Published:Updated:

கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டு; புதுக்கோட்டையில் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப்பின் பாறைக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையைத் தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டையில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில் பாறைக் கல்வெட்டுகள் இருப்பதாக ஆசிரியர் கண்ணதாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், மதுரை பாண்டியநாட்டுப் பண்பாட்டு மையத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர்கள் முனீஸ்வரன், செல்ல பாண்டியன, கீரனூரைச் சேர்ந்த பாண்டியநாட்டுப் பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களுமான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கொண்ட குழு கள ஆய்வு மேற்கொண்டது.

இதில், ஒரே பாறையின் மேற்பரப்பில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்தபோது, இது கி.பி 9 மற்றும் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

பாறைக்கல்வெட்டு
பாறைக்கல்வெட்டு
`13-ம் நூற்றாண்டு நில தானத்திற்கான ஆதாரம் இது!' - மதுரை கல்வெட்டில் வெளிவந்த சுவாரஸ்யம்

இக்கல்வெட்டுகளைப் படியெடுத்து, ஆய்வு செய்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறும்போது, ``கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், தனிப்பாறையில் 2 அடி நீளம், 2 அடி அகலம், 5 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டில் `ஸ்ரீ இடைத்தி சாத்தங் குருன்தி சுனை இயிது அழியாதி' என பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டின் செய்தியின்படி, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நீர் ஆதாரத்திற்காக, சாத்தங் குருன்தி என்பவர், பாறையின் மேல் சுனையைக் குடைந்து, அச்சுனையை, மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு, தண்ணீர் பயன்பாட்டிற்காக அளித்திருப்பதை இது குறிக்கிறது. கல்வெட்டின், 5-வது வரியானது முற்றிலும் சிதிலமடைந்திருக்கிறது.

அகநானூற்றில் களிற்றியானை நிரையில், 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகளில், சுனைகள் வளத்தை உணர்த்துவதாகவும், வறுமையை உணர்த்துவதாகவும், பெரும்பாலான இடங்களில் கூறப்பட்டுள்ளன.

இதன் அருகிலேயே காணப்படும் மற்றொரு கல்வெட்டு, 6 அடி நீளம், 4 அடி அகலம் , என 8 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளதால், கல்வெட்டின் பொருளை அறிந்துகொள்ள முடியவில்லை. இப்பாறைக் கல்வெட்டுகள், கிடைமட்டமாகப் பொறிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தால் எழுத்துக்கள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் உள்ளது.

கல்வெட்டு
கல்வெட்டு
தி.மலை: 3000 ஆண்டுகள் பழைமையான குத்துக்கல், சிற்பங்கள், கல்வெட்டு கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

இப்பாறைக் கல்வெட்டுகளின் வடபுறம் இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஈமக்காடுகளும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப்பின் பாறைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையைத் தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், இக்கல்வெட்டின் அமைவிடம் தெரிந்து, படியெடுத்திருந்தால், பூலாங்குறிச்சி கல்வெட்டினைப் போல் அரிய செய்தி இதிலிருந்தும் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது இருக்கும் கல்வெட்டினை காப்பதற்காகவாவது இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு, மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு