அலசல்
Published:Updated:

“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி!”

“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி!”

விருப்ப மரணமடைந்த விஞ்ஞானி

‘‘என்னுடைய வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொள்வதற்காக இவ்வளவு தூரம் பயணிக்கவேண்டியிருப்பதில் வருத்தம்தான். ஆனால், எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. என் குடும்பத்தாரிடம் விடைபெறும்பொழுது மட்டும் உயிர் வலித்தது. அதற்கென்ன செய்ய முடியும்? இதுதான் வாழ்க்கை” என்றார் பேராசிரியர் டேவிட் குட்ஆல். பின்னர் மரணத்தை வழங்கும் ஒரு மாளிகையில், தன் உறவினர்கள் சூழ்ந்திருக்க, பீத்தோவனின் சிம்பொனி இசைக்க, தன் 104 வயதில் அமைதியாக, வலியின்றி மரணத்தை நோக்கிச் சென்றார் அவர்.

ஒரு மனிதனுக்கு மிகவும் துன்பம் தரத்தக்க நிகழ்ச்சி மரணம் என்பார் திருவள்ளுவர். மே 10-ம் தேதி இரவு ஸ்விட்சர்லாந்தில், அப்படிப்பட்ட மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார் குட்ஆல். இவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரம் பெர்த்தில் உள்ள எடித்கோவன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். உலகின் பல நாடுகளில் 60 வயது தாண்டினாலே பணியிலிருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள். ஆனால், குட்ஆல் தனது 102 வயதிலும் பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஆராய்ச்சிப் பணியாற்றியவர். தனக்கு ஓய்வு என்பதே கூடாது என்று எண்ணிய மிகச் சிறந்த மனிதர். அவருடைய வாழ்க்கை, ‘பணியிலிருந்து ஓய்வுபெற்றதுமே எல்லாம் முடிந்து விட்டது’ என்று நினைக்கிற பலருக்கும் பல பாடங்களை போதிக்கிறது.

“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி!”

தற்கொலை செய்துகொள்வதை எந்த நாட்டுச் சட்டமும் அனுமதிப்பதில்லை. ‘விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல’ என ‘பராசக்தி’யில் கருணாநிதியின் வசனம் வரும். அதைத்தான் இப்பொழுது கருணைக் கொலை என்று அனுமதித்திருக்கின்றார்கள். ஆனால், தானே முன்வந்து தன் சொந்த விருப்பத்தின் பேரில் மரணத்தைத் தழுவுவதற்கு (Voluntary Euthanasia) ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன. அதற்காக அவர்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளார்கள். 

இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், எந்த வழிமுறையிலும் உடல்ரீதியான வலி இருக்கவே இருக்காது. இனிப்பான குளிர்பானத்தில் உயிரைப் போக்கும் மருந்தை மருத்துவர்கள் கலந்து கொடுப்பார்கள். அதை விருப்ப மரணத்தைத் தழுவுபவர் தானே தன் கைகளால் பிடித்துக் குடிக்கவேண்டும். மற்றொரு முறை, ஊசி மருந்து மூலம் மரணமடைவது. மருத்துவமனைகளில் குளூக்கோஸ் செலுத்தப்படும்போது, அது சொட்டுச் சொட்டாக இறங்குவதற்கு ஒரு திறக்கும் சக்கரம் இருக்கும். அதை அவ்வப்போது செவிலியர்கள் சரி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். யார் மரணத்தைத் தழுவ விரும்புகிறார்களோ, அவர்கள் கையில் அதேபோன்ற சக்கரத்தைக் கொடுத்து விடுவார்கள். உடலில் ஊசி குத்தித் தயாராக இருக்கும். மரணிப்பவர் அதன் சக்கரத்தைத் திறந்த சில நொடிகளில் மயக்க நிலைக்குச் சென்று விடுவார். பின்னர் அமைதியான மரணம் ஏற்படும். இந்த முறையில்தான் குட்ஆல் விருப்ப மரணத்தைத் தழுவினார்.

குட்ஆல் ஓய்வறியாத ஆராய்ச்சியாளர். 1914-ல் லண்டனில் பிறந்தவர். இங்கிலாந்து, கானா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான CSIRO-வில் 1979 வரை பணியாற்றியவர். பின்னர் எடித்கோவன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றியவர். மூன்று முறை மணமுடித்து, மூன்று மகன்கள், ஒரு மகள், 10 பேரப் பிள்ளைகள், 15 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் என்று வாழ்ந்த பேராசிரியர் குட்ஆல், ஏன் விருப்ப மரணத்தைத் தழுவினார்?

“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி!”

டாக்டர் குட்ஆல் 102 வயதிலும் எடித்கோவன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, ‘‘உங்களுடைய சொந்த பாதுகாப்புக்காக நீங்கள் இனிமேல் வரவேண்டாம்’’ என்று கூறிவிட்டார்கள். அவர் சம்பளமில்லாமல்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்குப் பணம் ஒரு பிரச்னையில்லை. ஆனால், ‘இவ்வளவு நாளும் ஏதோ நம்மால் இயன்றதை இந்த அறிவியல் உலகுக்குச் செய்து கொண்டிருந்தோம். நம்மைப் பணியிடத்துக்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே’ என்று அவருக்கு அதிர்ச்சி. இரண்டாவது காரணம், மங்கிய கண் பார்வை. அவர் தன் சிறு வீட்டில் தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். ஓராண்டுக்குமுன் தன் அறையில் கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திரிக்க முடியவில்லை. இரண்டு நாட்கள் தரையிலேயே விழுந்து கிடந்திருக்கிறார். மூன்றாம் நாள் வீட்டைச் சுத்தம் செய்பவர் வந்துதான் அவரை மீட்டார். இது அவருக்குத் தாங்கொணாத மனச்சுமையைக் கொடுத்துவிட்டது.

இந்த வயதிலும் அவருடைய மூளை சிறப்பாகவே செயல்பட்டது. அவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் எதுவும் இல்லை. அதனால்தான் அவருடைய விருப்ப மரணம் இன்று உலகின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ‘‘உடல் ஒத்துழைக்காதபோது, இந்த உடலால் நம் மூளைக்கு என்ன பயன்? ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு மனவலியோடும், ஒத்துழைக்காத உடலோடும், காணமுடியாத கண்களோடும் வாழ வேண்டும்?’ என்று எண்ணினார். ஸ்விட்சர்லாந்தில் தன் விருப்ப மரணம் சட்டபூர்வமானது என்பதால், அங்கு சென்று மரணமெய்த விரும்பினார். அந்த நீண்ட நெடிய இறுதிப் பயணத்தை விமானத்தின் சாதாரண வகுப்பில்தான் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், விருப்ப மரண ஆர்வலர்கள் சேர்ந்து எட்டு லட்ச ரூபாய் நிதி திரட்டி அவரை சொகுசான வணிக வகுப்பில் அனுப்பி வைத்தார்கள். விரும்பி மரணத்தை ஏற்பதற்கும் ஒரு மனவலிமை தேவைப்படுகிறது.

- ஆஸ்திரேலியாவிலிருந்து அண்ணாமலை மகிழ்நன்