Published:Updated:

ஜெயேந்திரர் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அடக்கம்!

ஜெயேந்திரர் காஞ்சிபுரத்தில்  வியாழக்கிழமை அடக்கம்!
ஜெயேந்திரர் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அடக்கம்!

ஜெயேந்திரர் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை அடக்கம்!

“மக்கள் என்றும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும், முடிந்தவரை இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்” என்று தொடர்ந்து கூறி வந்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு இன்று காலை திடீரென  மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 

1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி பிறந்த ஜெயேந்திரர், தன்னுடைய 19-வது வயதில், 1954-ம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். புரோகிதத்தில் இவரின் ஆழ்ந்த அறிவாலும், தனிப்பட்ட புலமையாலும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த செல்வாக்குடையவராகத் திகழ்ந்தார். அதன்பின், 40 ஆண்டுகள் கடந்து 1994-ம் ஆண்டில், காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். ஆன்மிகப் பணி தவிர, சமூகப் பணிகளிலும் நாட்டம் கொண்டவராக ஜெயேந்திர சுவாமிகள் விளங்கினார். அரசியல் தலைவர்கள் பலருடனும் நட்புடனேயே இருந்துவந்தார். 

அயோத்தி ராமர் கோயில் - பாபர் மசூதி பிரச்னைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சில தடவை இவர் மத்தியஸ்தராக இருந்து இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால், இவையனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. அதேபோல், குஜராத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே  ஏற்பட்ட பிரச்னையின்போது ஜெயேந்திரர் அங்கு சென்று சமரசம் செய்துவைத்தார். அதேபோல், குமரி மாவட்டத்தில் மதப் பிரச்னை எழுந்தபோதும் சமாதானம் செய்துவைத்தவர் ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில், மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயேந்திரர், “ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாகப் பட்டம் சூட்டிக்கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்கள் மட்டுமே ஆதீனமாகப் பட்டம் சூட்ட வேண்டும். ஆனால், நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறித் தலையில் முடியோடு பட்டம் சூட்டிக்கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்திருந்தார். 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், கடந்த 2004-ம் ஆண்டு கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக வரதராஜப் பெருமாள் கோயில் கணக்காளர் கணேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் வழக்கில்  சேர்க்கப்பட்டனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குக்குப் பின்னர், ஜெயேந்திரர் மனதளவிலும் உடலளவிலும் சோர்வாகவே காணப்பட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அங்கிருந்து காஞ்சி மடத்திற்குத் திரும்பி ஓய்வு எடுத்துவந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த நிலையில் இன்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு