Published:Updated:

``பழுதா போன மூணு சக்கர சைக்கிள சரிபண்ணக்கூட வழியில்ல!" - மாற்றுத்திறனாளி சரிதாவின் சோகம்

குடும்பத்துக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி சரிதா

''மூணு சக்கர சைக்கிள்ல செயின் இல்ல. டயர் இத்துப்போச்சு. வீட்டுல கழிப்பறை இல்லாததால, சைக்கிள்ல என்னைய ஏத்தி வெச்சு, பிள்ளைங்கதான் தெனமும் திறந்தவெளிக்குத் தள்ளிக்கிட்டுப் போவாங்க.''

``பழுதா போன மூணு சக்கர சைக்கிள சரிபண்ணக்கூட வழியில்ல!" - மாற்றுத்திறனாளி சரிதாவின் சோகம்

''மூணு சக்கர சைக்கிள்ல செயின் இல்ல. டயர் இத்துப்போச்சு. வீட்டுல கழிப்பறை இல்லாததால, சைக்கிள்ல என்னைய ஏத்தி வெச்சு, பிள்ளைங்கதான் தெனமும் திறந்தவெளிக்குத் தள்ளிக்கிட்டுப் போவாங்க.''

Published:Updated:
குடும்பத்துக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி சரிதா

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே தொண்டமான் ஊரணியில் வசிக்கிறது மாற்றுத்திறனாளி சரிதாவின் குடும்பம். சரிதா போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்வதே அவருக்கு சவாலான காரியம். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திறந்தவெளிக்குச் செல்ல தினம் தினம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். 7 வருடங்களுக்கு முன்பு, அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிள் வீட்டுக்கு வெளியே காட்சிப்பொருளாக நிற்கிறது.

பழுதடைந்த சைக்கிள்
பழுதடைந்த சைக்கிள்

டயர் தேய்ந்தும், செயின் இல்லாமலும் அந்த சைக்கிள் முழுமையாகச் சேதமடைந்துவிட்டது. சைக்கிளின் டயரை மாற்றக்கூட முடியாத நிலை சரிதாவுக்கு.

சரிதாவின் கணவர் ரவி தினமும் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். தற்போது கொரோனா ஊரடங்கு, ரவியைப் பல நாள்கள் வீட்டிலேயே முடக்கிப்போட்டுவிட்டது. பல வருட சோதனைகளை எல்லாம் சமாளித்து குடும்பத்தை ஓட்டிய சரிதாவுக்கு, கொரோனா ஊரடங்கு நாள்கள் சமாளிக்க முடியாத சவாலாகி இருக்கிறது. பத்தாம் வகுப்புப் படிக்கும் மகள், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகன் என இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே தினம் தினம் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரிதாவிடம் பேசினோம். "சின்ன வயசுலேயே போலியோ என்னை முடக்கிப்போட்டுருச்சு. கால் ரெண்டும், இடது கையும் சரியா இயங்காது. வலது கைதான் எனக்கு எல்லாமும். எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். கணவர் ரவியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும், நாம எல்லாம் வாழ்ந்து என்ன பண்ணப்போறோம்னுதான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். அவரை காதல் கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்தான் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிச்சு.

பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணுனு ரெண்டு புள்ளைங்க. கணவர் காலையில கூலி வேலைக்குப் போயிட்டு சாப்பாட்டுக்குக் காய்கறி வாங்கிக்கிட்டு வந்தாதான் வீட்டுல அடுப்பே எரியும். எனக்கு மாசம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். அவருக்கு வேலையில்லாத நாள்கள்ல என்னோட உதவித் தொகையை வெச்சுதான் குடும்பத்தை ஓட்டுவேன். அதுலயும் ஒரு சில மாசம் ரொம்ப திண்டாட்டமா போயிடும்.

மாற்றுத்திறனாளி சரிதா
மாற்றுத்திறனாளி சரிதா

100% மாற்றுத்திறனாளியான எனக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்னு சிலர் சொன்னாங்க. அரசு அலுவலகத்துல போய் கேட்டுப் பார்த்தேன். 'இப்போ கிடைக்கும் 1,000 ரூபாயை ரத்து செய்யணும். அப்படி செஞ்சா, ஆறு மாசத்துக்கு அப்புறம் ஒவ்வொரு மாசமும் 1,500 கிடைக்கும்'னு சொன்னாங்க.

கொரோனா ஊரடங்கால கணவருக்கும் இப்போ வேலை இல்லாததால, உதவித்தொகை பணம் ஆயிரத்தை வெச்சுதான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன். அதுவும் இல்லையினா குடும்பத்தோட பட்டினிதான் கெடக்கணும். அதனால 1,500 ரூபாய் உதவித்தொகைக்கு இப்போ எழுதிக் கொடுக்கலை.

நாங்க காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டதால கணவர் வீட்டுலயும் எங்க வீட்டுலயும் யாரும் எங்களுக்கு ஆதரவு கிடையாது. உதவி ஏதும் செய்ய மாட்டாங்க. மொதல்ல அவர்தான் வந்து காதலைச் சொன்னாரு. 'உன்னை விரும்புறேன், நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா..?'னு கேட்டாரு. எனக்கு ரொம்ப பயமாகப் போச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றுத்திறனாளியான நம்மை யாராச்சும் விரும்புவாங்களானு, எனக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை. 'வேற யாராவது ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க'னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனாலும், அவர் என்னை விடல. 'நீ இல்லையினா செத்துருவேன்'னு சொன்னாரு. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், நம்மள விட்டுட்டுப் போயிடுவாரோனு ஒரு பயமும் இருந்துச்சு.

15 வருஷம் ஆச்சு... கூலி வேலை செஞ்சு இன்னைக்கு வரை என்னையும் பிள்ளைகளையும் கண்ணுக்குள்ள வெச்சு நல்லா பார்த்துக்கிறாரு. நான் இந்த ஒத்தக் கைய வெச்சுக்கிட்டு குடும்பத்துக்கு சாப்பாடு செஞ்சு கொடுத்துடுவேன். நானும் ஏதாச்சும் அவருக்கு ஒத்தாசையா உதவணும்னு தோணும். பெட்டிக்கடை வெச்சு பாப்போமானுலாம் நெனப்பு வரும். காசுக்கு வழியில்லையே.

மாற்றுத்திறனாளி சரிதா
மாற்றுத்திறனாளி சரிதா

பழுதடைஞ்சு போயிருக்கிற என்னோட மூணு சக்கர சைக்கிள்ல செயின் இல்ல. டயர் இத்துப்போச்சு. வீட்டுல கழிப்பறை இல்லாததால, சைக்கிள்ல என்னைய ஏத்தி வெச்சு, பிள்ளைங்கதான் தெனமும் திறந்த வெளிக்கு என்னை தள்ளிக்கிட்டுப் போவாங்க. பிள்ளைகளுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாதுங்கிறதால, ரெண்டு நாளைக்கு ஒரு தடவை கூட்டிக்கிட்டு போனா போதும்னு சொல்லிடுவேன்.

நானும் எப்படியாவது சைக்கிளுக்கு எழுதிக்கொடுத்து மாத்திப்புடலாம்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு வரைக்கும் முடியலை. ஏன்னா, அதுக்கு கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போகணும். முன்னாடி மாதிரி இப்ப எல்லாம் ரொம்ப தூரம் என்னால போக முடியல.

என் வாழ்க்கை கிடக்குது. பிள்ளைகளையாவது நல்லபடியா படிக்கவெச்சு ஆளாக்கிடணும்ங்கிற வைராக்கியத்தோட வாழ்ந்துட்டிருக்கேன்!"

ஒற்றைக் கையால் பிள்ளைகளை அணைத்தபடி சொல்கிறார் சரிதா.

Note:

சரிதாவுக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை சரிதாவுக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism