Published:Updated:

நெடுவாசல் அகலாத அச்சம்!

நெடுவாசல் அகலாத அச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
நெடுவாசல் அகலாத அச்சம்!

வெ.நீலகண்டன் - ம.அரவிந்த்

நெடுவாசல் அகலாத அச்சம்!

வெ.நீலகண்டன் - ம.அரவிந்த்

Published:Updated:
நெடுவாசல் அகலாத அச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
நெடுவாசல் அகலாத அச்சம்!

ன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள். 

2009-ம் ஆண்டு வாக்கில்  தஞ்சை,  புதுக்கோட்டை மாவட்டங்களில் மீத்தேன், எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.  குறிப்பாக,  தஞ்சாவூர்-புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள கருக்காகுறிச்சி, நல்லாண்டார் கொல்லை, மணக்கொல்லை, வானக்கன்காடு, வடகாடு போன்ற பகுதிகளில், ஓஎன்ஜிசி நிறுவனம்  கிணறுகள் அமைத்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 2013-ல் நெடுவாசலில் எண்ணெய்க் கிணறு அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.  ஆனால், சுப்பிரமணியன் என்ற ஒரு விவசாயி மட்டும் எண்ணெய் நிறுவனத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தார். இதையடுத்து, எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணி தொய்வடைந்தது.

நெடுவாசல் அகலாத அச்சம்!

இந்தச் சூழலில் டிஸ்கவர்டு ஸ்மால் ஃபீல்டு (Discovered Small Field -DSF) என்ற திட்டத்தின் கீழ் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. இத்திட்டத்தைச் செயல்படுத்த பெங்களூரைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.  அதற்கான ஆயத்தப்பணிகளில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், ஜெம் நிறுவனமும் ஈடுபட்ட நிலையில், பொதுமக்கள் அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கினர்.  அப்போது ஆரம்பித்த போராட்டங்கள் பல்வேறு கட்டங்களைக் கடந்தன.

 இதற்கிடையே, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இருந்து ஹைட்ரோ கார்பன் பணிக்கான சுரங்கக் குத்தகையை  தங்களுக்கு மாற்றித்தரும்படியும், மாசு கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கக்கோரியும் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தது ஜெம் நிறுவனம். ஆனால், மாநில அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை.  ‘நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. இதுவரை பெரும் இழப்பைச் சந்தித்துவிட்டோம். அதனால் திட்டத்தைத் தொடங்க வேறு ஓர் இடம் ஒதுக்கித்தாருங்கள்’ என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது அந்த நிறுவனம். இன்னும் 30-க்கும் மேற்பட்ட இடங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்டு ஏலம் விடப்படாமல் இருப்பதால் அவற்றில் ஒன்று ஜெம் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் நெடுவாசல் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக, முதன்முதலில் நெடுவாசலில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய சுப்பிரமணியனிடம் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெடுவாசல் அகலாத அச்சம்!

“எங்க பூர்வீகக் காணி நாலரை ஏக்கர்... நெல்லு போட்டிருந்தேன். அறுவடை நேரம்... ஒருநாள்  ‘யாரோ உங்க நிலத்துல கல் ஊன்றிக்கிட்டிருக்காங்க’ன்னு தகவல் வந்தது. பதறிப்போய் ஓடினேன். விஏஓ,  தாசில்தார்ன்னு பெரிய பட்டாளமே நின்னுகிட்டிருக்கு. ‘யாரைக் கேட்டுய்யா நிலத்துக்குள்ள எறங்கி கல்லு போட்டீங்க’ன்னு கேட்டேன். ‘எண்ணெய் கம்பெனிக்குக் குத்தகைக்குக் கொடுக்கணும். நிறைய பணம் தருவாங்க’ன்னு சொன்னாங்க... ‘யாரோட நிலத்துக்கு யாருய்யா விலை பேசுறது’ன்னு திட்டிட்டு, தாசில்தாரையே ‘எறங்கிக் கல்லைப் புடுங்குங்க’ன்னு சொன்னேன். அவர் இறங்கிப் புடுங்கிப் போட்டாரு... அதுக்கப்புறம் திருவாரூருக்கு வரச்சொல்லி,  ஒரு அறைக்குள்ள உக்கார வச்சு சுத்திலும் எல்லா அதிகாரிகளும் உக்காந்து ‘கையெழுத்துப் போடுங்க’ன்னு மிரட்டினாங்க. ‘கைல பிளேடு வச்சிருக்கேன்... வெட்டிக்கிட்டு தற்கொலை பண்ணிக்குவேன்’னு சொன்னபிறகு வெளியில விட்டாங்க.  அதுக்கப்புறம் ஒருநாள்,  வீட்டுக்கு வந்து சமாதானம் பேசுனாங்க...  ஊர்ல சிலபேரை சரிக்கட்டிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க... ‘முடியவே முடியாது’ன்னு சொல்லிட்டேன்... இதோ, கொஞ்சநாள் முன்னாடி கடலை  போட்டேன்... இப்போ தென்னை நட்டிருக்கேன்... அஞ்சு வருஷம் கழிச்சு வந்து பாருங்க... சோலை மாதிரி மாறிடும் இந்த இடம்..” தன் நிலத்தில் நின்று பெருமிதமாகப் பேசுகிறார் சுப்பிரமணியம்.

ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியதை அறிந்ததும் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். சில மணி நேரத்திலேயே ஊர் அமைதியாகிவிட்டது. இதன் பின்னால் மத்திய அரசுக்கு ஏதோவொரு  பெருந்திட்டம் இருப்பதாகக் கருதுகிறார்கள் மக்கள்.

 நாடியம்மன் கோயில் திடலில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் குழுமியிருக்கிறார்கள். யாரும் கொண்டாடும் மனநிலையில் இல்லை.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அதைச் செயல்படுத்துற நிறுவனம்தான் ஜெம் லேபரட்டரி. அந்த நிறுவனம் ஒதுங்கிட்டதால திட்டமே கைவிடப்பட்டதா அர்த்தமில்லை. நாளைக்கே, ஓஎன்ஜிசி நிறுவனமே இந்தத் திட்டத்தைக் கையில எடுத்துக்கிட்டு வரலாம். அப்படி வந்தா விளைவு மோசமா இருக்கும். இந்த மண்ணுதான் எங்க உயிர்... அதுக்காக எதையும் இழக்கத் தயாரா இருக்கோம்.  ஹைட்ரோ கார்பன்னு சொல்லிக்கிட்டு யாரும் எங்க மண்ணுல கால் வைக்க முடியாது.  சுத்திலும் 50 கிராமம் இருக்கு... எல்லாரும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் உறவுக்காரங்க... எங்களுக்கு ஒண்ணுன்னா, அடுத்த அஞ்சு நிமிஷத்துல நெடுவாசல்ல நிப்பாங்க... வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக்குன்னு பல விதங்கள்ல எல்லாரும் தொடர்புல இருக்கோம். ஒவ்வொரு  கிராமத்துலயும் பத்துப்பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கு. எல்லாரும் தினமும் கூடிப்பேசுறோம்..  எங்க உயிர் இருக்கிறவரை இந்த மண்ணுல துளைபோட முடியாது... மத்திய அரசு மொத்தமா இந்தத் திட்டத்தைக் கைவிட்டதா அறிவிக்கணும். அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கோம்....” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார்கள்.

இது ஒரு தற்காலிக வெற்றிதான் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள் நெடுவாசல் மக்கள். ‘இந்த பூதம் எப்போது வேண்டுமானாலும் எழும்’ என்ற எதிர்பார்ப்போடுதான் இருக்கிறார்கள் எல்லோரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism