Published:Updated:

நீங்க நல்லவரா... கெட்டவரா?

உத்தம வில்லனுக்கு ஜூனியர் கோவணாண்டி சுளீர்கடிதம்ஜூனியர் கோவணாண்டிஓவியம்: வேல்

பிரீமியம் ஸ்டோரி

லகநாயகன், கலைஞானி, சகலகலா வல்லவன்... இப்படி ஏகப்பட்ட பட்டங்களுக்குச் சொந்தக்காரரான பரமக்குடி கமலஹாசனுக்கு, ஜூனியர் கோவணாண்டி வணக்கம் சொல்லிக்கிறேன்.  

நீங்க நல்லவரா... கெட்டவரா?

உங்க பாட்டுக்கு ஒரு கட்சியை ஆரம்பிச்சீங்க. ஊரு ஊரா பிரசாரம் போனீங்க. நடுநடுவுல விவசாயிங்களையும் சேர்த்துக்கிட்டு ஏதேதோ பேசித் தள்ளினீங்க. சரி, அவரு பொழப்புக்கு ஏதோ ஆட்டம் போடுறாருனு இத்தனை நாளா வேடிக்கைதான் பார்த்துக்கிட்டிருந்தேனுங்க. ஆனா, சமீபத்துல பெங்களூருவுக்குப் போய் வெச்சீங்க பாரு ஒரு ஆப்பு.... சும்மா சொல்லக்கூடாது விஸ்வரூபம் படத்துல வர்ற திடீர் திருப்பங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டீங்க.

ஆத்தாவும் தாத்தாவும் வலுவா இருந்த காலத்துல இதையெல்லாம் நீங்க நினைச்சோ, இல்ல பேசியோ பார்த்திருப்பீங்களானு சொல்லத் தோணல. ஆனா, அவங்க ரெண்டு பேரும் இல்லாத சமயத்தைச் சரியா பயன்படுத்திக்கிட்டு, ஆளாளுக்குக் கட்சி, கொடினு கிளம்பிட்டீங்க. இதெல்லாம் உங்க சொந்தப் பிரச்னை. கட்சியை ஆரம்பிப்பீங்களோ... ஆட்சியைப் பிடிப்பீங்களோ... என்ன எழவையாவது செய்துட்டுப் போங்க. ஆனா, எதுக்காக எங்க பொழப்புல கை வெக்கறீங்க? 

நீங்க நல்லவரா... கெட்டவரா?

மகாநதி படத்துல காவிரிக்கரை விவசாயியா வாழ்ந்து, கடைசியில எல்லாத்தையும் கண்டபடி இழந்து, பெத்த பொண்ணையே கொல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியில தேடுற ஒரு மனிதனா... பிரமாதமா வாழ்ந்து காட்டியிருப்பீங்க. அதுல நீங்க பெரிய மிட்டா மிராசுவா மிரட்டியிருப்பீங்க. ஆனா, இன்னிக்குக் காவிரி பூமியில மிட்டா மிராசுங்ககூட மிரண்டு போயிருக்காங்க... சொட்டுத் தண்ணியில்லாம.

கங்கையும் தெற்கே பாயாதா... காவிரியோடு சேராதா?னு பிரமாத பாட்டெல்லாம் படிச்சி கைதட்டல் வாங்கின ஆளுதான் நீங்க. சினிமாவுக்காக யாரோ எழுதிக் கொடுக்கிறத இப்படி வாசிக்கிறதோடு நிறுத்திக்கிட்டா பரவாயில்ல. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கணக்கா நிஜத்துலயும் நடத்திக்காட்டத் துடிக்கிறதுதான் கொஞ்சம் இடிக்குது. காவிரியோடு கங்கை சேருறது இருக்கட்டும். அப்படிச் சேர்க்கணும்னா... அந்தக் காலத்துல கங்கைகொண்ட சோழனே சாதிச்சிருப்பான். அதெல்லாம் தப்பு. சுற்றுச்சூழல் ரீதியில இப்படி நீண்ட தூரத்துக்கு நதிகளை இணைக்கறது தப்புனு தெரிஞ்சுதான், கங்கையில இருந்து குடம் குடமா தண்ணியைச் சுமந்துகிட்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரத்துல பெரிய ஏரியை வெட்டி, குடத்துத் தண்ணியை ஊத்தி சோழ கங்கம்னு பேரும் வெச்சதோட திருப்திபட்டுக்கிட்டான் அந்தச் சோழன். இன்னிக்கும் பெரிய ஏரியா அது நின்னுக்கிட்டிருக்கு. சரி, இதெல்லாம் நேத்தைய வரலாறு, விட்டுத்தள்ளுவோம். ஆனா, நாளைய வரலாற்றுல புகுந்து குட்டையைக் குழப்பறீங்களே... அதைத்தான் சகிச்சிக்க முடியல.  

