Published:Updated:

கோலாகலமாய் முடிந்த சீர்காழி திருமுலைப்பால் திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மு.இராகவன்

திருஞானசம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்மன் ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் திருவிழா இன்று சீர்காழியில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.  

கோலாகலமாய் முடிந்த சீர்காழி திருமுலைப்பால் திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கோலாகலமாய் முடிந்த சீர்காழி திருமுலைப்பால் திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருஞானசம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்மன் ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் திருவிழா நேற்று சீர்காழியில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.  

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊராகும்.  இங்குத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது.  இதில் திருநிலைநாயகி அம்மன் சமேத பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.  திருஞானசம்பந்தர் மூன்று வயது சிறுவனாக இருந்தபோது பார்வதி தேவியான திருநிலைநாயகி அம்மன் ஞானப்பால் வழங்கி அவருக்கு ஞானத்தை ஊட்டியதாகத் தல வரலாறு கூறுகிறது.  இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டு தோறும் திருமுலைப்பால் திருவிழா கொண்டாடப்படுகிறது.  

அதன்படி, இந்தாண்டு நேற்று திருமுலைப்பால் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு திருஞானசம்பந்தர், பிரம்மபுரீஸ்வரர் சன்னதியிலிருந்து புறப்பட்டு, பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருளினார்.  அங்கு அவருக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது.  பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடு நடந்தது.  அப்போது, மலைக்கோயிலிலிருந்து உமாமகேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்து வரப்பட்டு, தீர்த்தக்குளக்கரையில் எழுந்தருளினார்.  அங்குத் தருமபுர ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் சுவாமி முன்னிலையில், தங்கக் குடத்தில் கொண்டுவரப்பட்ட பாலை கிண்ணத்தில் எடுத்து திருஞானசம்பந்தருக்கு வழங்கினார்.  தொடர்ந்து, சிவபெருமானுடன் உமாமகேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தார்.  அப்போது, சுவாமி, அம்மன் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதனையடுத்து பக்தர்கள் கொண்டு வந்த பால் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.  இவ்விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  
  
பெருமாள் கோயில்களில் ஆண்டிற்கு ஒருமுறை சொர்க்கவாசல் திறக்கப்படுவதுபோல் சீர்காழி சட்டைநாதர் கோயிலிலும் சிறப்பு வழி ஒன்று உண்டு. இந்த வழி மலைக் கோயிலிலிருந்து குளத்திற்கு வரும் வழியில் அமைந்துள்ளது.  இது திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுக்கும் திருமுலைப்பால் திருவிழாவின்போது மட்டும் தான் திறக்கப்படும்.  மற்ற நேரங்களில் இந்த வழி பூட்டிதான் இருக்கும்.  

இவ்விழாவினைத் தொடர்ந்து 22 -ம் தேதி சமணர்கள் தோற்றோடுதல் நிகழ்ச்சியும், 23 -ம் தேதி புஷ்ப விமான காட்சியும் 24 -ம் தேதி சகோபுரத்தில் சாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 25 -ம் தேதி திருக்கல்யாணமும், 26 -ம் தேதி பிச்சாண்டவர் உற்சவமும் நடைபெற உள்ளது.  27 மற்றும் 28 -ம் தேதிகளில் தேர்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.  இதனால் சீர்காழி விழாக்கோலம் பூண்டுள்ளது.