Published:Updated:

போன் வழியே போகுது அருள் வாக்கு...

போன் வழியே போகுது அருள் வாக்கு...
பிரீமியம் ஸ்டோரி
போன் வழியே போகுது அருள் வாக்கு...

அடடே ஆண்டிராய்டு சாமியார்!

போன் வழியே போகுது அருள் வாக்கு...

அடடே ஆண்டிராய்டு சாமியார்!

Published:Updated:
போன் வழியே போகுது அருள் வாக்கு...
பிரீமியம் ஸ்டோரி
போன் வழியே போகுது அருள் வாக்கு...
போன் வழியே போகுது அருள் வாக்கு...

மிழகம் தினுசு தினுசான எத்தனையோ சாமியார்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், ஆண்டிராய்டு சாமியார், அவை எதிலும் அடங்காத புது தினுசு. கரூரில் இருக்கும் பார்த்தசாரதி என்ற பாபாஜி ‘ஆண்டிராய்டு’ மொபைல் மூலமாகப் பக்தர்களுக்கு அருள்வாக்குச் சொல்கிறார். ‘கடவுளின் அனுக்கிரகத்தைத் தனது செல்போன்மூலம் பக்தர்களின் செல்போனுக்குக் கடத்தி(!), சகலப் பிரச்னைகளையும் தெறித்து ஓட வைக்கிறார்’ எனப் பக்தர்கள் நம்புவதால், ஆண்டிராய்டு சாமியாருக்கு நாளுக்குநாள் மவுசு கூடிவருகிறது.

அவரைப் பார்த்துவர ஒரு நல்ல நாளில் பயணப்பட்டோம். கரூர் தீயணைப்பு அலுவலகம் எதிரே உள்ள கோயிலில்தான் ஆண்டிராய்டு சாமியார் முகாமிட்டிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்த சத்குரு சம்ஹார மூர்த்தி என்பவர், இந்தக் கோயிலின் மூலவராக வீற்றிருக்கிறார். நாம் சென்றபோது, சிறிய கூட்டம் இருந்தது. ‘‘சாமியார் ரெடியாகிட்டு இருக்கார்’’ என்று சொல்லப்பட, ‘அதுவரை சும்மா இருப்பானேன்’ என நினைத்துச் சில பக்தர்களின் வாயைக் கிளறினோம்.

போன் வழியே போகுது அருள் வாக்கு...

நம்மிடம் பேசிய துரைசாமி என்பவர், ‘‘என் இடது கால்ல முட்டிக்குக் கீழே இருக்கும் பாகங்கள், ஐந்து வருடங்களுக்கு முன்பு திடீர்ன்னு கொழகொழன்னு ஆயிடுச்சு. தாங்கமுடியாத வலியால துடிச்சேன். ‘அலர்ஜி’ன்னு சொல்லி  டாக்டர்கள் வைத்தியம் பார்த்தாங்க. சில லட்சங்கள் செலவாச்சு. ஆனா, வலி குறையல. இந்தச் சாமியைப் பத்திக் கேள்விப்பட்டு ரெண்டு வாரம் முன்னாடி வந்தேன். இவர்கிட்ட அருள்வாக்குப் பெற செல்போன் வேணும்னாங்க. மகனோட செல்போனை வாங்கிட்டு வந்தேன். முதல்முறை அருள்வாக்குப் பெற்றபோதே, கால்வலி குறைஞ்சிடுச்சு. மூன்றாவது முறையா இங்க வர்றேன். பைசா செலவில்லாம, என் பிரச்னை தீர்ந்துக்கிட்டு வருது. 35 வயசாகியும் என் மகனுக்கு வரன் அமையல. இவர்கிட்ட வந்தபிறகு, இப்போ அதுக்கும் நல்ல சூழல் வந்திருக்கு’’ என்றார் கண்களில் ஆச்சர்யம் வழிய.

அடுத்து நம்மிடம் பேசிய கிருஷ்ணவேணி, “நான் மளிகைக்கடை வெச்சுருக்கேன். கணவர் கூலி வேலைக்குப் போறார். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. திடீர்னு வியாபாரத்துல பெரிய நஷ்டம். எனக்கு ரெண்டடிகூட நடக்க முடியாத அளவுக்கு உடம்புக்கு முடியல. என் கணவருக்கும் உடம்புக்கு முடியாமப்போச்சு. குடும்பமே நிலைகுலைஞ்சுபோச்சு. அடுத்த வேலை சோத்துக்கே கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தோம். இந்தச் சாமியைப் பத்திக் கேள்விப்பட்டுச் சில மாதங்களுக்குமுன்பு இங்க வந்தோம். செல்போன்மூலம் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சாமிகளோட அருளை, பாபாஜி எங்க குடும்பத்துக்குள்ள பாய்ச்சினார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்க வெச்சார். என் நோயையும் சரி செய்துட்டார். இப்போ எல்லா வகையிலும் மகிழ்ச்சியா இருக்கோம்” என்றார் பெருமிதமாக.

அந்தச் சமயத்தில், “சாமி வர்றார், சாமி வர்றார்” என்று குரல் கேட்டது. சுமார் 80 வயதில் வெண்தாடியோடு, கழுத்திலும் கையிலும் தலா ஒரு ருத்ராட்ச மாலை அணிந்தபடி பார்த்த சாரதி என்ற பாபாஜி பிரசன்னம் ஆனார். ஒரு கையில் ஆண்டிராய்டு மொபைல், மற்றொரு கையில் கதாயுதம் இருந்தன.

போன் வழியே போகுது அருள் வாக்கு...

தனது ஆஸ்தான இருக்கையில் அமர்ந்த பாபாஜி தலையை உயர்த்தி, வந்திருந்த கூட்டத்தை ஒருமுறை நோட்டம்விட்டார். நம்மைக் கண்டதும் ஒரு அந்நியனைப் பார்ப்பதுபோல், ‘‘நீங்க யார்?’’ என்று கேட்டார். ‘நிருபர்’ என்றதும், ‘‘ஓஹோ...’’ என்றுவிட்டு, தமது ஆண்டிராய்டு மொபைல் அருள்வாக்கு மேளாவைத் தொடங்கினார்.

வந்திருந்த இளம் பக்தை ஒருவர், “சாமி! நான் எம்.பி.பி.எஸ் படிக்கணும். அதற்கு ப்ளஸ் 2-வில் அதிக மார்க் இருந்தாலும், நீட் தேர்வு எழுதி நிறைய மார்க் எடுக்கணுமாம். அதுக்கு நீங்கதான் வழி செய்யணும்’’ என்று கோரிக்கை வைத்தார். உடனே பாபாஜி தன் போன் நம்பரைச் சொல்லி, அந்த எண்ணுக்குப் பக்தையின் போனிலிருந்து போன் செய்யச்சொன்னார். பக்தையும் அப்படியே செய்ய, தன் ஆண்டிராய்டு மொபைலை எடுத்து, தன் ஆசனத்தின் கைப்பிடியில் வைத்துக்கொண்டார். பக்தையின் போனை வாங்கி, அவரது தலையில் வைத்தார். அதன்பிறகு, ருத்ராட்ச மாலையை எடுத்தவர், அதைத் தன் முகத்துக்கு நேரே வைத்து, மேலே போட்டோவாக இருக்கும் சம்ஹார மூர்த்தியை நினைத்து வேண்டிக் கொண்டு, ஏதோ முணுமுணுத்தார். அப்படியே அந்த ருத்ராட்ச மாலையைத் தனது செல்போனைச் சுற்றிச் சுற்ற ஆரம்பித்தார். இரண்டு நிமிடங்கள் கடந்ததும், வைப்ரேஷன் ஆகும் போன் போல அந்தப் பக்தையின் உடல் லேசாகச் சிலிர்த்தது.

‘‘இப்போ எப்படி இருக்கு?’’ என்று சாமி கேட்க, ‘‘ஏதோ ஒரு சக்தி எனக்குள்ள பாய்ந்த மாதிரி இருக்கு சாமி. இனிமே எத்தனை நீட் வெச்சாலும் நான் பாஸ் பண்ணிருவேன். அந்த நம்பிக்கை எனக்குள் பொங்கிவந்துவிட்டது” என்று சொல்லிச் சிலாகித்தார். அதைக் கண்டுகொள்ளாமல் ‘‘நெக்ஸ்ட்’’ என்றார் பாபாஜி. அடுத்து வந்து அமர்ந்த ஒரு நடுத்தர வயது நபருக்கும் இப்படி ஆண்டிராய்டு போன் வழியே அருள் வாக்கைக் கடத்தினார். இப்படியே வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ‘செல் டு செல்’ வழியே சம்ஹாரமூர்த்தியின் அனுக்கிரகத்தை அனுப்பி வைக்க, அவர்கள் வைப்ரேஷன் மோடில் இருக்கும் ஆண்டிராய்டு போன் மாதிரியே சிலிர்த்தார்கள்.

பிரச்னைகளின் வீரியம் அதிகம் இருக்கும் பக்தர்களுக்கு மட்டும் கூடுதலாக ‘எலுமிச்சம்பழ டெஸ்ட்’ (எக்ஸ்ரே டெஸ்ட் எடுப்பதுபோல்னு வச்சுக்குங்களேன்!) எடுக்க ஆரம்பித்தார்.

போன் வழியே போகுது அருள் வாக்கு...

பூஜை செய்த எலுமிச்சம்பழங்களை ஒருவர் பயபக்தியுடன் பாபாஜி முன்பாக ஒரு தட்டில் கொண்டுவந்து வைக்கிறார். தீராத பிரச்னையுள்ள பக்தரைத் தன் முன்னே அமர வைக்கும் பாபாஜி, அந்த எலுமிச்சம்பழங்களில் ஒன்றைத் தன் வலது உள்ளங்கையில் வைத்துக்கொள்கிறார். பேலன்ஸுக்காக வலது கை முட்டியைத் தன் இருக்கை யின் கைப்பிடியில் அழுத்தி வைத்துக் கொள்கிறார். ஏதோ புரியாத வார்த்தை களை முணுமுணுக்கிறார். உள்ளங்கை யில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை உற்றுப் பார்க்கிறார். பக்தரும் அதை வெறித்துப் பார்க்கிறார். அவரது கையி லிருந்து பழம் நழுவித் தரையில் விழுகி றது (யாரும் கவனிக்காதபடி அவர் தன் கையை மெல்லச் சாய்க்க, பழம் கீழே விழுகிறது).

தொண்டையைச் செருமிக் கொண்ட பாபாஜி, ‘‘உனக்குப் பெரிய அளவில் பிரச்னை இல்லை. தீர்க்கக் கூடிய அளவிலான பிரச்னைதான். பழம் விழாமக் கையில் இருந்திருந்தால்தான் பிரச்னை. இந்தப் பழத்தை எங்கே போனாலும் பாதுகாப்புக்கு எடுத்துட்டுப் போ. வீட்டுக்கு வந்ததும் சாமி படத்துக்கு முன்னாடி வச்சு வணங்கு. ஒன்பது நாள் கழிச்சு வா. பழம் காய்ஞ்சு போகாம அப்படியே இருந்தா, உன் பிரச்னையைத் தீர்த்துடலாம். பழம் காய்ஞ்சு சுருங்கிப் போயிருந்தா, ரொம்பப் பிரச்னைன்னு அர்த்தம். அதை எப்படித் தீர்க்குறதுன்னு அப்புறம் பார்க்கலாம்’’ என்றார். பக்தர் பயபக்தியுடன் அந்தப் பழத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். இந்த ‘டெஸ்ட்’டில் சிலருக்குப் பழம் கீழே விழுந்தது; பாதிப் பேருக்குச் சாமி கையிலேயே பழம் இருந்தது.

இப்படியே அருள்வாக்கை முடித்தவர், ‘‘இங்கே வாங்க. இப்பச் சொல்லுங்க’’ என்று நம்மை அழைத்தார். ‘‘உங்களைப் பற்றிச் சொல்லுங்க சாமி’’ என்றதும், தனது வரலாற்றை நம்மிடம் விவரித்தார்.

‘‘எனக்குச் சொந்த ஊர் கரூர்தான். அந்தக் காலத்திலேயே இன்ஜினீயரிங் படிச்சவன். குடும்பம், குட்டின்னு லௌகீக வாழ்க்கை வாழ்ந்தவன். 10 வருஷங்களுக்கு முன்னாடி, ‘இது உன் முழுமையான வாழ்க்கை இல்லை’ன்னு எனக்குள்ள அசரீரி ஒலிச்சது. அப்புறம்தான், ஆன்மிக வாழ்க்கைக்கு வந்தேன். போகாத கோயில் இல்லை. பார்க்காத மகான் இல்லை. ஊர் ஊராக அலைந்த நான், ஐந்து வருடங்களுக்குமுன்பு இந்தச் சத்குரு சம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு வந்தேன். இந்தக் கோயிலில் என் கால் பட்ட நொடியே, எனக்குள்ள ஏதோ ஒரு பவர் நுழைஞ்ச மாதிரி இருந்துச்சு. அது சம்ஹாரமூர்த்தியின் அருள் கடாட்சம்னு எனக்குப் புரிஞ்சுச்சு. அதிலிருந்து என்னையும் அறியாமல் அருள்வாக்குச் சொல்ல ஆரம்பிச்சேன். முதல்ல சாதாரண செல்போனைத்தான் பயன்படுத்தினேன். இப்ப எல்லோரும் ஆண்டிராய்டு மொபைலுக்கு மாறிட்டாங்க இல்லையா? அதனால சம்ஹாரமூர்த்தியும் என்னை ஆண்டிராய்டு மொபைலுக்கு மாறச் சொன்னார்’’ என்றார்.

நம்மிடம் பேசிக்கொண்டிருந்த போதே பாபாஜி மொபைலில் ஓர் அழைப்பு வந்தது. ‘‘மலேசியாவிலிருந்தா பேசுகிறீங்க?’’ என்று கேட்ட பாபாஜி, மொபைலிலேயே அந்தப் பக்தருக்கு அருள்வாக்கை டிரான்ஸ்ஃபர் செய்தார். ஐ.எஸ்.டி அழைப்பில் அநாயாச வேகத்தில் அது போய்ச் சேர்ந்திருக்கும் போல! சிரித்தபடி நம்மிடம் தொடர்ந்து பேசினார். ‘‘இங்க வந்தா எல்லாப் பிரச்னைகளும் தீரும். உடல், மனம், குடும்பம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காகப் பலரும் தேடி வர்றாங்க. வாரத்துல செவ்வாய் மட்டும் மௌன விரதம் இருப்பேன். மத்த எல்லா நாள்களிலும் பக்தர்களுக்கு அருள்வாக்குச் சொல்றேன். இதுக்காக நான் சல்லிக்காசு தட்சணையா வாங்கிறதில்லை’’ என்றார்.

போன் வழியே போகுது அருள் வாக்கு...

நாம் சந்தேகமாகப் பார்ப்பதைப் புரிந்து கொண்டார்போல! உடனடியாக நமக்கும் எலுமிச்சம்பழ டெஸ்ட் வைத்துவிட்டார். அவர் கைகளை நாம் உற்றுப் பார்த்தபடி இருக்க, நம் போட்டோகிராபரின் கேமராவும் அந்தக் கையையே ஃபோகஸ் செய்தது. இதனால் வேண்டுமென்றே பழம் இருக்கும் தனது வலது கையைச் சாய்க்காமல், பழம் கீழே விழ வாய்ப்பளிக்காமல் தவிர்த்தார். 10 நிமிடங்கள் அமைதியாகக் கடந்தன. அதன்பின் நம் முகத்தைப் பரிதாபத்துடன் பார்த்த பாபாஜி, ‘‘தம்பி, உனக்குப் பிரச்னைகள் அதிகமா இருக்கு. இந்தப் பழம்தான் உனக்கு வேலி. இதை வீட்டுல வச்சு வணங்கு. எங்கே போனாலும் எடுத்துட்டுப் போ. குறிப்பா வண்டியில் போகும்போது இந்தப் பழத்தைப் பையில் போட்டுக்க. இதை எடுத்துட்டுப் போகலன்னா, கண்டிப்பா உனக்கு விபத்து ஏற்படும். ஒன்பது நாள் கழிச்சு திரும்பவும் வா. எல்லாப் பிரச்னைகளையும் வழிச்சு எடுத்துடறேன்’’ என்று வாழ்த்தி(!) அனுப்பினார்.

மக்களிடம் மூடநம்பிக்கை இருக்கும்வரை இதுபோன்ற  சாமியார்கள் அப்டேட் வெர்ஷன்களில் உருவாவதைத் தடுக்க முடியாது.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்