புதுச்சேரி வில்லியனூரை அடுத்திருக்கும் சங்கரன்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகரின் மகன் அருள்மணி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த இவர், பங்குச் சந்தையில் ஆன்லைன் டிரேடிங் தொழிலையும் செய்து வந்திருக்கிறார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கையில் வைத்திருந்த மொத்த பணமும் கரைந்து போக, அக்கம்பக்கத்தினர்களிடம் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் டிரேடிங் செய்திருக்கிறார். அதிலும் நஷ்டம் ஏற்பட அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அவர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுப்பதற்காகவும், விட்டதை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் கந்துவட்டிக்கு கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் டிரேடிங் செய்திருக்கிறார். அதிலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த அருள்மணி நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். அந்த சத்தத்தைக் கேட்டு அவரை மீட்ட அவரது உறவினர்கள் அவரை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் கதறி அழுதனர். அதையடுத்து அவரது உடல் உடற்கூராய்வு சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடன் கொடுத்தவர்களில் ஒருவரான சுந்தர் என்பவருக்கு அவர் எழுதி வைத்த கடிதத்தில், `அண்ணா, நான் எல்லோருக்கும் 85% வட்டியாக திருப்பிக் கொடுத்திருக்கிறேன். எனக்கு கடன் பிரச்னை. அதுவும் கந்துவட்டி பிரச்னை.

நான் பணம் வாங்கிய அனைவருக்கும் 85% வட்டியாக திருப்பிக் கொடுத்து வருகிறேன். அதனால் என்னால் அசலைக் கொடுக்க முடியவில்லை. கந்து வட்டிப் பிரச்னையால்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று எழுதியிருக்கிறார்.
கடன் வாங்கி பங்குச் சந்தையில் பணம் போடக்கூடாது என்பது அடிப்படை விதி. இந்த விதிமுறையில் பங்குச் சந்தையில் பணம் போடும் முதலீட்டாளர்கள் அனைவரும் தெரிந்துகொண்டு நடப்பது அவசியம்!
தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.