உங்களுக்கு என்னாச்சு... கிறுக்கு ஏதாச்சும் பிடிச்சுப்போச்சா... இல்ல, மர கழண்டு போச்சா. மறுபடியும் மொத புரோட்டாவுல இருந்து ஆரம்பிக்கறீங்க. காவிரி பிரச்னையில பேச்சுவார்த்தை மூலமாத்தான் தீர்க்கணும்னு உங்க இஷ்டம்போலக் கிளம்பிட்டீங்க. வாயில வந்ததையெல்லாம் உளறிக் கொட்டறீங்க. ஏற்கெனவே நீங்க ட்வீட்டர்ல கிறுக்கிறதையெல்லாம் புரிஞ்சுக்க முடியாம பலபேரு மண்டையைச் சொறிஞ்சிக் கிட்டிருந்தாங்க. இன்னிக்கு உங்களோட செயல்பாடுகளையும் புரிஞ்சுக்க முடியாம பலபேரு மண்டையையே போட்டுடுவாங்க போலிருக்கு.

இப்படி நீங்க போற பாதை சரியில்லைனு, மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பிக்கிற அன்னிக்கு உங்ககூட மேடையில இருந்த விவசாயச் சங்கத் தலைவரே முதல் ஆளா, உங்கள எச்சரிக்க ஆரம்பிச்சுருக்காரே. அவரு மட்டுமில்ல... வரிசையா விவசாயிகளும், விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவங்களும் சீறிக்கிளம்பியிருக்காங்க. ஆனா, அந்த அளவுக்கு அரசியல்வாதிங்க உங்கமேல பாயல. ஏன்னா, அவங்களுக்கும் உங்களபோலக் காவிரி பிரச்னைய காலாகாலத்துக்கும் கனகனனு கங்கு கணக்காவே வெச்சிருந்தாதானே, காலத்துக்கும் கல்லா கட்ட முடியும்.  

நீங்க நல்லவரா... கெட்டவரா?

ஒரு விஷயம் புரிஞ்சா, அதுல தலைய விடணும். இல்லாட்டி பொத்திக்கிட்டு பொத்துனாப்புல போத்திக்கிட்டு படுத்துடணும். தேவையில்லாம நடுவுல புகுந்து சுரண்டிக்கிட்டு நிக்கக்கூடாது. காவிரி என்ன நீங்க நடிக்கிற சினிமாவுல வர்ற ஏதாவது கேரக்டரா, உங்க இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்க?!

அச்சுல ஏத்த முடியாத அளவுக்கான அரசியல் துரோகங்கள்; அண்டமே அசந்துபோறது கணக்கான அரசியல் சித்து விளையாட்டுகள்; நீதி தேவதையும்கூட நிதானம் தவறிப்போய்ச் செய்த தவறுகள்னு காவிரியில ஓடி வந்த தண்ணி கணக்கைவிட, விவசாயிகளுக்கு எதிரா காவிரியை வெச்சு நடந்த கொடுமைங்கதான் இங்க அதிகம். சொட்டுத் தண்ணிகூட வராத நிலையிலயும்... காவிரி கண்ட சோழன், காவிரித்தாய்னு கண்டபடி பட்டம் எங்க முதலமைச்சருங்க பட்டம் போட்டுக்கிறதுக்குத்தான் இந்தப் பிரச்னை இத்தன நாளா பயன்பட்டிருக்கு. இதோ, காக்காய் உக்கார பனம்பழம் விழுந்த கதையா, இப்ப முதலமைச்சர் பதவியில ஒட்டிக்கிட்டிருக்கிற எடப்பாடிக்கும்கூட, காவிரி கொண்டான்... இட்லி குண்டான்னு பட்டம் கொடுக்கற அளவுக்குப் பயன்பட்டிருக்கு. வேணும்னா... காவிரியை வெச்சி ரெண்டு மூணு சினிமா எடுத்துச் சம்பாதிச்சிட்டு போங்க. இல்லாட்டி, நீங்களும் காவிரி வென்றான்... காவிரித் தின்றான்னு ஏதாச்சும் பட்டத்தைப் போட்டுக்கிட்டு போங்க. எதுக்காக, பழையபடி பிரச்னைய முதல் புரோட்டாவுல இருந்து ஆரம்பிக்க நினைக்கறீங்க. 

நீங்க நல்லவரா... கெட்டவரா?

பேச்சுவார்த்தைக்கு மேல பேச்சுவார்த்தை நடத்தி, எதையுமே சாதிக்க முடியலங்கிற நிலையிலதானே, நீதிமன்றத்தை நோக்கி விவசாயிங்க ஓடினோம். அப்பவும் இந்தப் பாழாய்போன அரசியல்வியாதிங்க நடுவுல புகுந்து, எங்க ஆளுங்கள குழப்பிவிட்டு, குளிர்காஞ்சாங்க. இதுக்காக எங்க ஆளுங்க நடத்தாத போராட்டமில்ல. மாநிலத்துல இருக்கிறவங்களும் சரி... மத்தியில இருக்கிறவங்களும் சரி. யாருமே கைகொடுக்கல. பேருக்காகப் போராடிக்கிட்டே இருந்தாங்க. நாங்க செய்த புண்ணியம்தான்... பிரதமர் பதவிக்கு வந்த வி.பி.சிங்கை வரவெச்சது. அவரு போட்ட போடுதான், இன்னிக்கு இந்த அளவுக்காவது எங்களுக்கான நீதியை நிலைநாட்டியிருக்கு. அவரு மட்டும் நடுவர் மன்றத்தை அமைக்காம போயிருந்தா... இன்னிக்கு அதோகதிதான். அந்த நடுவர் மன்றமே படாதபாடு பட்டுத்தான் ஒருவழியா தீர்ப்பைக் கொடுத்துச்சு. அதுலயும் இந்தக் கதர், காவிக்கூட்டம் பெரிய அரசியல்பண்ணி, நீதிமன்றத்தையே தடுமாற வெச்சி, பண்ணாத அநியாயம் பண்ணினாங்க. ஆனாலும், நடுவர் மன்றத்தோட தீர்ப்புல இருந்து பெருசா விலக முடியாத நிலையிலதான், இப்ப இறுதித்தீர்ப்புங்கிற பேருல, ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்காங்க. சரி, இதுவாவது உறுதித் தீர்ப்பா இருக்கட்டும்னு நாங்க கொஞ்சம் அசந்த நேரத்துல... நடுவுல புகுந்து இப்படிக் கலாட்டா பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே, இது நியாயமா?

சட்டப்படி தமிழகத்துக்குச் சேரவேண்டிய தண்ணியைக் கொடுக்கணும்னு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டு, விஷயத்தை முடிச்சுவெச்சுடுச்சு. இந்த நிலையில, காவிரி விஷயத்தைப் பேசித் தீர்த்துக்கலாம்னு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிகிட்ட உங்கள தூது போகச் சொன்னது யாரு? காவிரிப் பிரச்னையோட ஆதியும் அந்தமும் தெரியாம, போய் சந்திருச்சிருக்கீங்க. காவிரி நீர் தமிழகத்தோட உரிமை சார்ந்த விஷயம். இதுல கர்நாடகத்துகிட்ட கெஞ்சறதுக்கு இனிமே ஒண்ணுமே இல்ல. சட்டப்படி தண்ணியைத் திறந்துவிட வேண்டியதுதான் கர்நாடகத்தோட வேலை. இதையெல்லாம் தெரிஞ்சுக்காம கர்நாடக முதல்வரைச் சந்திச்சத நான் வன்மையாவும் வலியோடும் கண்டிக்கிறேன்.

ஆயிரம் பிரச்னை இருந்தாலும், காவிரி பிரச்னையிலதான் எங்களோட விவசாயச் சங்கங்கள் எல்லாம் ஒத்துமையா நின்னுட்டிருக்கோம். அப்பப்ப சின்னச்சின்ன முட்டல், மோதல் வந்தாலும் பிரச்னைனு வந்துட்டா கைகோத்து நிப்போம். ஆனா, இந்தத் தடவை நீங்க அதுல புகுந்து விளையாட்டைக் காட்ட ஆரம்பிச்சிருக்கீங்க. இந்தக் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா இவங்கள்லாம்தான் எப்பவுமே எங்களுக்குள்ள சிண்டுமுடிஞ்சுவிட்டு, மோதலை உண்டாக்கி, எங்கள பிரிச்சிவிட்டு குளிர்காய்வாங்க. இப்ப அதே பாணியில நீங்க இறங்கியிருக்கீங்க. பெரும்பாலான விவசாயத் தலைவருங்க எதிர்க்க ஆரம்பிச்சதும்... எங்க விரல வெச்சே எங்க கண்ணைக் குத்துற மாதிரி, சில விவசாயச் சங்கத் தலைவர்கள உங்க பக்கம் வந்து நிக்கவெச்சி போட்டோவுக்குப் போஸ் கொடுக்க வெச்சிருக்கீங்க.

ஐயா கலைஞானி... உங்களுக்கு அரசியல் பண்றதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு; வாழ்க்கைக்கான பொழைப்பும் உங்களுக்கு நிறையவே இருக்கு. எதுவுமே இல்லாட்டி, வேஷம் கட்டுறத வெச்சே பொழைச்சீப்பீங்க. ஆனா, எங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு பொழப்புதான். அது இந்த மண்ணோடு நாளும் பகலும் மல்லுக்கட்டுற விவசாயி பொழப்புதான். அதுலயும் மண் அள்ளி போட்டுடாதீங்க. உங்க அரசியலை ஸ்டாலின், ஜெயக்குமார், ரஜினினு பலசாலிங்களோட வெச்சுக்கோங்க. இந்த அப்பாவிகளை அப்படியே விட்டுடுங்க. சட்டப்படி தரவேண்டிய தண்ணியை வாங்கிக்கிறதுக்கான வழியை நாங்களே பாத்துக்கிறோம். ஏற்கெனவே அரசியல்வியாதிங்கதான் நடிச்சே எங்கள கெடுத்தாங்க. இப்ப நிஜ நடிகருங்களும் கிளம்பிட்டீங்க. நிஜமாவே சொல்றோம்... முடியல.

இப்படிக்கு,

ஜூனியர் கோவணாண்டி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு