Published:Updated:

கல்வித் தொலைக்காட்சியில் பாடம்; மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி!

மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி
மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி

மாணவியின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த கல்வி அலுவலர் சண்முகநாதன், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தை மாணவியுடன் அமர்ந்து பார்வையிட்டு, மாணவிக்கு உற்சாகம் அளித்தார்.

தமிழகம் முழுவதுமே கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழலே நிலவுகிறது. மாணவர்களின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுப் பரவல் சற்றே குறையத் துவங்கியுள்ள நிலையில், 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பு தேதி சரியாக அறிவிக்கப்படாத நிலையில், தொடர்ந்து கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி
மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தும் போது, அந்தந்தப் பாடத்திற்குரிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர். இந்தச் சூழலில், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சியில் நடக்கும் வகுப்புகளை மாணவர்கள் கவனிக்கிறார்களா, எவ்வாறு கற்றல் மேற்கொள்கிறார்கள் என்பதை அறிய மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் தினசரி மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

இலுப்பூர் அருகே அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் - சுந்தரி தம்பதியின் மகள் லத்திகா சரண் இலுப்பூர் அரசு பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். மாணவியின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த கல்வி அலுவலர் சண்முகநாதன், கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு அலகு 2-ல் `இரு உலகப் போர்களுக்கிடையில் உலகம்' என்ற பாடத்தினை தானும் அமர்ந்து பார்த்தார். தொடர்ந்து, கல்வித் தொலைக்காட்சியை மாணவர்கள் பார்த்து கற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி மாணவியின் ஆர்வத்தைப் பாராட்டியவர், சந்தேகம் இருப்பின் ஆசியர்களிடம் கேட்டுக்கொள்ள அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி
மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி

இதுபற்றி ஆசிரியர்களிடம் பேசினோம். ``மாணவர்களின் கற்றல் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குத் தான் அரசு இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கல்வித் தொலைக்காட்சி பல மாணவர்களுக்குப் பயனளிக்கிறது. அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்வார்கள் என்பதால், மாணவர்கள் தொடர்ந்து, அதிக நேரம் தற்போது கல்வித் தொலைக்காட்சியைக் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். பெற்றோர்கள் மாணவர்களை கல்வித் தொலைக்காட்சியில் பாடம் கற்பிக்க ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களைக் கவனிக்க வேண்டும்" என்றனர் ஆசிரியர்கள்.

அடுத்த கட்டுரைக்கு