Published:Updated:

அவன் ஒரு வேள்வித்தீ!

அவன் ஒரு வேள்வித்தீ!
பிரீமியம் ஸ்டோரி
அவன் ஒரு வேள்வித்தீ!

இந்துமதி - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி, ராஜன்

அவன் ஒரு வேள்வித்தீ!

இந்துமதி - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி, ராஜன்

Published:Updated:
அவன் ஒரு வேள்வித்தீ!
பிரீமியம் ஸ்டோரி
அவன் ஒரு வேள்வித்தீ!

பாலா என்கிற பாலகுமாரனை முதன்முதலாக எப்போது சந்தித்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். 1970-களில்தான் சந்தித்தேன்.

சிறு பத்திரிகைகளிலிருந்து நான் விகடனுக்கு இடம்பெயர்ந்த காலம். இரண்டே சிறுகதைகளுக்குப் பிறகு தொடர் எழுதிக்கொண்டிருந்த காலம். மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை ஜட்ஜ் ஜம்புலிங்க முதலியார் தெருவில் என் வீடு. அப்பா மிகவும் கண்டிப்பானவர். எந்தச் சிறிய தவறுக்கும் கடுமையாக தண்டிப்பவர். என் எழுத்துகூட அப்பாவுக்குத் தெரியாமல் எழுதப்பட்டதுதான். என் முதல் தொடருக்கு, தெருவெல்லாம் போஸ்டர் ஒட்டும் வரை, அப்பாவுக்கு நான் எழுதுகிற விஷயமே தெரியாது. தெரியவந்ததும், நான் வாங்கிய திட்டுகளும் அடிகளும் ஏராளம்.

என் முதல் தொடர் வெளிவந்தபோதுதான், ஒரு நண்பகல் நேரத்தில் பாலகுமாரனும் சுப்ரமண்ய ராஜுவும் வீடு தேடி வந்தார்கள். நான் பாவாடை தாவணியில் இருந்த பருவம். அவர்களுக்கும் கிட்டத்தட்ட அதே பிராயம்தான். அப்போது பாலா, எங்கள் தெருவுக்குப் பின்னால் இருந்த டீச்சர்ஸ் காலனியில் வசித்துவந்தான். என் வீட்டு விலாசம் கண்டுபிடித்து நேரில் வந்துவிட்டார்கள். `இவ்வளவு சின்ன வயசுல தொடர்கதையா?’ என்ற கேள்வி, அவர்கள் இருவர் முகங்களிலும் தொக்கி நின்றது.

இருவரும் உட்கார்ந்து காபி குடித்துவிட்டு, கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். பத்திரிகை நிருபர்கள் மாதிரி கேள்விகள் வந்தன. முக்கால்வாசிக் கேள்விகள் பாலகுமாரனிடமிருந்து வந்தவையே. ராஜு வெறும் சாட்சியே!

அவன் ஒரு வேள்வித்தீ!

``திரைப்படங்கள் பார்ப்பதுண்டா?”

``உண்டு.”

``சமீபத்தில் பார்த்த படம்?”

``தாகம்!”

பாலாவின் புருவம் உயர்ந்ததைக் கவனித்தேன்.

``பிடித்த நடிகர்?”


``முத்துராமன்.”

``காரணம்..?”

``அவரது எக்ஸ்பிரஷன்லெஸ் எக்ஸ்பிரஷன்!”

``பிடித்த எழுத்தாளர்?”

``தி.ஜானகிராமன்!”

இது போதாதா, எங்களுக்குள் நட்பு பெருகுவதற்கு? பெருகிற்று. நாளாக நாளாக பிரவாகித்து ஆர்ப்பரித்து, ஆறாய் ஓடிற்று. அதன் பிறகு மாலனும் சேர்ந்துகொண்டான். நால்வரும் உற்ற நண்பர்களானோம்.

ஆல் இண்டியா ரேடியோ, இலக்கியச் சிந்தனை, சத்யஜித் ரே படங்கள், அகிரா குரோசோவா படங்கள், ஷ்யாம் பெனகல், ஜெயபாதுரி, சிட்சோர், சோட்டீஸீபாத், அங்கூர், நிஷாந்த், சரபஞ்சரா, பூமிகா, ஸ்மிதா பாட்டீல், ஷப்னா ஆஸ்மி, கே.பாலசந்தர், பாரதிராஜா, டிரைவ் இன் ரெஸ்டாரன்ட், யு.எஸ்.ஐ.எஸ்., பிரிட்டிஷ் கவுன்சில், பீச் மணல், இலக்கியச் சிந்தனைக்குப் பிறகு வாசல், புல்வெளி என எத்தனை இடங்கள்... எத்தனை பேச்சுகள்... எத்தனை சண்டைகள்... எத்தனை புத்தகங்கள்... எத்தனை மனிதர்கள்!

கையில் சிகரெட்டும் வாயில் புகையுமாக அப்பாவிடமே வந்து நின்று தைரியமாகக் கேட்பான் பாலா.

``மாமா... இந்து இல்லையா?”

