ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

ஃபோர்டும் மஹிந்திராவும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டணி பற்றியும், அதன் தொடர்ச்சியாக இந்தக் கூட்டணியில் தயாரிக்கப்படும் கார்கள் ஃபோர்டு மற்றும் மஹிந்திரா லோகோவோடு தனித்தனியாக விற்பனைக்கு வருவது பற்றியும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

இப்போது அதே ரீதியில் இன்னொரு கூட்டணியும் மலர்ந்திருக்கிறது. மாருதி சுஸூகியும், டொயோட்டாவும் இப்போது புதிதாக கைகோத்திருக்கின்றன. என்னதான் இனோவாவும், ஃபார்ச்சூனரும் டொயோட்டாவை வெற்றிகரமான ஒரு கார் நிறுவனமாக நம் நாட்டில் நிலைநிறுத்தியிருந்தாலும், எண்ணிக்கை ரீதியாக அதிகம் விற்பனையாகும் கார் சந்தையில், டொயோட்டாவால் அழுத்தமாகக் கால் பதிக்க முடியவில்லை. எட்டியோஸும், லிவாவும் இந்த விஷயத்தில் டொயோட்டாவுக்குப் பெரிய அளவில் உதவ முடியவில்லை. இந்தக் குறையை மாருதியின் பிரெஸ்ஸா மற்றும் பெலினோ வாயிலாகப் பூர்த்திசெய்துகொள்ள இருக்கிறது டொயோட்டா. ஆம், இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக டொயோட்டா தன் லோகோவில் பிரெஸ்ஸா, பெலினோ ஆகிய கார்களைத் தயாரித்து சந்தைப்படுத்தப் போகிறது.

மாருதி சுஸூக்கு வேறு மாதிரி பிரச்னை. நாட்டிலேயே அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று ‘பெத்த’ பேர் இருந்தாலும், விலை உயர்ந்த கார்களின் சந்தையில் மாருதி தனி முத்திரை பதிக்க விரும்புகிறது. அதனால், அது டொயோட்டாவின் கரோலாவை தனது லோகோவுடன் இந்தியாவில் விற்பனை செய்யப் போகிறது! 

இவையெல்லாம் நீண்ட காலத் திட்டங்கள் இல்லை. இவை அனைத்துமே உடனடியாக அமலுக்கு வரப்போகின்றன. ஆம், அடுத்த ஆண்டிலேயே மேலே குறிப்பிட்ட கார்கள் எல்லாம் விற்பனைக்கு வரப்போகின்றன என்று இரண்டு நிறுவனங்களும் சொல்கின்றன.

லோகோவை மட்டும் மாற்றி ஒரு காரை விற்பனை செய்தால், அது நம் ஊரில் எடுபடாது என்பதற்கு நம் நாட்டிலேயே நிறைய உதாரணங்கள் உண்டு. ‘ரெனோ டஸ்ட்டர்’ க்ளிக்கான அளவுக்கு ‘நிஸான் டெரானோ’ ஹிட்டாகவில்லை. ‘நிஸான் சன்னி’ அளவுக்கு ‘ரெனோ ஸ்காலா’ வெற்றிபெறவில்லை. ‘நிஸான் மைக்ரா’ அளவுக்கு  ‘ரெனோ பல்ஸ்’ வெற்றியடையவில்லை. இதெல்லாம் டொயோட்டாவுக்கும் சுஸூகிக்கும் தெரியாதது இல்லை.

அதனால்தான் பிரெஸ்ஸா, பெலினோ, கரோலா ஆகிய கார்களில், வெறுமனே பேட்ஜை மட்டும் மாற்றாமல், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தவிர்த்து பல்வேறு மாற்றங்களை இரண்டு நிறுவனங்களுமே செய்யவிருக்கின்றன. அதேபோல, சர்வீஸ் செய்வதிலும் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் இரண்டு நிறுவனங்களும் உணர்ந்தே இருக்கின்றன. இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க இரு நிறுவனங்களுமே சந்தை யுக்திகளை மாற்றியமைத்துக்கொண்டிருக்கின்றன.

முயற்சி திருவினை ஆகட்டும்!

அன்புடன்

ஆசிரியர்