Published:Updated:

`ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.. மணப்பாறை முறுக்கு..!’ - பலகாரங்களை வைத்து பாடம் நடத்திய அரசுப்பள்ளி

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குப் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். கையோடு தங்களது வீட்டில் தயாரித்த தீபாவளி பலகாரங்களையும் கொண்டு வந்திருந்தனர்.

பலகாரங்களை வைத்து பாடம்
பலகாரங்களை வைத்து பாடம்

புதுக்கோட்டை அருகே உருவம்பட்டி அரசுப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு அடுத்த நாள் மாணவர்கள் புத்தாடை அணிந்து வருவது வழக்கம். வழக்கம்போல் இந்த வருடமும் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். கூடவே, தங்கள் வீட்டில் தயார் செய்திருந்த பலகாரங்களையும் கொண்டு வந்திருந்தனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போலப் பள்ளி ஆசிரியர்களும் திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, வெள்ளியனை அதிரசம் என சிறப்புமிக்க பலகாரங்களைக் கொண்டு வந்திருந்தனர்.

பலகாரங்களை வைத்து பாடம்
பலகாரங்களை வைத்து பாடம்

இவை அனைத்தையும் மாணவர்களுக்குக் கொடுத்துச் சாப்பிட வைத்து மாணவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டனர். பலகாரங்களால் தங்களுக்குள் அன்பைப் பரிமாறிக் கொண்டதுடன், அந்தப் பலகாரங்களால் அந்த ஊருக்கு வந்த சிறப்புகளையும் விளக்கி பாடமும் எடுத்துவிட்டனர். மற்றொரு தீபாவளியைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் மாணவர்கள் இருந்தனர்.

இதுபற்றி பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் பேசினோம், ``முன்பெல்லாம், வீட்டிலேயே அனைவரும் தீபாவளி பலகாரங்கள் செய்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுத்து, மகிழ்வார்கள். இப்போது, அதுக்கு பலருக்கும் நேரம் இல்லை. பலகாரங்கள் பெரும்பாலும் கடையில்தான் வாங்கி வந்து உண்ணுகின்றனர்.

பகிர்ந்து உண்ணும் மாணவ, மாணவிகள்
பகிர்ந்து உண்ணும் மாணவ, மாணவிகள்

இன்னும் ஒரு சில கிராமங்களில் அதிரசம், முறுக்கு, சீடை , இனிப்புச் சுருள் உள்ளிட்ட பலகாரங்களைச் செய்கின்றனர். தீபாவளி முடிந்த மறுநாள் மாணவர்களைப் புத்தாடை உடுத்தி, வீட்டில் செய்த பலகாரங்களை எடுத்துவரச் சொல்லி இருந்தோம். அனைவரும் சமமாகப் பங்கிட்டு பலகாரங்களை உண்டோம். மாணவர்களுக்குப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் பகிர்ந்து கொடுத்து உண்ணும் பழக்கம் உண்டாகும்.

ஆசிரியர்களாகிய நாங்களும் எங்கள் வீட்டில் தயாரித்த பலகாரங்களை எடுத்து வந்தோம். இந்த வருடம் கூடுதலாக, ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் சிறப்பு மிக்க பலகாரங்களை வாங்கி வந்து மாணவர்களுக்குக் கொடுத்தோம்.

பலகாரங்களை வைத்து பாடம்
பலகாரங்களை வைத்து பாடம்

மாணவர்களுக்குள் எவ்வித சாதி, மத வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் வராது. நட்போடு இருப்பார்கள். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அனைவருக்கும் கொடுக்கும்போது, இதுதான் மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற பால்கோவா என்று சொல்லிக் கொடுத்தோம். இது மாணவர்கள் மனதில் நன்கு பதிந்து இருக்கும். இதேபோல, பலகாரத்தை வைத்து அந்த ஊருக்குக் கிடைத்த பெருமையைப் பற்றியும் விளக்கினோம். இதுபோன்ற நிகழ்வுகளால் ஆசிரியர்-மாணவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். அது எங்கள் பள்ளியில் நிறையவே இருக்கு" என்றார்.