Published:Updated:

கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள்; `கஜா' துயர்துடைத்த விகடன் வாசகர்கள்!

வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்

இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம் முத்தன்பள்ளம் கிராமத்தில்!

கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள்; `கஜா' துயர்துடைத்த விகடன் வாசகர்கள்!

இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம் முத்தன்பள்ளம் கிராமத்தில்!

Published:Updated:
வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்

மழைக்கு ஒழுகாத வீடு, வெயிலுக்குத் தீ பிடிக்காத வீடு... ஏழை, எளிய மக்களின் அதிகபட்ச கனவே இதுதான். ஆனால், அது அத்துனை சுலபத்தில் அவர்களுக்கு நனவாகிவிடுவதில்லை என்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. அதுமட்டுமல்ல, இருக்கின்ற ஓட்டை, உடைசல் கூரை வீட்டையும்கூட அடிக்கடி இயற்கைப் பேரிடர்கள் பதம்பார்த்துவிடுவது கொடுமையிலும் கொடுமை.

அப்படி இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! கடந்த சில வாரங்களாக தமிழகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம், புதுக்கோட்டை மாவட்டம், முத்தன்பள்ளம் கிராமத்தில்!

வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்
வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்

2018 நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல், தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது நாம் மறந்திருக்கமாட்டோம். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல், அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல் (கொடைக்கானல்) ஆகிய பகுதிகளிலும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் கடும் பாதிப்புக்குள்ளான டெல்டா மாவட்டங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரமான லட்சக்கணக்கான மரங்கள், பயிர்கள், படகுகள் எனப் பலவற்றையும் இழந்ததுடன், வீடுகளையும் இழந்து தவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய கஜா புயல் பாதிப்புகளிலிருந்து அந்த மக்களை மீட்டெடுக்க பல தரப்பிலிருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. அந்த வகையில், வாசகர்களுடன் இணைந்து ஆனந்த விகடனும் களத்தில் இறங்கியது. விகடனின் வேண்டுகோளை ஏற்று நிதியை வாரி வழங்கினார்கள் வாசகர்கள். கூடவே, விகடன் ஊழியர்களும் நிதி வழங்கினார்கள். இத்துடன், ஆனந்த விகடன் குழுமத்தின் சார்பிலும் நிதி வழங்கப்பட, மொத்தமாக ரூ.1,43,79,224 நிதி திரண்டது. ஆனந்த விகடனின் அறத்திட்டப் பணிகளுக்காக விகடன் குழுமத்தில் இயங்கிவரும் வாசன் அறக்கட்டளை மூலமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்த விகடன் குழுவினர் மூலம், முதற்கட்டமாக மக்களின் உடனடித் தேவையான மளிகைப் பொருள்கள், உணவுத் தேவை போன்றவை நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன.

வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்
வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்

மின்சாரம் நாள் கணக்கில் துண்டிக்கப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருகும் நிலையிலிருந்த ஏழை விவசாயிகளின் நடவுப் பயிர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படி சுமார் 130 ஏக்கர் அளவிலான பயிர்கள் காப்பாற்றப்பட்டன. வீழ்ந்துகிடந்த தென்னை மரங்களை அகற்றிக் கொடுத்ததோடு, புதிதாக தென்னங்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கான தொழிற்பயிற்சிகளை வேளாண் வல்லுநர்கள் மூலம் நடத்தினோம்.

பலத்த சேதத்தைச் சந்தித்த புதுக்கோட்டை, அழியாநிலை கிராமத்திலிருக்கும் இலங்கை அகதிகள் முகாம்களின் வீடுகளைச் சரிசெய்ய உதவிகள் செய்யப்பட்டன. நிரந்தரத் தீர்வாக, புயலால் வீடிழந்து தவித்த நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரணியிருப்பு ஆகிய பகுதிகளில் 10 குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டப்பட்டு, கடந்த 06.12.2019-ம் தேதியன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைத் தொடர்புகூட இல்லாமல் காலம் காலமாகத் தனித்தீவு போல துண்டிக்கப்பட்டே இருக்கும் முத்தன்பள்ளம் கிராமம் நம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

சுமார் மூன்று கி.மீ தூரம் நடந்தே சென்றுதான் அந்தக் கிராமத்தை அடைய முடிந்தது. 18 குடும்பங்கள் மட்டுமே அங்கே வசிக்கிறார்கள். அனைவருமே மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை மக்கள். சுமாராக இருக்கும் இரண்டு ஓட்டு வீடுகளைத் தவிர, அங்கு மற்ற அனைத்தும் சின்னஞ்சிறு குடிசைகளே. அவற்றையும் கஜா புயல் பதம்பார்க்க, அந்த ஓட்டு வீடுகளில் தஞ்சம் புகுந்து தப்பித்துள்ளனர் மக்கள்.

அவர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலை முழுவதுமாக அறிந்து பதைபதைத்துப் போன நாம், ஊருக்கு சாலை வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அத்துடன், குடிசை வீட்டிலிருக்கும் 16 குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகளையும் தொடங்கினோம். வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை தொடர்பான அரசு அதிகாரிகளின் பரிசீலனைகள் ஒரு பக்கம் நீண்டன.

இதற்கிடையில் கொரோனா குறுக்கிட்டது. அத்துடன் இடைவிடாத மழை வேறு. அனைத்தையும் கடந்து கட்டுமானப் பணிகள் நிறைவுற்று கடந்த 18-ம் தேதி, 13 குடும்பங்களிடம் முறைப்படி வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக, இன்னும் மூன்று வீடுகளின் பணி நிறைவடையாமல் உள்ளது. அவற்றையும் விரைவில் முடித்து ஒப்படைத்துவிடுவோம். சாலை போடுவதற்கான வேலைகளும் அரசாங்கத்தின் சார்பில் நடந்துவருகின்றன.

முத்தன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் வீடு ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். வீடுகளுக்கு மாலைகள் அணிவித்து, அவர்கள் கைகளாலேயே ரிப்பன் வெட்டி திறப்புவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.

குடும்பத்தினருடன் வந்து வீட்டின் சாவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள், ஆனந்த விகடன் வாசகர்களுக்கும், ஆனந்த விகடனுக்கும் தங்கள் நன்றிகளை, ஆனந்தக் கண்ணீராகச் சமர்ப்பித்தனர்!

``மூணு தலைமுறையாவே கூரைக் கொட்டகையிலதான் வாழ்க்கை. எங்களுக்கு எதைப் பார்த்தும் பயமில்ல.

ஆனா இந்தப் புயல், மழை, வெள்ளம்னு வந்துட்டா, உசுரைக் கையிலப் பிடிச்சிக்கிட்டு தினம் தினம் செத்துத்தான் பொழைப்போம். கஜா புயல் எங்க கூரைகளையும் தூக்கிட்டுப் போயிருச்சு. கொஞ்சம் நஞ்சம் சேமிச்சு வச்சிருந்த பொருள்களும் சேதமாகிடுச்சு.

தார்சு வீடு (கான்கிரீட் வீடு) கட்டணும்கிறது, காலங்காலமா எங்களுக்கெல்லாம் கனவாவே இருக்கு. எல்லாருமே அன்றாடம் காய்ச்சிங்க. தினமும் கூலி வேலைக்குப் போனாதான் சாப்பாடு. அப்புறம் எங்கயிருந்து தார்சு வீடு கட்டுறது. சிரமப்பட்டுத்தான், புயலால பாதிக்கப்பட்ட குடிசையையே சரிசெஞ்சோம். தலையெழுத்தேனு வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிச்ச நேரத்துலதான் தார்சு வீடு கட்டிக்கொடுக்கிறதா விகடன்ல இருந்து வந்து சொன்னாங்க

சரி, பாதிக்கப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் சொல்றதுக்காக இப்படி சொல்றாங்கனுதான் ஆரம்பத்துல நெனச்சோம். இப்ப வீட்டு சாவியையே எங்ககிட்ட ஒப்படைச்சு, பல வருஷக் கனவை நனவாக்கிட்டாங்க. இனி புயல், மழைக்கு நாங்க பயப்பட மாட்டோம். விகடன் வாசகர்களுக்கும், விகடனுக்கும் நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்'' என்று நெக்குருகிச் சொன்னார் முத்தன்பள்ளத்தைச் சேர்ந்த நாகவள்ளி.

அவர் சொன்னது அனைத்தையும் ஆமோதிப்பதுபோல கண்களில் நன்றிகளைத் தேக்கியபடியே நமக்கு விடைகொடுத்தனர் ஒட்டுமொத்த கிராம மக்கள்!

வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்
வாசகர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கான்கிரீட் வீடுகள்

திரூவாரூர் மாவட்டம், மாங்குடி அருகேயுள்ள பூசலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன், மாற்றுத்திறனாளியான தன் தந்தையுடன் வசித்துவந்த குடிசை வீடு, கஜா புயலால் கடுமையாகச் சேதமடைந்த விஷயம் நம் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, நேரடியாக ஆய்வு செய்தபிறகு, ராஜேந்திரனுக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு, தற்போது, பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. விரைவிலேயே அவரிடம் ஒப்படைக்கப்படும்!

விகடனின் நேசக்கரம் நீளும் என்றென்றும்!

மக்களின் துயர் துடைக்க உதவிய வாசகர்களின் விவரம்: https://bit.ly/3oUhtLF