Published:Updated:

`ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் தலங்கள்'- கி.பி 16-ம் நூற்றாண்டை விளக்கும் தொல்லியல் ஆர்வலர்

தொல்லியல் நடை
தொல்லியல் நடை

ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று வழிபாட்டு தலம் உள்ளது என்பது பெருமையான விசயம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.

கீழடி
கீழடி

கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. விரைவில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கப்படும் எனத் தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கீழடி அகழாய்விற்குப் பின் தொல்லியல் சார்ந்து விசயங்களில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் வரலாற்றை அறிவோம், தொன்மையைக் காப்போம் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தே.கல்லுப்பட்டியில் வரலாற்று மரபு நடை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொல்லியல் ஆர்வலர் பரணிதரன் வரவேற்றார்.

இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் பேசுகையில்,

வரலாற்று மரபு நடை
வரலாற்று மரபு நடை

``தேவன்குறிச்சி மலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாகப் போற்றப்படுகிறது. இம்மலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த தடயங்களும் இருக்கின்றன. சமணத் துறவிகள் மருத்துவம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்குச் சான்றாக சமணப்புடவும், சமணப் படுக்கைகளும், மகாவீரர் நின்ற மற்றும் அமர்ந்த நிலையிலான சிற்பங்களும் இங்கு உள்ளன.

சமய மறுமலர்ச்சி காலத்திற்குப் பின் இவை சைவ மதத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. கி.பி 13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இங்கு சிவாலயம் கட்டப்பட்டது என்பதற்குக் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இக்கோயிலின் முந்தைய பெயர் திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழைய பெயர் செங்குன்ற நாட்டுப் பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை பாண்டியர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளன.

தொல்லியல் நடை
தொல்லியல் நடை

இங்கு 1976-ல் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றி 8 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் பூஜைக்கும், விளக்கு ஏற்றுவதற்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

கோயிலின் நுழைவு வாயிலில் கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகிறது. மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புலிகளிடமிருந்து மக்களைக் காத்து உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டும் உள்ளது. இம்மலையின் உச்சியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது இவ்வூருக்குச் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது" என்றார்.

தொல்லியல் நடை
தொல்லியல் நடை

இத்தொல்லியல் சார்ந்த நிகழ்ச்சியில் ரெங்கசாமி நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பர்யச் சிறப்புள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு