிட்டு இருக்கு. இப்ப படத்தை நிறுத்துனா எப்படி? அந்த கஷ்டத்தைதான் வாட்ஸ் அப் மூலமா வெளிப்படுத்தினேன். 

வாட்ஸ் அப்பில் என் ஆடியோ கேட்டுவிட்டு, விஷால், ஞானவேல்ராஜா, தாணு சார், சிவா சார், கார்த்தினு பலர் பேசுனாங்க. விஷால் சார்,  ''கவலைப்படாதீங்க... நாங்க மீட்டிங்கில் பேசியிருக்கோம். இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்போம். சட்டவுன் ஆகாது’னு நம்பிக்கையா பேசினார். ``ஒரு விஷயம் பண்ணனும்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியாவது நோட்டீஸ் கொடுக்கணும். `ஸ்ட்ரைக் வரப் போகுது'னு தெரிஞ்சா. நாமளும் படம் ரிலீஸ் தேதியைத் தள்ளிப் போட்ருப்போம். ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ஸ்ட்ரைக் வந்தா எப்படி? புரியவே இல்லை. எவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மென்ட் இருக்கு, படமும் ரிலீஸாகியிருக்கு. என்ன சொல்றதுன்னே தெரியல.

ஜிஎஸ்டி நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஆனால், திரையரங்குகளுக்கு நகராட்சி வரின்னு முப்பது சதவீதத்தை நேற்று இரவுலிருந்து அறிவிச்சு இருக்காங்க. அதுதான் இப்போது பிரச்னை. ஜிஎஸ்டி வரிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. `பிரச்னையை முடிச்சுருவோம் எல்லாம் சரி ஆகிரும்'ன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு இவங்க எடுக்குற முயற்சியெல்லாம் கரெக்ட்தான்...  

நான் திரையரங்கு வர்த்தக சபைகிட்ட, `புதுப் படம் எதுவும் ரிலீஸ் பண்ண வேண்டாம். அட்லீஸ்ட் ரிலீஸ் பண்ணுன படத்தைத் தொடர்ந்து திரையரங்குகளில் ஓட விட்டா கொஞ்சம் நல்லாயிருக்கும்'னு கேட்டுக்குறேன். படத்தை ரிலீஸ் பண்ணியாச்சு. நல்ல விமர்சனம் கிடைச்சிருக்கு. ஒரு வாரம் தியேட்டரில் ஓடுனா பல தொழிலாளர்களின் உழைப்புக்கு மரியாதை கிடைக்கும். படத்தைக் காப்பாற்றவும் முடியும்ங்கிறதுதான் என் கோரிக்கை!'' என முடித்தார்.