அவன் போன பிறகு எனக்கு திட்டு விழும். அடிகள்கூட விழும். ஆனாலும் எங்கள் நட்பு நின்றதில்லை. இதற்குள் நிறைய இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். உலக இலக்கியங்கள் அறிமுகமாயின. நிறைய வாசித்தோம். நிறைய சம்பாஷித்தோம். நான் ஆனந்த விகடனில் என் இரண்டாம் தொடரான `மலர்களிலே அவள் மல்லிகை’ ஆரம்பித்தேன். அப்போதுதான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவனும் கமலாவைத் திருமணம் செய்து கொண்டான். சுப்ரமண்ய ராஜு, ஜெயபாரதியின் தங்கை பாரதியைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டான். மாலன், சரஸ்வதியை. இப்படி நாலு பேரும் நான்கு வழிகளில் பயணித்தாலும் நட்பு என்கிற நாற்சந்தியை விட்டுவிலகியதே இல்லை. இதுபோன்ற நட்பு அபூர்வம்; பாசம் அபூர்வம்; ‘புதுவசந்தம்’ மாதிரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவன் ஒரு வேள்வித்தீ!

அதற்குள் பாலா வளர்ந்தான். மாலன் வளர்ந்தான். ராஜு, எப்போதும்போல் ஆர்ப்பரிக்காமல் அமைதியாகவே நின்றான். நால்வரில் பாலாவின் வளர்ச்சி அசுரத்தனமானது. அவன் உழைப்பும் அசுரத்தனமானது, அதிவேகமானது. குற்றாலம் மாதிரி ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியது. இல்லை... நயாகரா மாதிரி. மடமடவென ஏணியில்கூட அல்ல, லிஃப்டில் ஏறி மேலே போனான். அப்படிப்பட்ட அசாதாரண வளர்ச்சி. எழுத்து, சின்னத்திரை, சினிமா மட்டுமின்றி ஆன்மிகத்திலும் முன்னேறினான்.

ஒரு நாள் அவன் வீட்டில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தேன்.

``இந்து... வாசி. கற்றுக்கொள். தினமும் பழகு. இனி உனக்கு நான்தான் குரு” என்றான்.

அவனால்தான் யோகிராம்சுரத்குமாரைச் சந்தித்தேன். மாயம்மாவைத் தேடிப் போனேன். கோடிச் சாமியாரை தரிசித்தேன். ஆனால், என் ஆன்மிக வழி வேறாக இருந்தது. நான் ஆன்மிகம் என நினைப்பது, அன்பை மட்டும்தான்.

திலகவதி தொகுத்து வெளியிட்ட என் `முத்துக்கள் பத்து’ சிறுகதைத் தொகுப்புக்கு பாலாவிடம்தான் முன்னுரை வாங்கினேன். கிட்டத்தட்ட பத்துப் பக்கங்களுக்குமேல் மனம் திறந்து எழுதியிருந்தான். எந்தச் சிறுகதையைப் பற்றியும் எழுதவில்லை. முழுக்க முழுக்க எங்கள் நட்பு பற்றி மட்டுமே எழுதியிருந்தான்.

பாலா அன்பானவன், பாசமானவன், பாசத்துக்கு அடிமையானவன். நிறைய எழுத வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தனக்குள் வேள்வித்தீயாக மூட்டிக்கொண்டவன். அந்தத் தீ தகதகவென எரிந்து சுடர்விட்டதில், அழகாகப் பிரகாசித்தவன். சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் எல்லாம் பெறவேண்டும் என ஆசைப்பட்டவன். அந்த ஆசைகள் நிறைவேறும் முன்பாக அடங்கிப்போய்விடுவான் என நான் நினைக்கவேயில்லை. திகுதிகுவென சுடர்விட்டுப் பிரகாசித்த நெருப்பு, சட்டென அணைந்து போகுமென எதிர்பார்க்கவே இல்லை.

செய்தியைக் கேட்டதும் காவேரி ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். ஐசியூ வாசலில் சாந்தாவும் சூர்யாவும் தான் இருந்தார்கள். சாந்தா முதன்முதலில் சென்னை வந்தபோது, என் வீட்டுக்குத்தான் அழைத்து வந்தான் பாலகுமாரன். அப்போது அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமண முடிவெடுத்து அவளை சென்னைக்கு அழைத்து வந்த நேரம் அது. கமலா, சாந்தா இருவருக்கும் முன்னரே எனக்கு அறிமுகமானவன் பாலகுமாரன். அவையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சாந்தா, முதுகைத் தடவிக்கொடுத்தாள். சூர்யா, தலைவருடி அமைதிப்படுத்தினான்.

உடலைத் தள்ளுவண்டியில் கொண்டுவந்து, ஆம்புலன்ஸில் ஏற்றியபோது சாந்தா, சூர்யாவுடன் நானும் ஏறிக்கொண்டேன். வீட்டுமாடியில் கொண்டுவந்து கிடத்தியபோது, கமலாவுக்கு ஆறுதல் சொன்னேன். யார் யாரோ வந்தார்கள், போனார்கள். ``யோகிராம்சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா” கோஷம் காதில் விழுந்தது. மாலன் வந்தான். அவன் கையைப் பற்றியபோது விம்மல் தெறித்து விழுந்தது.

``நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம் மாலன்...”

``எதுக்கு அழற..? அவன் முன்னாடி போனால் நாம பின்னாடி போகப்போறோம்! அவ்வளவுதான். எழுந்திரு... வா போகலாம்!”

காரில் வீடு வரை கொண்டுவந்துவிட்டான். வழிநெடுக ஒரு வார்த்தை பேசவில்லை. அந்தக் கனத்த மெளனத்தில் நிறைந்து வழிந்தான் பாலகுமாரன்!’’